PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட எஸ்.பி.,க்கு கடிதம் எழுதியும், போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரித்து கொலை செய்யப்பட்டது, ஒரு சாதாரண நிகழ்வே அல்ல. மாநிலத்தை ஆள்வோரின் தோழமை கட்சி தலைவருக்கே இந்த கதி என்றால், சாமானியரின் நிலைமை என்ன என்ற அச்ச உணர்வு, மக்கள் மனதில் எழுந்துள்ளது.
அரசியல் அதிகாரத்தில் ஊடுருவியுள்ள சமூக விரோதிகள், போதை மருந்து, சாராய வியாபாரிகள், லஞ்ச, லாவண்ய ஊழல் பேர்வழிகளின் அதிகார துஷ்பிரயோகமானது, காவல் துறையிலும் ஊடுருவி, அதன் கைகளை கட்டி போடுவதையே, இத்தகைய கொடூர செயல்கள் படம் பிடித்து காட்டுகின்றன.
நாட்டை சீரழிக்கும், போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போன்றோரிடம் காட்டும் மென்மையான போக்கும், அதற்கு நேர் மாறாக, ஆட்சியாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை விமர்சனம் செய்த யு டியூபரான சவுக்கு சங்கர் போன்றோரை, அவதூறு மற்றும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்வதும், இது ஜனநாயக நாடா என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பிஉள்ளது.
ஒழுக்கம், கண்ணியம் போன்றவற்றை துடைத்தெறிந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு, நாட்டில் உள்ள நல்லோர் கூற விரும்புவதெல்லாம் இதுதான்... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!
நியாயம், தர்மம், நேர்மை போன்ற நற்பண்புகளுக்கு மதிப்பும், பாதுகாப்பும் இல்லை எனும் அவநம்பிக்கை, நல்லவர்கள் மனதில் எழுமானால், போராட்டம், புரட்சி வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது காவல் துறை உள்பட அனைத்து அரசு அதிகார பீடங்களும், துறைகளும் திருத்தப்படும். கருப்பு ஆடுகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
மாநிலம் முழுதும் இதே நிலை தான்!
எஸ்.ஏ.கேபிள்
ராஜா, செஞ்சியில் இருந்து அனுப்பிய, 'இ --- மெயில்' கடிதம்: கொங்கு
மண்டலத்தில் கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மட்டும்,
பல்வேறு துறை அதிகாரிகளுக்கு, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை கையூட்டு
வழங்கப்படுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இவரின்
கூற்று சரியானயூகத்தில் இருந்தாலும், நிர்வாகத் தவறுகள், கொங்குமண்டலத்தில்
மட்டுமே நடப்பது போன்ற மாயையை உண்டாக்குகிறது. உண்மையில் தெருவுக்கு தெரு,
மூலைக்கு மூலை முறைகேடுகளும், நிர்வாக அத்துமீறல்களும், தி.மு.க.,
ஆட்சியில், பயமின்றி அரங்கேறி வருகின்றன என்பது தான் நிலவரம்.
இதை தி.மு.க.,வின் குறுநில மன்னர்களான அந்தந்த பகுதி அமைச்சர்கள் தலைமை ஏற்று நடத்துகின்றனர் என்பது, வேதனையிலும் வேதனை.
போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள மதுக்கடைகளே, 24 மணி நேரமும், சரக்கு
சப்ளையில் கொடிகட்டி பறக்கின்றன. இதை அதிகாரிகள் பெயரளவிற்கு கூட திரும்பி
பார்க்காமல் சென்று வருகின்றனர் என்பதை, 'குடி'மகன்கள் நன்கு அறிவர்.
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் மணல் கொள்ளை மாபியாக்களுக்கு
ஒட்டுமொத்த சமுதாயமே பயந்து கிடக்கிறது. ஏனெனில் அதை திறம்பட ஏற்றுச்
செய்வது, ஆளுங் கட்சியின் அரசியல் புள்ளிகள்தான் என்பதை தெரியாதவர்கள்
இல்லை.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 20 ரூபாய்
வரை, மேஜையில் அடித்து தட்டி கேட்கும் அளவிற்கு, ஊழியர்கள் தங்கள் கொள்ளை
திறமையை, தி.மு.க.,வின் முழு ஆசியுடன் வளர்த்து வருகின்றனர்
மீட்டர், கந்து, கடப்பாரை வட்டி என்று வட்டி மேல் வட்டி வசூலிக்கும்
கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள், மிகவும் சுதந்திரமாக, ஆளும் கட்சிக்
கொடியுடன் நடமாடி வருகின்றனர். இவர்களை தட்டிக் கேட்க அச்சப்பட்டு, ஒதுங்கி
செல்வது தான் இன்றைய சமுதாய வாழ்வியல் முறையாக உள்ளது.
