/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கோட்டை விட்டுவிட்டு இப்போது சாடுவானேன்?
/
கோட்டை விட்டுவிட்டு இப்போது சாடுவானேன்?
PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில், சரியாக செயல்படாத மாவட்ட செயலர்கள், பூத் ஏஜென்ட்கள் மீது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோபப்பட்டோ, வருத்தப்பட்டோ எந்த பலனும் இல்லை.
எப்படியும் வெற்றி பெற முடியாது என பலரும் நழுவியதால், பணக்காரர்களாகப் பார்த்து, தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில், முன்பின் தெரியாதவர்கள் கூட, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டால், வெற்றி பெற்று வாகை சூடுவர். பழனிசாமியும், அப்படி வந்தவர் தானே!
தற்போது அவர்கள் இருவரும் இல்லாதபட்சத்தில், பா.ஜ.,வுடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதாவின் காலடியைப் பின்பற்றி இருந்தால், பழனிசாமிக்கு இப்படி ஒருநிலை ஏற்பட்டிருக்காது. சுயநலமாக சிந்தித்ததால், 'உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா' நிலை ஆகி விட்டது. பா.ம.க., - த.மா.கா., கூட, இவர்களை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. மெகா கூட்டணி ஏற்பட்டிருந்தால், இந்நேரம், லோக்சபாவின் பெரும்பாலான தொகுதிகளை, பழனிசாமி கைப்பற்றி, சர்வ வல்லமையோடு திகழ்ந்திருக்கலாம்.
அனைத்தையும் கோட்டை விட்டு, இப்போது கட்சியினரை நொந்து என்ன பயன்? முடிவுகள் வரட்டும்; பின் தெரியும், என்ன நிலை ஏற்படப் போகிறது என்று!
கட்சிகளே இல்லாமல் ஆக்கலாமே!
சுப்ர.அனந்தராமன்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கட்சித் தாவல்
தடைச்சட்டத்தை பலப்படுத்த வேண்டும்---' என, முன்னாள் துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு பேசி இருக்கிறார்.
'கட்சிகளையே ஒழித்துக் கட்டிவிட
வேண்டும்' என, எமர்ஜென்சி காலத்தில், இந்திராவுக்கு எதிராக கட்சிகளை
ஒருங்கிணைத்து ஜனதா கட்சி ஆரம்பித்த, ஜெயபிரகாஷ் நாராயணனே கூறி
இருக்கிறார். கட்சிகளே இல்லாத ஜனநாயகத் தேர்தல்களை நடைமுறைப்படுத்தினால்,
நாட்டில் எல்லா அராஜகங்களும் ஒழிந்து போகும்.
ரவுடித்தனம் அதிகம் ஆக ஆக, கட்சிகள் இயற்கை மரணத்தைத் தழுவும். அதுவரை, நாம் காத்திருக்க வேண்டுமா?
கட்சிகளே இல்லையென்று செய்து விடுங்கள்; கட்சித் தாவல் இல்லாது போகும்!
மரங்கள் நடுவோம் இன்றே!
சு.ராமஜோதி,
பெரியநாயக்கன்பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தமிழகம் முழுதும், 10 நாட்களாகவே, ஆதவன் சுட்டு எரிக்கிறான்; அனல்
காற்று வீசுகிறது. தினமும், 102 டிகிரி செல்ஷியஸ் முதல் 107டிகிரி வரை
வெப்பம் சுட்டெரிப்பதால், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று, வானிலை மையம்
எச்சரிக்கிறது.
இதே நிலை நீடித்தால், நம் சந்ததியினர் ஆண்டுதோறும்
அவதிக்குஉள்ளாகி, சொல்லொணா உடல் உபாதைகளுடனும், நோயுடனும் அவதிப்படுவர்.
உடலில் கொப்புளங்கள் தோன்றி, காரணம் தெரியாமல் தவிப்பர்; குடிக்க நீரின்றி
தாகத்தினால் உண்டாகும் மரணங்கள் தவிர்க்க முடியாததாகி விடும்.
இந்த
நிலையைத் தவிர்க்க, நம்மால் முடிந்த அளவு, முடிந்த இடங்களிலெல்லாம் மரம்
நடுவோம். இது ஒன்றே, வெப்பத்தைத் தடுக்க சிறந்த தீர்வு. இதைச் செய்யவில்லை
எனில், நம் குழந்தைகளை நாமே புதைகுழியில் தள்ளுகிறோம் என்று பொருள்.
விழிப்போம் இப்போதே; மரங்கள் நடுவோம் இன்றே!
