PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

ரெ.ஆத்மநாதன், டாம்பா, புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆகாயத் தாமரை, விரைவாக அதிகமாகப் பரவினாலும், அதை அப்புறப்படுத்துவது, கருவேல மரத்துடன் ஒப்பிடுகையில், ஓரளவுக்கு எளிதானதே!
'சமூகக் காடுகள் வளர்க்கிறோம்' என்ற பெயரில், பொதுக் குளங்கள், ஓடைகள், ஏரிகள் என்று இருந்த இடங்களில் எல்லாம், கருவேல மரங்களை நட்டு, அவற்றைத் துார் வாருவதை, கடந்த அரசுகள் தடுத்து விட்டன.
குறிப்பிட்ட கால இடைவெளியில் நடப்பட்ட கருவேல மரங்களை வெட்டி, நீர் ஆதாரங்களைச் சீர்படுத்தவும் தவறி விட்டன!
இதன் காரணமாகவே, விவசாயம் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கோடைக் காலத்தில், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும், தண்ணீரின்றித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே நீர்ப் பற்றாக்குறை பூதாகாரமாக பயமுறுத்தி வரும் நிலையில், இருக்கும் நீர் ஆதாரங்களையும் முழுமையாக பயன்படுத்தாமல், தவறு செய்து வருகிறோம்.
இப்பொழுது கோடை காலம்; நீர் நிலைகள் வற்றிக் கிடக்கும் நேரம். உடனடியாக கருவேல மரங்களை, வெட்டி அப்புறப்படுத்துவதற்கு ஏற்ற சூழல்.
அரசும், அதிகாரிகளும் மனம் வைத்துக் களத்தில் இறங்கினால், அடுத்து வரும் பருவ காலத்திலாவது விவசாயிகளும், கால்நடைகளும் பலன் பெறுவர்.
நம்புபவர் மோசம் போவர்!
என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனக்கு
செய்த துரோகம் பற்றி தான் பிரசாரம் செய்யப் போவதாக, அ.தி.மு.க., பொதுச்
செயலர் பழனிசாமி கூறி இருக்கிறார்.
'ஜெயலலிதா ஒரு ஊழல் பேர்வழி' என,
பா.ஜ., அண்ணாமலை பேசியது, இவருக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டதாகவும்,
அதனால் அண்ணாமலையை, தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும்,
பா.ஜ., மேலிடத்திடம் முறையிட்டதாகவும், அது நடக்கவில்லை என்றும்
பழனிசாமிக்கு வருத்தமாம்.
அதனால் வந்த கோபத்தில் தான், பா.ஜ.,வுடன் கூட்டணியை விலக்கிக் கொண்டதாக சொல்கிறார்.
அத்துடன்
இந்த தன்மானச் சிங்கம் நிற்கவில்லை... பா.ம.க.,வுடன் அ.தி.மு.க.,வின்
கூட்டணி உருவாகும் நேரத்தில், அதை பா.ஜ., கெடுத்து விட்டதாகவும்,
'லேட்டஸ்ட்'டாக பழி சுமத்தி இருக்கிறார்.
பல்லடத்தில் நடந்த கூட்டத்தில், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும், பிரதமர் மோடி, வாயார புகழ்ந்ததை, பழனிசாமி மறந்து விட்டார் போலும்.
'பன்னீருடன்
சேர்ந்து நீங்கள் பணியாற்றினால் தான், தி.மு.க.,வை பலமாக எதிர்க்க
முடியும்' என, மோடி சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை இந்த
மஹானுபாவர்!
தன்னை முதல்வராக்கிய சசிகலாவை, கட்சியிலிருந்து
நீக்கியவரை, கட்சியை எங்கே தன் பக்கம் திருப்பி விடுவாரோ என்று பயந்து,
பன்னீர்செல்வத்தை, 'அப்பால்' நகர்த்தியவரை, தி.மு.க.,வுக்கு சிம்ம
சொப்பனமாக விளங்கும் அண்ணாமலையை, பா.ஜ.,விலிருந்து நீக்கச் சொன்னவரை
நம்புபவர்கள் மோசம் போவர் என்பது உறுதி!
