PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூருவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்தி மொழியை கற்பிக்க தமிழகத்தில் ஹிந்தி பிரசார சபா இருப்பதுபோல், தமிழ் கற்றுக்கொடுக்க வட மாநிலங்களில் தமிழ் பிரசார சபா ஏன் ஏற்படுத்தவில்லை' என்று கேட்கிறார் முதல்வர். ஏதோ பா.ஜ., ஆட்சியில், பிரதமர் மோடி ஹிந்தி பிரசார சபாவை ஏற்படுத்தியது போல்!
காந்திஜியால் 1918ல் தட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா துவங்கப்பட்டது என்பது முதல்வருக்கு தெரியாதா?
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில், 10 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்த தி.மு.க., வட மாநிலங்களில் ஏன் தமிழ் பிரசார சபாக்களை துவங்கவில்லை? அதிகாரத்தில் இருந்த போது, தமிழ் மொழி இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா?
தமிழ் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர் ஆளும், கேரளா, கர்நாடாக, தெலுங்கானா, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், மே.வங்கம்போன்ற மாநிலங்களில் தமிழ் பிரசாரசபாவை ஏற்படுத்த வேண்டியது தானே... மத்திய அரசு, தமிழக அரசின் கைகளை கட்டிப்போட்டு விட்டதா என்ன?
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் எல்லாம் பிரமாண்டமான கோவில்களை எழுப்பி, அங்கு மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் கற்பிக்கின்றனர். அதுவல்லவோ உண்மையான தமிழ் தொண்டு!
'தேஜஸ், வந்தே பாரத் என்று எல்லா ரயில்களும் ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் இருக்கின்றன' என்று கூறுகிறார் ஸ்டாலின். இந்த ரயில்கள் தமிழகத்தில் மட்டும் இயங்கவில்லை முதல்வரே... இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஓடுகின்றன!
ரயில்களில் இருக்கும் ஹிந்தி எழுதுக்கள் கண்களுக்கு தெரியும் முதல்வருக்கு, தமிழகஅரசு நடத்தும் மெட்ரிக் பள்ளிகளில், தமிழில் பேசினால் அபராதம் விதிப்பது மட்டும் தெரியாமல் போனது எப்படி?
எதிர்க்கட்சியாக இருந்த போது, அவியல் அரசியல் செய்த ஸ்டாலின், ஆளுங்கட்சியாக இருக்கும் போதும், அதே அவியலை செய்ய முனைகிறார்.
ஆனால், கருகல் நாற்றம் தாங்காமல் மக்கள் மூக்கை மூடுகின்றனர் என்பதை எப்போதுதான் உணர்வாரோ?
குரங்கு கை பூமாலையானது!
ப.ராஜேந்திரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின்
தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலர் தர்ம செல்வன், 'தர்மபுரி மாவட்டத்தில் நான்
சொல்வதைக் கேட்காத அதிகாரிகள் இருக்க முடியாது.
'கலெக்டர்,
எஸ்.பி.,என எவராக இருந்தாலும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால், அவர்கள்
இங்கு இருக்க மாட்டார்கள். யாரும் என்னை மீறி செயல்பட்டால், அவர்கள் கதை
முடிந்து விடும்' என்று பேசியுள்ளார்.
சாதாரண ஒரு மாவட்ட செயலர்
கலெக்டரையே மிரட்டுகிறார் என்றால், அமைச்சர்களின் அதிகாரம் என்னவெல்லாம்
பேசும்? கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல்கள் இவர்களின் கண் அசைவின்றி
நடக்கத் தான் முடியுமா?
தி.மு.க., ஆட்சியின் உண்மை நிலை இவ்வாறு
இருக்க, காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் நொந்து என்ன பயன்? ஓட்டு
போட்டு தேர்ந்தெடுத்த பாவத்திற்கு, இவர்கள் செய்யும் அத்தனை அராஜகத்தையும்
மக்கள் மவுனமாக ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும்!
தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல் அடிக்கடி பெருமிதப்படும் முதல்வர், இந்த மாவட்ட செயலர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?
