/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நாம் தான் இனி கவனத்துடன் கடமையாற்றணும்!
/
நாம் தான் இனி கவனத்துடன் கடமையாற்றணும்!
PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய அரசியலில் நேரு, பவார், முலாயம்சிங், அப்துல்லாக்கள், லல்லு, தேவிலால், சரண்சிங், தாக்கரே ஆகியோரின் வாரிசுகளை, அரசியலில் பார்க்கிறோம்.
தமிழக அளவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி, தங்கபாண்டியன், மாறன், பாலு, வீராசாமி, மகேஷ், துரைமுருகன், பொன்முடி ஆகியோரைப் பார்க்கிறோம்.
இந்த வரிசையில், கே.என்.நேருவும், வைகோவும் சேர்ந்துள்ளனர்.
வாரிசு அரசியலை எதிர்த்துப் பேசும் பா.ஜ.,வுக்கு, 'ஆமாம்... நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்தி வருகிறோம்' என்று பதில் கூற வேண்டிய கட்டாயம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
கட்சியில், கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து, தன்னைப் போன்ற கட்சிக்கு உழைத்த தொண்டர்களுக்கு பதவியோ, அதிகாரமோ கிடைக்கவில்லை என்று கூறி, வைகோ அன்று, தி.மு.க.,விலிருந்து விலகினார். இன்று அவரே, தி.மு.க.,வின் ஜால்ராவாக செயல்படுவதும், தன் வாரிசை முன்னிலைப் படுத்துவதும் வேதனை அளிக்கிறது.
எதிர்த்த கணேசமூர்த்தி, தற்கொலை செய்து உயிரையே துறந்துவிட்டார்.
தி.மு.க.,வோ, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தர முடியாத தொண்டர்களுக்கு, நகராட்சி பணிகளில் ஒப்பந்தம், டாஸ்மாக் கடைகள், அதன் அருகில் தின்பண்ட கடைகள் வைக்க அனுமதி, வண்டிகள் நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிப்பு, தெரு ஓரக் கடைகளில் தினசரி வசூலிப்பு, கடைகளில், தொழிலதிபர்களிடமிருந்து கட்டாய வசூலிப்பு, கட்டப் பஞ்சாயத்து, மணல் கொள்ளை, கோவில்களின், பொதுச் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து கொள்வது போன்ற ஏற்பாடுகள் மூலம், வருமானத்திற்கு வழி செய்து கொடுக்கிறது.
இத்தகைய குடும்ப ஆட்சிகளால், புதியவர்களின் வருகை, அவர்கள் கொண்டு வரக்கூடிய புதிய சிந்தனைகள், மாற்றங்கள் போன்றவை தடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குடும்ப அரசியல், மாநிலங்கள், தேச முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகவும், ஊழலுக்கு ஏதுவாகவும் இருக்கிறது.
இந்த நிலை நம் நாட்டில் மாற வேண்டும், நல்லவர்கள், தேசிய சிந்தனை உள்ளவர்கள், கறை படாதவர்கள், நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை, திறமையான நிர்வாகத்தை அளிக்கக் கூடியவர்களை, அவர்கள் எந்த கட்சியின் சார்பாக நின்றாலும், மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
இந்த தேர்தல் நமக்கு, இந்த கடமையைத் தான் சொல்லித் தருகிறது. வேட்பாளர்களை விட, ஓட்டு போடுபவர்கள் தான் இந்த முறை நேர்மையாகக் கடமையாற்ற வேண்டி உள்ளது. வாரிசு அல்லாத, நேர்மையான நபர்களைத் தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்யவில்லை எனில், நம் நாடு மீண்டும், 50 ஆண்டுக்கு முந்தைய நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.
டமாசா கீதுபா!
எஸ்.ஜான்சன்,
புதுச்சேரியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'பாக்க பாக்க
சிரிப்பு வருது, அடக்க முடியல! நீ பொங்கிப் போட்டு திங்கறதெப்போ எனக்கு
தெரியல!' என, எம்.ஜி.ஆர்., படப் பாட்டு ஒன்று உண்டு.
மாநில மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளும், அந்தப் பாடலை தான் நினைவூட்டுகின்றன.
அந்த சந்தேகத்தை நிவர்த்திக்கும் வகையில், ஒரு சில அம்சங்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டலாம்...
நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், 95 லட்சம் ரூபாய் வேட்பாளர் செலவு செய்ய உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
ஒரு
லோக்சபா தொகுதிக்குள் அடங்கியுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளையும், ஒரு
வேட்பாளர் தன் ரத, கஜ, துரக, பதாதிகளுடன் சேர்த்து, இரண்டு முறை சுற்றி
வந்தாலே அந்த, 95 லட்சம் ரூபாய் காலியாகிவிடும். புரிந்து கொள்ளுங்கள்!
