PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கஞ்சா, போதை வினியோகம் சர்வசகஜமாகி விட்டது அனைவரும் அறிந்ததே.
புகை நுழையாத இடத்திலும் தமிழக காவல்துறை நுழைந்து குற்றம் செய்தவர்களை தேடிக் கண்டுபிடித்து கைது செய்துவிடும் என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இப்போது, 'அப்படியா?' என போலீசாரே கேட்கும் நிலை உருவாகி விட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் தனபால் ஆகிய இருவரும், 'போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனைக்கு வாய்ப்பு இல்லை' என்று அதிரடியாக கருத்து கூறியுள்ளது சரியே.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், 'கள்ளச்சாராயம் காய்ச்சினால் அந்த இடத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவார்' என உத்தரவிடப்பட்டது.
அதுபோல், 'எந்த காவல் நிலைய எல்லைக்குள் போதைப்பொருள்கள் நடமாட்டம் தெரிகிறதோ, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என்று உத்தரவிடப்பட்டால், ஒட்டுமொத்த போதைப்பொருள் விற்பனையையும் ஒழித்து விடலாமே!
மூன்று ஆண்டுகால ஆட்சியில், தான் அதிகம் சாதனை புரிந்ததாக கூறிக் கொள்ளும் முதல்வர், எதிர்காலத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழித்தால், அவரை உலகமே கொண்டாடுமே... செய்வாரா?
அரசு பள்ளிகள் நலிவடைவதை தடுக்க வேண்டாமா ?
-வி.எஸ்.ராமு,செம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டத்தில்இருந்து அனுப்பி, 'இ - மெயில்' கடிதம்: மாநிலம்
முழுவதும், 37,576 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசின்
சார்பில் செயல்பட்டு வருகின்றன.
நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதி செய்யப்பட்டுள்ளது. 1 - -5 வகுப்புகளுக்கு
ஸ்மார்ட் போர்டு வசதியும் உண்டு. 14 வகை விலையில்லா பொருட்கள், காலை
சிற்றுண்டி மதிய சத்துணவு திட்டம், வலுவான பள்ளி மேலாண்மை குழு.
'நம்ம
ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி' பவுண்டேஷன் திட்டம், பள்ளிகளுக்கு மானியம்,
கழிப்பறை துாய்மைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு, நுாலக புத்தகங்கள், இல்லம்
தேடிக்கல்வி, வாசிப்பு இயக்கம், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வு கருவிகள்.
ஆசிரியர்களுக்கு
லேப்டாப், இடைநிலை ஆசிரியர்களுக்கு டேப்லெட், புதிய பாரத எழுத்தறிவு
திட்டம், நான் முதல்வன் திட்டம், புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு
மேம்பாடு என ஏகப்பட்ட திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
இவை தவிர,
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் துவக்க
நிலை வகுப்புகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள
குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை சேர்ப்பதற்கு, 25 சதவீதம் இடத்தை
ஒதுக்கீடு செய்து அதற்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தி வருகிறது.
இவ்வளவு
வசதிகள் இருந்தும், அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பள்ளிகளில், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஆசிரியர்கள் எவ்வளவோ முயன்றும், எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை.
பள்ளி
அமைந்துள்ள இடம், பெற்றோரை திருப்திபடுத்தாத நிலை, பள்ளியில் படிக்கும்
வயதில் மாணவர்கள் அப்பகுதியில் இல்லாமல் இருப்பது, அரசு பள்ளியின் சேர்க்க
விரும்பாமை உள்ளிட்ட காரணங்களால், அந்த பள்ளிகள், தொய்வு அடைந்து போகின்றன.
இப்பள்ளிகளை,
தலைமையாசிரியர் மட்டுமே பார்த்து வருகிறார். உதவி ஆசிரியர், மாணவர்கள்
உள்ள வேறு பள்ளிக்கு மாற்று பணியாக அனுப்பப்படுவது தொடர்கிறது.
அனுபவம் மிக்க ஆசிரியர்கள், ஒரு சில குழந்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை நாட்களை தான் கடத்துவது?
எண்ணிக்கை
குறைவு காரணமாக மூடப்படும் பள்ளிகளை, 'இல்லந்தேடி கல்வித் திட்டம், புதிய
பாரத எழுத்தறிவு திட்டம், நுாலகம், வாசிப்பு இயக்கம்' போன்ற
பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம். பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக்
கல்வித் துறை, இதற்கு சரியான முடிவை, விரைவில் எடுக்க வேண்டும்.
இதுதான் திராவிட மாடல் முறையா?
பொன்மணி
ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: மத்திய பிரதேசம் மாநிலம், ஷெதோல் பகுதியில், ஆற்றில்
டிராக்டர் வாயிலாக, சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்துள்ளது.
உதவி எஸ்.ஐ., மகேந்திர பக்ரி என்பவர், இரண்டு
போலீசாருடன் சென்று தடுக்க முயன்றபோது, மணல் கடத்தல் கும்பல், அவர் மீது
டிராக்டரை ஏற்றி விட்டது; இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திர பக்ரி
உயிரிழந்துள்ளார்.
'துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம
நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த லுார்து பிரான்சிஸ் மணல் கொள்ளையை
தடுக்க முயன்ற தால், வி.ஏ.ஓ., அலுவலகத்திலேயே வெட்டி கொலை
செய்யப்பட்டார்... வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் மணல் கடத்தலை
தடுத்த காவல் அதிகாரி மீது தாக்குதல்; முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள்
வெட்டு...
'பழனி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது
கொலை முயற்சி. நெல்லை மாவட்டம், நம்பியாற்றில் மணல் கடத்தலை தடுத்த
ஜெகதீஸ் என்ற தனிப்பிரிவு காவலரை, இரும்பு ராடால் அடித்தே கொன்றனர் மணல்
கடத்தல்காரர்கள்...' என்றெல்லாம் தமிழக மணல் கடத்தல் தொடர்பான செய்திகள்
அடிக்கடி வருவதுண்டு.
இப்படி நம் பெயரும் பத்திரிகைகளில் வந்து
விடக்கூடாது என்பதற்காகத் தான் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டோ,
இல்லாமலோ மணல் கடத்தலை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். பெயருக்கு,
மணல் கடத்தும் மாட்டு வண்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை
எடுத்து கொண்டிருப்பதாக காட்டி கொள்வர்.
ஆனால், அரசியல்வாதிகள்,
அவர்களின் பினாமிகள், லாரி லாரியாக கடத்துவது அதிகாரிகளின் கண்களில் படுவதே
இல்லை; அதையும் மீறி, ஏதாவது நேர்மையான அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க
முனைந்தால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதுதான் திராவிட மாடல்
நடைமுறை.
இப்போது, இந்த திராவிட மாடல் நடைமுறை, மத்திய பிரதேசம் வரை
பரவியுள்ளதை தான் மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துகிறது. ஒருவேளை, இனி
இந்தியா முழுதும், திராவிட மாடல் ஆட்சி தான் நடக்கும் என்று தி.மு.க.,வினர்
கூறுவது இதைத்தானோ?