/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கர்வம் பிடித்தவருக்கு கிடைத்த அடி இது!
/
கர்வம் பிடித்தவருக்கு கிடைத்த அடி இது!
PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மொத்த தொகுதிகளையும் அள்ளுவோம் என சபதம் இட்டு, செய்து காட்டியது தி.மு.க.,
'மொத்தம் 543ல், 400ஐ ஜெயிப்போம்' என்று சபதம் போட்டு, அதற்கான முறையான வழியைத் தேடாமல், 'நான் மனிதப் பிறவியே இல்லை' என்று ஒருவர் மமதை காட்டியது, பா.ஜ.,வுக்கு பாடம் கற்பித்து விட்டது.
ராமர் கோவில் கட்டிவிட்ட பெருமிதத்தில், தன்னையும் ஒரு அவதாரம் ரேஞ்சுக்கு மோடி பெருமிதப்படுத்திக் கொண்டதால், ராமரே பாடம் கற்பித்து விட்டார் போலிருக்கிறது.
பிள்ளையார் கோவில் சிதறு தேங்காய் போல சிதறுண்டு கிடந்த, 'இண்டியா' கூட்டணி, அபரிமிதமான ஓட்டுகள் பெற்று, பா.ஜ.,வுக்கு சவாலாக லோக்சபாவில் அமர்ந்து விட்டது.
'நான்' என்று மார் தட்டுபவனையும் நாள் குறித்துக் கூட்டிச் செல்லும் அந்த பூஜ்யத்துக்குள்ளே, ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கும் இறைவன் போட்ட கணக்கு இது.
வாழ்க்கை என்னும் சக்கரம், மேலும் கீழும் உருளும். சில ஆண்டுகளுக்கு முன், மோடியை சந்திக்க வந்து, அது முடியாமல் திரும்பிய அதே சந்திரபாபு நாயுடு, இன்று தன் வரவுக்காக மோடியைக் காக்க வைத்திருப்பது, காலத்தின் விளையாட்டு.
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.
ஒரு சமயம், நாரதருக்கு தன்னை விட உயர்ந்த நாராயண பக்தர் யாருமில்லை என்ற கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த இறைவன், அவரது கர்வத்தை அடக்க எண்ணி, அவர் கையில் எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து, எண்ணெய் சிந்தாமல் உலகைச் சுற்றி வரும்படிச் சொன்னார். நாரதரும் அவ்வாறே சுற்றி முடித்து வந்து சேர்ந்தார்.
'நாரதரே, இன்று எத்தனை முறை நாராயண நாமம் சொன்னீர்?' என்று இறைவன் கேட்டார்.
'கவனமெல்லாம் எண்ணெய் கிண்ணத்திலேயே இருந்ததால், ஒருமுறை கூடச் சொல்ல முடியவில்லை' என்றார் நாரதர். அப்போது நாராயணன், நாரதருக்கு ஒரு ஏழை விவசாயி பற்றி கூறினார்.
'அதிகாலை முதல் மாலை வரை, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் அந்த விவசாயி, காலை எழும் போதும், இரவு உறங்கும் முன்னும் 'நாராயணா...' என்று சொல்ல மறப்பதில்லை. எனவே, உம்மைக் காட்டிலும் அவரே உயர்ந்தவர்' என்றார் நாராயணன்.
எனவே, 'நமக்கும் மேலே உள்ளவர் கோடி' என்ற நினைப்போடு, அடக்கமாக இருப்பதே உயர்வு.
தான் அவதாரம் என்று எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளாத ஸ்ரீராமனின் மானுடம் வென்றது என்கிறது கம்பனின் இதிகாசம்; அரசியல் ஆதாயத்திற்காகத் தன்னை அசாதாரணமானவனாகக் காட்டிக் கொண்ட மோடிக்கு கிடைத்த பாடம், கர்வம் பிடித்து அலைவோருக்கு ஒரு பாடம்!
பீனிக்ஸ் பறவையாக அ.தி.மு.க., எழும்!
ரா.ச.பொன்னுசாமி,
விளாத்திகுளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தமிழக வாக்காளர்கள் மிகச் சிறந்தவர்கள். இடம், பொருள்
அறிந்து ஓட்டு போடுவர். லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும் சட்டசபை
தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஓட்டளிப்பர்.
கடந்த 1977ம் ஆண்டில்
நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடித்து, எம்.ஜி.ஆர்., தலைமையில்
அ.தி.மு.க., ஆட்சி அமைய தமிழக மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், 1980ல் நடந்த
லோக்சபா தேர்தலில்அ.தி.மு.க.,வை தோற்கடித்து தி.மு.க., - காங்., தலைமையிலான
கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்தனர். அதாவது, மத்தியில் இந்திரா பிரதமராக
ஆதரவு அளித்தனர்.
