PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

என்.ராமகிருஷ்ணன், பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக கூறி, தி.மு.க.,மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 'பழைய குருடி கதவை திறடி' கதையாக, மக்களை திசை திருப்ப ஹிந்தியை கையில் எடுத்துள்ளது, தி.மு.க.,
இவர்களின் பழைய வரலாற்றை பார்ப்போம்...
கடந்த 1965ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், கல்லுாரி மாணவர்களை துாண்டிவிட்டனர்; அதில், பல மாணவர்கள் உயிரை விட்டனர். அதன் பலனாக, 1967ல் கழகம் ஆட்சியை பிடித்தது. பின்னாளில், 'மொழிப்போர் தியாகி' என்ற பெயரில், தி.மு.க.,வினரை மட்டும் தேர்ந்தெடுத்து, 'பென்ஷன்' வழங்கி, கஜானாவை காலியாக்கியவர் கருணாநிதி. இன்றுவரை அவர்கள் பென்ஷன் வாங்குகின்றனர்.
அதன்பின், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார் கருணாநிதி. கைது செய்யப்பட்டபோது, 'நாங்கள் ஹிந்தி ஆவணங்களை எரிக்கவில்லை; அது வெறும் காதல் கடிதங்கள்' என்று நீதிமன்றத்தில் பல்டி அடித்தனர் கருணாநிதியும், கழக உடன்பிறப்புகளும்!
கடந்த 1986ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், கட்டடங்களில் இருக்கும் ஹிந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தனர். ஆனால், 'முரசொலி' கட்டடத்தில் இயங்கி வந்த, ஸ்டேட் பேங்கில் உள்ள ஹிந்தி எழுத்துகளை மட்டும் அழிக்கவில்லை. காரணம், வாடகை வாங்க முடியாதே!
தற்போதும் தேர்தல் நெருங்கி வருவதால், மத்திய அரசுக்கு எதிராக, இன்னும் பல போராட்டங்களை நடத்துவர்!
ஊரெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, 'போதைக்கு அடிமையாகாதீர்கள்' என்று ஸ்டாலின் விளம்பரம் செய்வது போல், ஹிந்தி பயில்விக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்திக் கொண்டு, தற்போது, ஹிந்திக்கு எதிராக போராடுகின்றனர்!
ஸ்டாலின் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஹிந்தி தெரியும். தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கும் போது, 'அவருக்கு நன்றாக ஹிந்தி தெரியும்; அதனால் மத்திய அமைச்சராக்கினேன்' என்று பேட்டி அளித்தவர் கருணாநிதி. கனிமொழிக்கும் ஹிந்தி தெரியும்.
இப்படி தன் வீட்டில் ஹிந்தி மொழியை ஆரத்தழுவிக் கொண்டே, 'ஹிந்தி அழிப்பு போராட்டம்' என்று தார் டப்பாவை துாக்கிக் கொண்டு வீதி வீதியாக திரிகின்றனர்.
ஏன் இவர்கள் கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் ரூபாய் நோட்டில் கூடத்தான் ஹிந்தி எழுத்துகள் இருக்கின்றன.
திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அவற்றையும் தீயிட்டு கொளுத்துவரா?
தவழும் குழந்தைக்கு லைசன்ஸ் எதற்கு?
ஆர்.பாபு
கிருஷ்ணராஜ், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: த.வெ.க.,
கட்சி தலைவர் நடிகர் விஜய்க்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு தர
முடிவெடுத்துள்ளது, மத்திய உள்துறை அமைச்சகம். இதன் வாயிலாக, 24 காவலர்கள்
அடங்கிய சிறப்பு குழு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில், அவருக்கு
பாதுகாப்பு தர இருக்கின்றனர்.
பூமியில் பிறந்த எந்த
தனிமனிதருக்கும் பாதுகாப்பு மிக அவசியம்; குறிப்பாக, அரசியல்
முக்கியஸ்தர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு
அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய
வேண்டியது அரசின் கடமை; இதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால், விஜய்க்கு எதற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு?
