PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

என்.ராமகிருஷ்ணன், பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'தமிழ கத்தில் ஒரு தலித் முதல்வராக முடியாது'என்று அங்கலாய்த்து இருக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்.தன்னை தலித்துகளின் ஏகபோக பிரதிநிதியாக நினைத்து பேசுகிறார்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, தலித் இனத்தை சேர்ந்த சத்தியவாணி முத்துவை மத்திய அமைச்சராக்கினார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தனபாலை சபாநாயகர் ஆக்கினார். அவ்வளவுஏன், கே.ஆர். நாராயணன் என்பவர், ஜனாதிபதி பதவியில் இருந்துள்ளார்.
லோக்சபா சபாநாயகராக, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஜெகஜீவன் ராம் மகள் மீரா குமார் என்பவரை நியமித்தனர். தற்போது ஜனாதிபதியாக இருப்பவர், பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஆவார். இதற்கு மேல் அவர்களுக்கு என்ன முக்கியத்துவம் வேண்டும் என்கிறார்?
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்குஎதிராக ஓட்டளித்தனர் தி.மு.க.,வினர். அதை இவர் தட்டிக் கேட்டாரா?
வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில், மர்ம நபர்கள், மலத்தை கலந்தனரே... அதற்கு இவர் ஏதாவது ஆர்ப்பாட்டம் செய்தாரா? சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.
இளையராஜாவை, 'ஜாதிக்கு தகுந்த புத்தி தான் இருக்கும்' என்று, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேவலமாக பேசினார்;என்ன செய்து கொண்டிருந்தார் திருமா?
'தலித்துகள் நீதிபதி ஆவது, தி.மு.க., போட்ட பிச்சை' என்று எகத்தாளம் பேசினார், தி.மு.க., செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி. வாயே திறக்கவில்லையே திருமா?
ராஜகண்ணப்பன், சாத்துார் ராமச்சந்திரன் போன்றோர், தலித் மக்களை இழிவுபடுத்திய நிகழ்வுகளும் நடந்தது. அவர்களுக்கு எதிராக திருமாவளவன் ஏதாவது பேசினாரா அல்லது ஸ்டாலின்இடம் தான் முறையிட்டாரா?
கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டால், செல்லாக்காசு ஆகி விடுவோம் என்ற பயம் திருமாவுக்கு. இவருக்கு தேவை இரண்டு எம்.பி.,க்கள், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் தனித்துப் போட்டியிட்டு ஒட்டுக்கு பணம் கொடுக்காமல், 30 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கியுள்ளார்; அதுதான் உண்மையான வெற்றி.
இப்போது ஒன்றும் கெட்டு விடவில்லை... வரும் 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திருமாவளவன், தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போது தான் இவரது உண்மையான பலம் தெரியும்.
இவர் தி.மு.க., வுடன் கூட்டணி வைத்திருப்பதால், அவர்கள் தான் அதிக பலனடைகின்றனர்.
எதிர்காலத்திலாவது தலித்துகள் ஆட்சிக்கு வர வேண்டுமானால், தி.மு.க.,வின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். திருமாவளவன் செய்வாரா?
விளக்குங்கள் ராகுல், ப்ளீஸ்!
வி.ஹெச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கோர்ட்,
மருத்துவமனை, கலெக்டர் ஆபீசுக்கு சர்வ சாதாரணமாக வந்து செல்லும் மக்கள்,
போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும் போக அஞ்சுவது ஏன்?' என, சென்னை உயர் நீதிமன்ற
நீதிபதி, அரசு வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். 'மக்களின் நண்பன் என்று
சொல்லிக் கொள்வது மட்டும் போதாது; புகார்தாரர்கள் கவுரவமாக நடத்தப்பட
வேண்டும்' என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
'மே.வ., உ.பி.,
பீஹாருக்குப் பின், சிறுமியர் மீது பாலியல் வன்முறை, மஹாராஷ்டிராவின் தானே
மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மராத்திய சிறுமியர் மீது நடந்த பாலியல்
கொடுமை வெட்கக்கேடானது. நம் சமூகம் எதை நோக்கி போகிறது என்பது குறித்து
சிந்திக்க வேண்டிய தருணத்தில், கட்டாயத்தில் நிற்கிறோம்.