இனி, அ.தி.மு.க., அவ்வளவுதான் என்றெண்ணி அந்த
கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி, தி.மு.க.,வில் சங்கமித்தனர்.
கருணாநிதியும், பிரதமர் இந்திராவுக்கு நெருக்கடி தந்து அடுத்த சில
மாதங்களில் எம்.ஜி.ஆர்., அரசை கலைக்க வைத்தார். இதனால், 1980ல் தமிழகத்தில்
சட்டசபை தேர்தல் நடந்தது.
லோக்சபா தேர்தல் போல, இதிலும் சுலபமாக
ஜெயித்து விடலாம் என கருதி, தி.மு.க., - காங்., கூட்டணி வெற்றி மிதப்பில்
களமிறங்கியது. ஆனால், மக்கள் அ.தி.மு.க.,வை மாபெரும் வெற்றி பெற செய்து,
எம்.ஜி.ஆரையே மீண்டும் முதல்வராக்கினர். கருணாநிதியின் கணக்கு தப்பாகி
போனது. அதன்பின், எம்.ஜி.ஆர்., மறையும் வரை, அவரை கருணாநிதியால் வீழ்த்தவே
முடியவில்லை.
அதுபோலவே, 1991ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஜெ.,
தலைமையிலான அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அடுத்து,
1996 தேர்தலில் படுதோல்வியடைந்து, நான்கே தொகுதிகளில் மட்டும் தான்
ஜெயித்தது. ஜெ.,வே தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை
சந்தித்தார்.
அப்போதும் அப்படித்தான், 'அ.தி.மு.க.,வுக்கு இனி
எதிர்காலம் இல்லை' என்று பலரும் பேசினர். அக்கட்சியின் பல தலைவர்கள்
வெளியேறி, பல கட்சிகளில் சேர்ந்தனர். ஆயினும், ஜெ., கடுமையாக போராடி,
கட்சியை வழிநடத்தி, 2001ல் மீண்டும் ஆட்சியை பிடித்து, முதல்வரானார்.
அடுத்து, 2006ல் அவர் ஆட்சியை இழந்தாலும், 2011, 2016ல் ஜெயித்து மீண்டும்,
மீண்டும் முதல்வர் ஆனார்.
அதுபோல தான், தற்போதும் லோக்சபா தேர்தல்
தோல்வியால், அ.தி.மு.க.,வின் எதிர்காலம்சூன்யமாகி விட்டது என, பலரும்
ஆரூடம் கணிக்கின்றனர். ஆனால், இந்த தோல்வியில் இருந்தும் பீனிக்ஸ் பறவை
போல் அ.தி.மு.க., மீண்டு எழுந்து வரும் என்பது மட்டும் உறுதி.
பதில் சொல்லுங்கள் நடிகர் விஜய்!
தமிழ்,
தேனியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழகத்தைத்
தொடங்கியுள்ள விஜய் அண்ணனை வரவேற்கிறேன். நான் தங்களின் சினிமா ரசிகன்
மட்டுமல்ல; தங்களின் நேர்மை, உழைப்பு மற்றும் சமூக பங்களிப்புக்காகவும்!
என்னைப்
போன்ற ரசிகர்கள் அனைவரும், எங்கள் தொகுதியின் வேட்பாளராக நீங்கள் இருக்க
வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அது சாத்தியமில்லை. 234 சட்டசபை
தொகுதிகளிலும் நீங்கள் போட்டியிட முடியாது என்பது தெரிகிறது.
அப்படியெனில்,
கட்சியில் உள்ள மற்ற வலுவானவர்களை நிற்க வைப்பீர்கள். அவர்கள்
எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? ஒவ்வொரு முறை உங்கள் படம் வெளியாகும்
நாளிலும், தியேட்டர்களில் முதல் நாள், முதல் காட்சிக்கான 200 ரூபாய்
டிக்கெட்டை, 500 முதல் 1,000 ரூபாய் வரை உயர்த்தி விற்கும் நபர்கள் தான்.
ஊழலை
ஒழிக்கக் கிளம்பி இருக்கும் நீங்கள், உங்கள் கட்சியின் இப்படிப்பட்ட
தொண்டர்களை தான், தேர்தலில் போட்டியிட வைக்கப் போகிறீர்களா? இப்படி
இருந்தால், இளைஞர்களான நாங்கள், எப்படி உங்கள் பின்னால் வர முடியும்?
எப்படி ஓட்டு போட முடியும்? பதில் சொல்லுங்கள்!