பிரீமியம் தொகையை அதிகரிக்க வேண்டாமே!
வி.எஸ்.ஸ்ரீதரன்,
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தற்போது மருத்துவ காப்பீடுக்கான வயது வரம்பு
உயர்த்தப்பட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியது தான். ஆனால், காப்பீடு பெற,
கட்ட வேண்டிய தொகை, அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது என்பது தான் வேதனை.
மூத்த
குடிமக்கள், மருத்துவ காப்பீடு என்பதை, முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, காப்பீடு பெறக் கட்ட
வேண்டிய பிரீமியம் தொகையை அடிக்கடி உயர்த்தினால், எப்படி கட்ட முடியும்?
காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், இதில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார பிரச்னை ஏற்படாத வகையில், இதற்குத் தீர்வு காண வேண்டும்.
தொகுதி பக்கம் வந்து சென்றால் மூக்கு தப்பும்!
ரங்காச்சு,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருமண நிகழ்ச்சியில்
பங்கேற்க வந்த, உ.பி., மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாந்த்திடம், எம்.பி.,யான
அவரது மகன் குறித்து, நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கேட்டனர்.
'ஏன்யா...
உங்க மகன் பிரவீன் குமார், எம்.பி.,யாச்சே... தொகுதி பக்கமே வர
மாட்டேங்கிறாரே... என்னாச்சு...' என, சற்றே உயர்ந்த குரலில் கேட்க,
விவகாரம், 'கும்மாங்குத்தில்' முடிந்து, சஞ்சய் நிஷாந்த் மூக்கு உடைந்து
ரத்தம் கொட்டியது. அவரும் சும்மா விடவில்லையே... நாற்காலியைத் துாக்கி
அடிச்சாரு பாருங்க... திருமணம், ரணகளமாகிப் போனது!
தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காதது, புதிய
விவகாரம் அல்ல. எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் ரத்தத்தில் ஊறிய சமாசாரம்
அது. ஆனால், மக்கள் இப்போதெல்லாம் சும்மா இருப்பதில்லை என்பதை, அமைச்சரின்
மூக்கை உடைத்த சம்பவத்தைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
அவ்வளவு
ஏன்... நம்மூர் எம்.பி.,க்கள், நம் மாநிலத்தில், தென் மாவட்டங்களில்
பிரசாரம் செய்யச் செல்கையில், மக்கள் 'ரவுண்டு' கட்டி கேள்வி கேட்ட
கண்கொள்ளா காட்சியை தொலைக்காட்சி மூலம் பார்த்தோமே!
எனவே, எம்.பி., -
எம்.எல்.ஏ.,க்களே... உங்கள் மூக்கு, நாக்கு, வாய், கண், கை, கால், இன்ன
பிற சமாச்சாரங்கள் அனைத்தும், பத்திரமாக அந்தந்த இடத்திலேயே இருக்க
வேண்டுமானால், அவ்வப்போது உங்கள் தொகுதிக்கு வந்து செல்லுங்கள்!
அத்தாட்சி கொடுப்பரா?
ரகுநாதன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒரு பானை
சோற்றுக்கு, ஒரு சோறு பதம்' என்பது போல், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்
பெயரை நீக்க எடுத்த முயற்சி, எப்படி சரி செய்யப்படவில்லை என, வாசகர் ஒருவர்
எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, மேலும் சில கேள்விகள்...
ஒரு
வாக்காளர், தன் பெயர், பட்டியலில் உள்ளதா என்று சரிபார்க்க, போதிய அவகாசம்
அளித்தாலும், 'கடந்த தேர்தலில் கூட ஓட்டளித்தோமே... நம் பெயர் பட்டியலில்
தொடரும் என்பதில் சந்தேகமில்லை' என்று நம்புவது தவறா?
'சரி,
எதற்கும் சரிபார்த்து விடுவோம்' என்று, ஒரு நாள் விடுப்பு எடுத்து, தேர்தல்
ஆணைய அலுவலகம் சென்றால், அதே நாளில் பணி முடிந்து விடுமா?
ஒரு வேளை பெயர் நீக்கப்பட்டிருந்தால், உடனுக்குடன் சேர்க்கப்பட்டு விடுமா?
சேர்க்கப்பட்டதற்கான அத்தாட்சி ஏதும் கொடுப்பரா? ஓட்டு போடச் செல்லும்
அன்று, இந்த அத்தாட்சியை வைத்தாவது ஓட்டு போடலாமே என்ற ஆசையால் தான் இந்த
கேள்வியை கேட்கிறேன்.