'மக்கள்
தெருவில் இறங்கி போராடும் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ்
ஸ்டேஷனில்,எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கூட போராட வேண்டுமா?
பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போக, ஏன் இவ்வளவு சிரமமாக உள்ளது?
'பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைக்க, அதிகாரிகள் முனைப்பு காட்டுவதில்லை; மாறாக, குற்றவாளிகளை
காப்பாற்ற பாடுபடுகின்றனர். நலிந்த பிரிவு பெண்கள் தான் அதிகம்
பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்ய
வேண்டும்என்பது குறித்து, அரசுகளும், மக்களும், அரசியல்கட்சிகளும் வழி காண
வேண்டும்' என, காங்., தலைவர் ராகுல், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல்
தலையீடு இன்றி காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால், எந்த கிரிமினல்
வழக்கையும் விரைவில் முடித்து, குற்றவாளியை சிறையில் தள்ளி விடலாமே?
கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து தான் ராகுல் சொல்கிறாரா? விளக்கினால் நல்லது!
ஒண்ணும் புரியலையே?
ந.மனோகரன்,
காரமடை, கோவை மாவட்டத்தில்இருந்து எழுதுகிறார்: தமிழக அரசு தனியார்
பள்ளிக்கு வழங்கும் பாட புத்தகங்களுக்கு கிட்டத்தட்ட, 30 சதவீதம்
விலையேற்றம் செய்துள்ளதை பார்த்து பெற்றோர், மாணவர்கள் மன வேதனை அடைந்து
உள்ளனர்.
கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி, மின்
கட்டண உயர்வு, அத்தியாவசியபொருட்கள் விலை உயர்வு. இது என்ன மக்களுக்கான
அரசா... இல்லை மனசாட்சி இல்லாத அரசா?
காமராஜர் ஆட்சி தருவோம் என்று
கூறிய காங்கிரஸ் கட்சி, மவுனமாக இருக்கிறது. ஏழைகளுக்கான அரசு என்று கூறிய
கட்சிகள் எங்கே போயின? போராட்டம் போராட்டம் என்று கூவும் திராவிடப்
போராளிகள் எங்கே? 1,000 ரூபாய் மாணவர்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறி,
கொல்லைப்புறத்தில்,ஏழை, நடுத்தர மாணவ - மாணவியரின் பெற்றோரிடம் கொள்ளை
அடிப்பது தர்மமாகுமா?
தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்ன கோடீஸ்வரர்களா? புரியலையே?
தேச பக்தி இல்லாதோர் இந்தியனல்லர்!
வி.பத்ரி,
கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்'
கடிதம்: கடந்த வாரம் நடைபெற்ற கலைஞர் நுாற்றாண்டு விழா நாணய வெளியீட்டு
நிகழ்ச்சியின் இறுதியில், தேசிய கீதம் பாடும் போது தமிழக மூத்த அமைச்சர்
துரை முருகன் தனது கைகளை பின்னால்கட்டியபடி அங்கும் இங்கும்பார்த்தபடி
அலட்சியமாக இருந்ததை குறித்து, 'தினமலர்' நாளிதழ் உட்பட எந்த மீடியாவும்
கண்டு கொள்ளவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தாய்
வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை என்று காஞ்சி
பீடாதிபதி விஜயேந்திரரை எல்லா ஊடகங்களும் எல்லா எதிர்க் கட்சிகளும்
வசைபாடின.
ஆனால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை ஏற்று நடத்திய
விழாவில் முதல்வர் உட்பட அனைவரும் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்கையில்,
சீனியர் அமைச்சர் துரை முருகன் மட்டும் தேசிய கீதத்தையே அவமரியாதை
செய்துள்ளதை, எந்த தலைவர்களும் ஊடகங்களும் கன்டனக்குரல் எழுப்பாதது
ஆச்சரியமாக உள்ளது.
தேச பக்தி சிறிதும் அற்றவர்கள் இந்தியனாக இருப்பதற்குத் தகுதியற்றவர்களாவர்.