/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நீதிபதிகளே இப்படி இருந்தால் எப்படி?
/
நீதிபதிகளே இப்படி இருந்தால் எப்படி?
PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எந்தத் துறையில் ஊழல் இருந்தாலும், நீதித்துறையில் ஊழல் நிலவுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்று, ஒரு நீதிபதி தவறு செய்தால், அது உடனடியாக வெளியில் தெரிந்து விடுகிறது. ஆனாலும், கீழமை நீதிமன்றங்கள் முதல், உச்ச நீதிமன்றம் வரை அவ்வப்போது சில நீதிபதிகள் மீது, பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.
காரணம், தவறு செய்யும் நீதிபதிகளுக்கு சில சட்டப் பாதுகாப்பு உள்ளதால், அவர்கள் காப்பாற்றப் படுகின்றனர். அதிகப்பட்சமாக, அவர்களுக்கு கட்டாய ஓய்வு மட்டுமே வழங்கப்படுவதால், துணிச்சலாக சிலர் தவறு செய்கின்றனர்.
அவ்வகையில், மாவட்ட நீதிபதியாக இருந்த குணசேகரன் என்பவர், தன் பணிக்காலத்தில் சட்ட விரோதமாக, தன் மனைவி பெயரில், 25 அசையா சொத்துக்கள், ஒரு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் மற்றும் அவரது வங்கி கணக்கில் மிகப்பெரிய தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிய வரவே, அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, அவர் சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். ஆனால், அவரது வாதங்களை தள்ளுபடி செய்து, 'நீதித்துறை ஊழியர்களை, சாதாரண அரசு ஊழியர்களைப் போல் கருத முடியாது; நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறி, குணசேகரனின் கட்டாய ஓய்வை உறுதி செய்துள்ளது, நீதிமன்றம்.
அவரது மனைவிக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி, அச்சொத்துக்களை முடக்கி, சட்டப்படி அவரது மனைவி மீதும் நடவடிக்கை எடுத்திருக்கலாம் நீதிமன்றம்.
அப்போது தான், தன் மனைவியின் பெயரில் மட்டும் அல்லாமல், குடும்ப உறவுகள் மற்றும் தனது நண்பர்கள் பெயரிலும் இப்படி சொத்துக்கள் வாங்கி குவிப்பது தடுக்கப்படும்.
இருப்பினும், இத்தீர்ப்பு, ஊழல் நீதிபதிகளுக்கு நிச்சயம் பயத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!
இப்போது சொல்லுங்களேன்!
டி.ஈஸ்வரன்,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின் பட்ஜெட்
விளக்க பொதுக்கூட்டம் சமீபத்தில் சென்னை - திருவான்மியூரில் நடைபெற்றது.
இதில்,
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசும்போது, 'அறிவாலயத்தின் ஒவ்வொரு
செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை, தமிழகத்தில் தான் இருப்பேன்' என்றார்.
இதற்கு
முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் ரகுபதி,சேகர்பாபு, மகேஷ்,
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி
போன்றோர், 'அறிவாலயத்தில் உள்ள ஒரு செங்கல்லை கூட அவரால் அசைக்க முடியாது;
வேறு எங்கேயாவது போய் செங்கல் எடுத்துக்கொள்ளட்டும்' என்றும், 'இங்கே
இருக்கும் செங்கல்லை அல்ல; ஒரு புல்லைக் கூட அவரால் பிடுங்க முடியாது'
என்றும் பதிலளித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., -
அ.தி.மு.க.,வை துவக்கிய சமயம், சென்னை - பல்லாவரம் பேருந்து நிலையம்
அருகில், அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது
ஆலந்துார் நகரசபை, தி.மு.க., தலைவர் பாலன், அக்கட்சியில் இருந்து விலகி,
எம்.ஜி.ஆர்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
அவரை
வரவேற்று எம்.ஜி.ஆர்., பேசும்போது,'தி.மு.க., என்ற கோட்டையை வீழ்த்துவது,
அவ்வளவு எளிதான காரியம் அல்ல; ஆனால், அதிலிருந்து ஒவ்வொரு செங்கல்லையும்
மெல்ல உருவி எடுக்கலாம். அதன்வாயிலாக, அக்கோட்டையை பலவீனமடைய செய்யலாம்'
என்றார்.