தெருக்களில் ஒட்டப் பட்டிருக்கும் போஸ்டர் களையும், வரையப்பட்டிருக்கும்
கட்சி சின்னங்களையும் அழிக்க வேண்டும் என்று அறிவித்து, அதற்கான பணிகளை
முடுக்கி விட்டிருக்கிறது.
சிலைகளை துணியால் மூடி வைக்க
வேண்டுமாம். வெறுமனே இருந்தால், அவற்றை ஒருவரும் சீந்த போவதில்லை; மூடி
வைத்தால் அது என்ன ஏது என்று பார்க்கும் ஆர்வம் தான் மக்கள் மனதில்
பீறிடும். சரி தானே?
சுவர் விளம்பரங்களை அழிக்கிறீர்கள்;
சுவரொட்டிகளை கிழிக்கிறீர்கள், சரி... அரசியல் கட்சிகள் அன்றாடம்
தொலைக்காட்டி சேனல்களிலும், பத்திரிகைகளிலும், வீடுகள் தோறும் வழங்கும்
பிட் நோட்டீஸ்களிலும் அந்தந்த கட்சி சின்னங்கள் அச்சிட்டவற்றை தானே
வினியோகிக்கின்றன. அவற்றை எப்படி தடுப்பீர்கள்?
ஒவ்வொரு சட்டசபை
தொகுதிக்கும், மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள்,
ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதுவரை நடந்த
எந்த தேர்தலின் போதாவது, இந்த மூன்று அமைப்புக்களும் தேர்தல் நடத்தை
விதிகளை மீறியதற்காக, எந்த அரசியல் கட்சிக்காரரையாவது, எந்த வேட்பாளரையாவது
கண்டு பிடித்து இருக்கிறதா?
தேர்தல் ஆணையங்கள் தேர்தலை
நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென்றால், தேர்தல் நடத்தை
அமலுக்கு வரும் நாள் முதல், முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை நாட்டில் எந்த
ஆட்சியும் இருக்கக் கூடாது. அப்போது தான் ஆணையங்கள் தங்கள் அதிகாரத்தை
முழுவதுமாக காட்டி தேர்தலை நடத்த முடியும்.
அதுவரை,
ஜனாதிபதிஆட்சியை அமலுக்கு கொண்டு வர வேண்டும். இதைத்தான் ஹிந்து மக்கள்
கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்தும் தெரிவித்துள்ளார்.
மத்திய-மாநில அரசுகள் சம்மதிக்குமா? சம்மதிக்காது! அதனால் தான், தேர்தல் ஆணையம் சொல்லும், 'டும்'களைப் பார்த்தால், டமாசா கீது!
கமிஷன் அடிக்கலாம்; அவ்வளவு தான்!
ஆர்.சேஷாத்திரி,
சென்னை யிலிருந்து எழுதுகிறார்: 'தாத்தா வெட்டிய கிணறு, உப்புத் தண்ணியாக
இருந்தாலும் குடி' என்று ஒரு பழமொழி உண்டு. நம் அரசு செய்யும் சில
காரியங்கள், அப்படித்தான் இருக்கின்றன.
கொஞ்சம் கூட பிரயோஜனம் இல்லாத சில சட்டங்களை அமல்படுத்துகின்றனர்.
தெருவில் அனாதையான சிலைகளை துணிகளை கொண்டு மூடி வைக்கின்றனர். இதனால் என்ன லாபம்?
இதை மறைத்தால், அவர்களை மக்கள் மறந்து விடுவரா? அந்த சிலைகள் நிற்கும் கோணத்தை, உருவ உயரத்தை பார்த்தாலே அது யார் என தெரிந்துவிடும்.
காலம் இப்போது மாறிவிட்டது. 'யு டியூப், பேஸ்புக்' ஆகியவற்றில் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படுகிறது. அதை தடுக்க முடியுமா?
சில
நடிகர்கள் சில கட்சியில் இருக்கின்றனர். அவர்கள் நடிக்கும் படத்தை,
'டிவி'யில் ஒளிபரப்பாமல் இருக்க முடியுமா? ரேடியோவில் பாட்டு ஒலிபரப்பினால்
தான் தடுக்க முடியுமா?
சிலை மூடுவதெல்லாம், தேவை இல்லாத வேலை. சிலைகளை மூடுவதற்கு துணிமணிகள் வாங்கிய செலவில், கமிஷன் அடிக்கலாம்; அது மட்டும் தான் லாபம்!

