/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க.,வை உறவாடி கெடுக்கிறதோ காங்.,
/
தி.மு.க.,வை உறவாடி கெடுக்கிறதோ காங்.,
PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தில், வண்டு முருகன் என்ற அரசியல்வாதியாக வடிவேலு நடித்திருப்பார். ஒருநாள் அவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வரும். போனில் பேசியவன் எடக்கு மடக்காக பேசுவான்.
அது கண்டு பொறுக்காத வண்டு முருகனின் அல்லக்கைகள் அவரிடம் இருந்து போனை பிடுங்கி,'உனக்கு தில்லு இருந்தா, எங்க அண்ணனை தொட்டு பார், நேருக்கு நேராய் வா' என்று தெனாவெட்டாய் பேசியதோடு வடிவேலுவின் முகவரியையும் அட்சரம் பிசகாமல் கொடுத்து விடுவர்.
அவ்வளவு தான்... போனில் பேசிய ரவுடிகள் நேரில் பறந்து வந்து வடிவேலுவை பின்னி எடுப்பர். இந்த காமெடி இப்போது நினைவுக்கு வர காரணம், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, ஆர்.எஸ். மங்கலத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது கூறிய வார்த்தைகள் தான்.
'தமிழக முதல்வர் ஸ்டாலினை கைது செய்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்ததால் தான் அவரை கைது செய்யாமல் பா.ஜ., விட்டு வைத்துள்ளது' என்று திருவாய் மலர்ந்துள்ளார். மேலும், 'அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற முதல்வர்களை கைது செய்தது போல ஸ்டாலினையும் இவர்களால் கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவரை கைது செய்து பார்க்கட்டும்' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழக முதல்வரின் கட்சிக்காரர்களே அடங்கி இருக்கும் நிலையில், இந்த கூட்டணி காங்கிரஸ் இவ்வாறு துள்ளி குதிப்பது ஐயத்தை எழுப்புகிறது.
தமிழகத்தில் சொந்த காலில் நிற்க முடியாத தங்கள் நிலையாலும், தி.மு.க.,வையே சார்ந்திருப்பதாலும் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், ஒருவித விரக்தியில் இப்படி, 'கோர்த்து விடுகிறதோ' என்கிற சந்தேகமும் வருகிறது. கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போல ஸ்டாலினும் கைதாக வேண்டும் என்ற குரூர ஆசை காங்கிரசுக்கு உள்ளதோ என்றும் தோன்றுகிறது. இதில், உறவாடி கெடுக்கும் சகுனித்தனமும் தெரிகிறது.
மேலோட்டமாக பார்த்தால், கூட்டணி தலைமைக்கு சாமரம் வீசுவது போல தெரிந்தாலும், ராமசாமியின் வார்த்தைகளில், 'உள்குத்து' உள்ளது என்பது உண்மை!
சுய சிந்தனை இருக்கு தானே நமக்கு?
சதீஷ்
குமார், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தர்மபுரியில்
நடந்த, தி.மு.க., தேர்தல் பரப்புரையில், ஜாதி வாரி கணக்கு எடுப்புக்கு
எதிரான கட்சி பா.ஜ., என்றும், பா.ம.க., எதற்காக பா.ஜ.,வுடன் கூட்டணி
வைத்துள்ளது என்றும், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சமூக நீதிக்கு
எதிரானது பா.ஜ., எனக் கூறும் ஸ்டாலினுக்கு, 60 ஆண்டு காலம் ஆட்சியில்
இருந்த காங்கிரஸ், ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கோ, மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கோ சம்மதம் தெரிவிக்கவில்லை
என்பது தெரியாதா?
மண்டல் கமிஷனை அமல்படுத்திய, வி.பி.சிங்குக்கு,
சிலை வைக்கப் போவதாகக் கிளம்பிய ஸ்டாலின், தற்போது எதற்காக காங்கிரசுடன்
கூட்டணி வைத்துள்ளார்?
உண்மையை சொல்லப் போனால், காங்கிரசும்,
திராவிட கட்சிகளும் சமூக நீதிக்கு எதிரான கட்சிகள். தேர்தல் வருவதால்,
ஓட்டுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி பேசுகின்றன.
'ஜாதிவாரி கணக்கெடுப்பை, மத்திய அரசு தான் நடத்த வேண்டும்' என்று, மக்களுக்கு புதிதாக காது குத்துகிறார் ஸ்டாலின்.