அதேபோன்று, தி.மு.க.,வில் இருந்து விலகிய
நெடுஞ்செழியன்,ராஜாராம், மாதவன், பா.உ.சண்முகம், பேராசிரியர் அன்பழகனின்
தம்பி அறிவழகன் போன்ற முன்னணி தலைவர்கள் ஒவ்வொருவராக அ.தி.மு.க., வில்
சேரவே, எம்.ஜி.ஆர்., சொன்னது போல், அப்போது தி.மு.க., பலவீனம் அடைந்தது.
அதைப்போல்
தி.மு.க.,வில் துணை சபாநாயகராக இருந்த வி.பி.துரைசாமி, எ.வ.வேலுவின்
நெருங்கிய நண்பராகவும், தி.மு-.க.,வின் விவசாய அணித் தலைவராக இருந்த
கே.ராமலிங்கம் போன்றோர், அக்கட்சியில் இருந்து விலகி, இப்போது பா.ஜ.,வில்
இருக்கின்றனர்.
இதை மேற்கோள் காட்டிதான், 'அறிவாலய செங்கல்லை
ஒவ்வொன்றாக உருவுவேன்' என்றார் அண்ணாமலை. தி.மு.க.,வினருக்கு புரிந்ததா
அவரது, 'செங்கல்' பேச்சின் அர்த்தம்?
இப்போது சொல்லுங்கள்... அறிவாலயத்தின் செங்கல்லை உருவ முடியுமா, முடியாதா என்று!
வீண் பிடிவாதம் நல்லதல்ல!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: கடல் அலை ஓய்ந்தாலும் ஓயும்;அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை ஓயாது
போல் உள்ளது.
ஜெயலலிதா சிறை சென்றபோதும், உடல்நிலை சரி இல்லாத
போதும், தன் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த பன்னீர்செல்வத்தை
முதல்வராக்கினார். அவரும், அதை காப்பாற்றும் விதமாக, அம்மாவின் சொல்லை
தட்டாத பிள்ளையாக, பிடித்து வைத்த பிள்ளையார் போன்று இருந்தார்.
அப்படிப்பட்ட மனிதரிடம் இருந்து, முதல்வர்பதவியை பிடுங்கி பழனிசாமி கையில் கொடுத்தார், சசிகலா.
அதற்கு கைமாறாக,சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கினார், பழனிசாமி.
அத்துடன்
விட்டாரா... கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர்களை அடையாளம் கண்டு, அவர்களை
ஓரங்கட்டி, தன்னை அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத தலைவராக எண்ணி அரசியல்
செய்தார்.
விளைவு... தேர்தல்களில் தொடர் தோல்வி!
தற்போதைய
அரசியல் சூழல், தி.மு.க., விடியல் ஆட்சிக்கு எதிரான அலை உருவாக்கி விட்டதை
உணர்ந்த நீக்கப்பட்ட அ.தி.மு.க., தலைவர்கள் அனைவரும், கட்சியில் இணைய
துடிக்கின்றனர். ஆனால், 'யாரையும் கட்சியில் சேர்க்க மாட்டேன்' என
பிடிவாதம் பிடிக்கிறார், பழனிசாமி.
அவரது பிடிவாதத்தால், 'அடுத்தும் நம் ஆட்சிதான்' என்று குஷியாக உள்ளனர் தி.மு.க.,வினர்!
தி.மு.க.,வை
வீழ்த்த பலமான அணி தேவை; அதை பழனிசாமி உருவாக்குவார் என்று நம்பியிருந்த
ரத்தத்தின் ரத்தங்களோ, நம்பிக்கை குறைந்து, உற்சாகம் இழந்து வருகின்றனர்.
இதை உணராத பழனிசாமி, 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
இது, அ.தி.மு.க.,விற்கு மட்டுமல்ல; அவரது அரசியல் வாழ்வுக்கும், 'எண்ட் கார்டு' போட்டு விடும் என்பதை மறந்து விட வேண்டாம்!