படிக்கும் விதத்தை கற்று கொடுக்கலாம் திரைத்துறையினர்!
மா.சீனிவாசன், தேனியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது நடிகர் சிவாஜி கணேசன், நடிகை பத்மினி போன்றோர், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகபிரசாரம் செய்கிறோம் எனக் கேட்டனர்.
'கூத்தாடிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவை இல்லை' என்றார்.
அவர் பிரயோகித்த வார்த்தை கடினமானது தான் என்றாலும், அவர் ஏன் அதைப் பயன்படுத்தினார் என்பதை, சினிமாவைப் பார்க்கும் அனைவருக்கும் புரியும்.
திரைப்படங்கள் இல்லாதது பொல்லாததைச் சொல்லிக் கொடுத்து, சமூகத்தைச் சீரழிக்கின்றன எனச் சொன்னால், அத்துறையினர் சண்டைக்கு வருகின்றனர். ஆனால், உண்மை அது தான்!
ஒரு திரைப்படம், 100 ஆசிரியர்களுக்கு சமம். ஆசிரியர்கள், மாணவர்களை பண்படுத்தி வைத்தால், இந்த திரைத்துறை பாழ்படுத்தி விடுகிறது.
காப்பியடிப்பது, காதல் செய்வது படிக்கட்டில் பயணம் செய்வது, ஆகாத மனிதர் மீது பெண்கள் மையல் கொள்வது, வகுப்பறையில் மோதிக் கொள்வது, பெரியோரை மதியாமை போன்ற பல விஷயங்கள், மாணவர்கள் மத்தியில் மிக அதிகமாக பரவுகின்றன.
ஒரு பானையில் ஒரு துளி விஷம் கலந்தால் எவ்வாறு அந்த நீர் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக ஆகாதோ, அது போல, நுாறு நல்ல விஷயங்கள் சொன்னாலும், அவற்றின் இடையே ஒரே ஒரு தீய விஷயத்தைச் சொன்னால், அது விஷம் போல, மாணவர் மனதை மாற்றி விடுகிறது.
நல்ல கருத்துக்களை கொடுங்கள்; உங்களை வாழ்த்துகிறோம்.
இது தேர்வு காலம்; படிக்கும் விதத்தை கற்றுக் கொடுங்கள். காப்பியடிப்பதை திரையில் பார்க்கும் ஒரு மாணவன், வகுப்பறையிலும் அவ்வாறே செய்ய முயல்வான்.
வலிமையான சக்தி உங்களிடம் உள்ளது; தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக படம்/ பாடம் எடுங்கள்.
பாராட் டலாம் இருவரையு ம்!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் லோக்சபா தேர்தலில், 'புதிய தமிழகம்' கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க., கூட்டணியிலும், 'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்' நிறுவனர் ஜான் பாண்டியன், பா.ஜ., கூட்டணியிலும், எதிரும், புதிருமாக தேர்தலை சந்திக்க இருக்கின்றனர்.
இவ்விருவருமே, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
'எங்கள் சமூகத்தினர், நாட்டை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். ஆனால், வேண்டுமென்றே பட்டியல் இனத்துடன் சேர்த்து விட்டனர். எனவே, அப்பட்டியல் இனத்திலிருந்து நீக்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' எனக் கேட்டு போராடி வருபவர்கள்.
'சலுகைகள் வேண்டாம்; கவுரவம் வேண்டும்' என்கின்றனர். சமூக வளர்ச்சியை விட, சமூக பெருமை தான் முக்கியம் என்று எண்ணும் இவர்களை, ஒரு வகையில் பாராட்டலாம்.
கவுரவமாக முன்னேறத் துடிக்கும் இவர்களின் ஆர்வத்தைப் பாராட்டலாம்; கொண்டாடலாம்!