கட்சி
ஆரம்பித்து, முதல் தேர்தலைகூடசந்திக்கவில்லை. இதுவரை மக்கள்
பிரச்னைகளுக்காக எந்தவித போராட்டங்களும் நடத்தவில்லை; மற்ற தலைவர்கள் போல்
பொது இடங்களுக்கு சென்று, மக்களோடு கலந்து பயணிப்பவர் என்றால் கூட,
அவருக்கு பாதுகாப்பு அவசியம் என்று நினைக்கலாம்.
ஆனால், 'ஏசி' அறைக்குள், நான்கு சுவர்களுக்குள்உட்கார்ந்து, 'அறிக்கை' அரசியல் செய்யும் இவருக்கு எதற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு?
தவழும் குழந்தைக்கு, கார் ஓட்ட கற்பித்து, லைசன்ஸ் கொடுக்க நினைப்பது போல் அபத்தமாக உள்ளது, இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு!
அரசியல்
தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மத்தியஅரசின் கடமை என்றால், அனைத்து
அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா?
ஆளுங்கட்சியை
கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் பெரிய, சிறிய கட்சி தலைமைகளுக்கு
இல்லாத அச்சுறுத்தல், இவருக்கு எங்கிருந்து வந்தது?
ஒருவேளை கூட்டணிக்குஇழுக்க கிடைத்த வாய்ப்பாக மத்திய அரசு இதை நினைக்கிறதோ!
நினைவில் கொள்ள வேண்டும்?
ஜெ.விநாயகமூர்த்தி,
கல்லம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: எம்.ஜி.ஆர்., தன் உழைப்பால் உருவாக்கிய, அ.தி.மு.க., எனும்
கட்சியை, தன் பேராசையால், தவிடு பொடியாக்கும் முயற்சியில்ஈடுபட்டு
வருகிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி.
பல தகிடுதத்தங்களை
செய்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர், 2021 தேர்தல் வரை, மத்திய அரசுடன்
இணக்கமான போக்கை ஏற்படுத்தி, ஆட்சியை சுமுகமாக கொண்டு சென்றார்; அந்த
வகையில் அவரை பாராட்டலாம்.
ஆனால், எப்போது அவர், தான் யார் என்பதை
மறந்து, தன்னையே ஒரு எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் நினைத்துக் கொண்டு
செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போது, அ.தி.மு.க.,விற்கு சரிவு ஏற்படத்
துவங்கியது.
கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில், கட்சியின்
எதிர்காலத்தைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன்னிச்சையாக செயல்பட்டதன்
விளைவு, சில இடங்களில் அ.தி.மு.க., டிபாசிட் இழந்தது; பல இடங்களில்
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இப்போதும், 2026ல் தேர்தலை எதிர்கொள்ளபலமான கூட்டணி இல்லை.
நைந்த சேலையாய் கட்சி இருக்கும் போது யார் தான் கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டுவர்?
அதுதான்
போகட்டும் என்றால், மக்களுக்கான பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்து
செல்லவும் இல்லை. பழம் தின்று கொட்டை போட்ட பன்னீர்செல்வம், செங்கோட்டையன்
போன்ற சீனியர்களை அரவணைத்துச் செல்வதும் இல்லை.
கட்சிக்குள் மதிப்பு இல்லை என்பதை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கொட்டித் தீர்த்து விட்டார்.
'யாரையும்
மதிக்க மாட்டேன்; எவர் தயவும் வேண்டாம்... இரட்டை இலை இருந்தால் போதும்;
முதல்வராகி விடுவேன்' என, கனவு காண்கிறார் பழனிசாமி.
கூடி இழுத்தால் தான் தேர் நகரும்; இந்த உண்மையை மறந்தால், அ.தி.மு.க., காணாமல் போய்விடும் என்பதை பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும்!