மகாராஷ்டிராவில்,
மராத்தா இட ஒதுக்கீட்டை, மாநில அரசே செய்து முடித்துள்ளது. பீஹாரிலும்,
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
சமீபத்தில், 'ஜாதிவாரி கணக்கு எடுப்பு நடத்த, மாநில அரசுகளுக்கு அதிகாரம்
உள்ளது; ஆனால், முறையான தரவுகளை வைத்து கணக்கு எடுப்பு
நடத்திக்கொடுக்கலாம்' என்று சொல்லி இருக்கிறது.
இதை பற்றி என்ன சொல்வார் ஸ்டாலின்?
ஜாதி
ஒரு பிரச்னை என்றால், மக்களின் வறுமை கோட்டின் அளவை வைத்து, குறைவான மாத
ஊதியம் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள், அரசு ஊழியர் இல்லாத
குடும்பம், நிலையான சொத்து இல்லாதவர், முதல் பட்டதாரி, அரிசி ரேஷன் கார்டு
ஆகியவற்றை நிர்ணயத்து, அதன் அடிப்படையில் சமூக நீதி கணக்கெடுப்பு செய்து,
அதன்படி இடஒதுக்கீடு கொடுக்கலாமே?
சுய சிந்தனை, சுய அறிவு, சமூக அக்கறை கொண்ட மக்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடலாமா?
வரலாறு தெரியாமல் பேசும் கார்கே!
வெ.க.சந்திரசேகரன்,
வெள்ளக்கிணறு, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த 1974ல், அன்றைய பாரத பிரதமர் இந்திரா மற்றும் அப்போதைய தமிழக
முதல்வர் கருணாநிதி இருவரும் இணைந்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்த்து கொடுத்ததன் பின்னணியை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன்
அம்பலப்படுத்தி உள்ளார்.
இது, தேர்தல் காலத்தில் காங்கிரசுக்கு
கடும் தலைவலியை உருவாக்கி விட்டது. இதில், மறுத்து கூறுவதற்கு ஏதுமில்லாத
நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வங்கதேசத்துக்கு இந்திய
பகுதிகளை ஒப்படைத்தது பற்றி குற்றம் சாட்டியுள்ளார். இது, ஆப்பிளையும்,
தக்காளியையும் ஒப்பிட்டு பார்ப்பது போல் உள்ளது.
இந்தியா -
வங்கதேசம் இடையே எல்லையோர கிராமங்களின் எல்லை மறுசீரமைப்பு என்பது, இரு
தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தாலும், இரண்டு நாட்டு அரசியல் தலைமைகளுக்கு
இடையே நல்ல ஒத்துழைப்பு இருந்ததாலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது.
ஆனால்,
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் அப்படி இல்லை. கச்சத்தீவு
முழுமையாக இலங்கைக்கு சொந்தமானது என்று முடிவு செய்து, அதற்கான ஆவணங்கள்
கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்த பின்பே இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்
அதிகரித்தது.
கச்சத்தீவு தொடர்பான இந்திய - இலங்கை ஒப்பந்தங்களை
மதிக்காதது மட்டு மல்லாமல், ஆழ்கடல் மீன் பிடிப்பு மற்றும் அது தொடர்பான
எல்லை பிரச்சனையில் சர்வதேச நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல், இலங்கை
கடற்படை கொன்று அழித்த மீனவர்களின் வாழ்வுக்கு யார் பொறுப்பேற்பது. அன்றைய
பிரதமர் இந்திராவா அல்லது முதல்வர் கருணாநிதியா அல்லது இதுபோன்று
பொறுப்பில்லாமல் ஒப்பிட்டு பேசும் மல்லிகார்ஜுன கார்கேவா?
கச்சத்தீவு
தொடர்பாக பிரதமர் வரை பேசத் துவங்கி இருப்பது, வரவிருக்கும் லோக்சபா
தேர்தலில் அரசியல் கணக்குகளை நிச்சயம் மாற்றி அமைக்கும். இந்த அச்சத்தால்
தான், என்ன கூறுகிறோம் என்று தெரியாமல் மல்லிகார்ஜுன கார்கே ஏதேதோ சப்பைக்
கட்டுகளை வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
நாளை முள்ளிவாய்க்கால் படுகொலைகளை பற்றி கேள்விகள் வரும்போது, இவரது பதில் இவ்வாறு தான் இருக்குமா. தமிழக மக்கள் யோசிக்க வேண்டும்.