குற்றச்
சம்பவங்கள் நடக்கும்போது, அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனமாக கடந்து
செல்வதும், அமைச்சர்களை வைத்து, பாதிப்புக்குள்ளான வர்கள் மீதே பழியைப்
போடுவதற்கும் தான், 'ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப் போறாரு' என்று
பாடிக் கொண்டே ஊர்தோறும் ஓட்டுக் கேட்டு வலம் வந்தாரா?
மாதந்தோறும்
பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்து விட்டால், அவர்கள் வாழ்வு
மலர்ந்து விடுமா? ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், பிள்ளைகள் என்று யாராவது
ஒருவர் குடி நோயாளியாகி, மனம் நொந்து, ஆட்சியை சபிப்பதை முதல்வர் அறிவாரா?
அதன் விளைவுகள், 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை எப்படி
மறந்து போனார்? ஏற்கனவே அனைத்து தொழிற்சங்கங்களின் வெறுப்பை சம்பாதித்து
கொண்டு இருக்கும் நிலையில், நேற்று துவங்கிய த.வெ.க.,வைக் கண்டு கூட பயப்பட
வேண்டிய நிலையில் தானே தி.மு.க., உள்ளது!
'நேற்று துவங்கப்பட்ட
கட்சிகள் கூட, தி.மு.க.,வை குறை கூறித்தான் அரசியல் செய்கின்றன. அதைப்
பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என் கவலை எல்லாம் நாட்டைப் பற்றியும்,
தமிழகத்தை பற்றியும் தான்.
'மாநில உரிமையை நாம் பெற வேண்டும்
என்பதே என் கவலையாக உள்ளது' என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வருக்கு,
தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதும்,
போதைப் பொருட்கள் கடத்துவதும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் கவலை
தரவில்லையா?
அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காதவர், எந்த
நாட்டை காப்பாற்ற கவலைப்படுகிறார்? எந்த மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட
துடிக்கிறார்?
கழக உடன்பிறப்புகளால் தர்மபுரி மட்டுமல்ல, தமிழகமே
இன்று, குரங்கு கை பூ மாலை போன்றுதான் இருக்கிறது என்பதை, எப்போது அறிவார்
முதல்வர்?
வரி இழப்பை ஈடுகட்ட ஊதிய உயர்வு!
பா.பாலசுப்ரமணியன்,
புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு, 7
லட்சத்திலிருந்து, 12 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது அரசு மற்றும் ஐ.டி.,
ஊழியர்களுக்கு மிகவும் ஆதாயமானது. அதேசமயம், ஏழைகளுக்கு இதனால் லாபமோ,
நஷ்டமோ இல்லை. காரணம், ஆண்டுக்கு, 7 லட்ச ரூபாய்க்கு குறைவாக
சம்பாதிப்பவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
நம் நாட்டில் பல
தரப்பட்ட மக்களுக்கும், அவர்களின் கல்வி மற்றும் அனுபவத்திற்கும் ஏற்ப,
ஏதாவது ஒரு வேலை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், சம்பளம் மட்டும்
விலைவாசிக்கு ஏற்றபடி இல்லை. தனியார் துறையில் புதிதாக வேலைக்கு ஆட்களை
எடுக்கும்போது, மாதம் 20,000 - 30,000 ரூபாய்க்குள் சம்பளம்
நிர்ணயிக்கின்றனர்.
எனவே, அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர உதவும்
வகையில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்து அதை, மாதம் 45,000
ரூபாய் என்று மத்திய - மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும்.
இதன்
வாயிலாக ஏழைகளின் பணமும், நடுத்தர வர்க்கத்தினரின் பணத்திற்கு சமமாக
சந்தையில் பாயும். இதன் விளைவாக மத்திய அரசுக்கு, ஜி.எஸ்.டி., வருவாய்
இரட்டிப்பாகி, அது வருமான வரி வருவாய் இழப்பை ஈடுகட்டுமே!
மத்திய - மாநில அரசுகள் பரிசீலனை செய்யுமா?