ரேஷன்
அரிசி கொள்ளை, மிகவும் துணிவாகவே அரங்கேறுகிறது. தட்டிக் கேட்கும் ஒரு
சிலரையும், தி.மு.க., அமைச்சர்கள் பாணியில், 'ஏய், ஓசி அரிசி... ஒதுங்கி
போ' என கிண்டல் செய்து, அடிக்காத குறையாக விரட்டுகின்றனர், ரேஷன் கடையைச்
சுற்றி, பாதுகாப்புக்கு நிற்கும் அரிசி கடத்தல் அடியாட்கள்
புறம்போக்கு நிலத்தில், ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகளை, ஆளுங்கட்சி புள்ளிகளின்
தயவால், ரவுடிகள் அரங்கேற்றி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி,
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயலும் அதிகாரிகளுக்கு, பணியிட மாற்றமும்,
மிரட்டல்களும் வருவது, மிகவும் சாதாரணமாகி உள்ளது
வியாபார
நிறுவனங்களிலும், உணவகங்களிலும், ஆளுங்கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கான
நன்கொடை ரசீதை, மேஜை மீது துாக்கிப் போட்டு வசூல் செய்யும் அளவு, ரவுடியிச
சுதந்திரம் தலைவிரித்து ஆடுவதால், வியாபாரிகள் பிழைப்பு நடத்தவே, அஞ்சி
நடுங்குகின்றனர்.
இப்படியாக தமிழகத்தில் அடுத்து என்ன நடக்குமோ என அப்பாவி மக்கள், வயிற்றில் நெருப்பை கட்டியபடி உலவுகின்றனர்.
அன்புமணி ஏதோ, கொங்கு மண்டலத்தில் மட்டும் தவறுகள் நடப்பதை போன்று அறிக்கை விடுத்துள்ளது சிரிப்பை தான் வரவழைக்கிறது.
பிராச்சி நிகாமுக்கு தலை வணங்குவோம்!
சுருதி
ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: உ.பி.,யில், பிராச்சி நிகாம் என்ற மாணவி, 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில்,98.50 சதவீத மதிப்பெண் வாங்கி, மாநிலத்தில் முதலிடம்
பிடித்தார்; அவரது புகைப்படம், ஊடகங்களில் வெளியானது.
மாணவியின்
முகத்தில் ரோமங்கள் அதிகம் வளர்ந்துள்ளன என்பதற்காக, அவரது தோற்றம்
குறித்து, சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்துள்ளனர்.
'அந்த
கிண்டல்கள் என்னை பெரிதாக பாதிக்க வில்லை. மதிப்பெண்கள் தான் முக்கியமே
தவிர, என் தோற்றம் அல்ல. கிண்டல் செய்பவர்கள் அதை தொடரலாம். அதற்காக நான்
கவலைப்பட மாட்டேன். தோற்றத்திற்காக சாணக்கியரே கிண்டல் செய்யப்பட்டுள்ளார்.
அதெல்லாம் அவரை பாதிக்கவில்லை' என்று, கம்பீரமாக பதிலளித்துள்ளார் மாணவி
பிராச்சி நிகாம்.
'பாதகம் செய்பவரைக் கண்டால், நாம் பயங்கொள்ளலாகாது
பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா; அவர் முகத்தில் உமிழ்ந்து விடு
பாப்பா' என, பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, கிண்டல் செய்தவர்களின் முகத்தில்
உமிழ்வது போல், அமைந்துள்ளது அவரது பதில்.
மற்றவர்களின் கிண்டலும்,
கேலிக்கும் பயந்து துவண்டு விடாமல், உயிரை மாய்த்துக் கொள்ளாமல், தெளிவான
சிந்தனையுடனும், துணிச்சலுடனும் பதிலளித்துள்ள மாணவியின் செயல், மிகவும்
பாராட்டுதலுக்கு உரியது. அவரது செயல், மற்றவர்களுக்கான பாடம் என்றால் அது
மிகையல்ல!