PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., பிரமுகர் எவராவது அமலாக்கத் துறையிடம் மாட்டும்போது, 'நாங்கள் ஈ.டி.,யை பார்த்தும் பயப்பட மாட்டோம்; மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம்...' என்றுவசனம் பேசுவர்.
அவ்வரிசையில் தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி வீட்டில் நடந்த ரெய்டு குறித்து, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி இவ்வசனத்தை கூறியுள்ளார்.
இவர்கள் இவ்வாறு கூறக் காரணம் என்ன?
இதுவரை எத்தனையோ ரெய்டுகள் நடந்துள்ளன. பல பிரமுகர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் பதிவிடப்பட்டுள்ளன. ஆயினும், இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
செலவு கணக்கை சொல்வாரா? என்.ராமகிருஷ்ணன், பழனியில் இருந்து எழுதுகிறார்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்று சமீபத்தில் அப்பல்லோ
மருத்துவமனையில் சேர்ந்தார். அதில் தவறில்லை; ஆனால், தன் கட்சியினரை
வரவழைத்து, அங்கேயே ஆலோசனை கூட்டம் நடத்தியது தான் சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது.
காரணம், தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால்,
பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று அஞ்சி, கோவில் பின்வழியாக சென்றவர்
கருணாநிதி. தந்தைக்கே அந்த பயம் இருக்கும் போது, மகன் ஸ்டாலினுக்கு
இருக்காதா?
எங்கே மோடியை வரவேற்க கங்கைகொண்ட சோழபுரம் சென்றால்,
தன் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று ஸ்டாலின் கருதி, அப்பல்லோ
மருத்துவமனைக்கு சென்று படுத்தாரோ என்றே சந்தேகம் கொள்ள வைக்கிறது.
சரி... அப்படியே சிகிச்சை எடுத்திருந்தாலும், எவ்வளவு செலவானது? அது,
அவரது சொந்தப்பணமா அல்லது மக்களின் வரிப்பணமா என்பதை தெரிவிக்க வேண்டும்
அல்லவா?
எம்.ஜி.ஆர்., அமெரிக் காவில் சிகிச்சை பெற்று தமிழகம்
திரும்பிய பின், 'சிகிச்சைக்காக இவ்வளவு செலவாகியுள்ளதே... மக்கள்
வரிப்பணத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டது சரியா?' என்று கேட்டு எ
ம்.ஜி.,ஆரை வசை பாடினார் , கருணாநிதி.
சிகிச்சைக்கான முழு
தொகையையும், தன் தொண்டர்களிடம் வசூல் செய்து கட்டினார், எம்.ஜி.ஆர்., அதே
நேரம், மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் சிகிச்சைக்கு, மக்களின்
வரிப்பணத்தில் இருந்து பல கோடி ரூபாய் செலவு செய்தார் கருணாநிதி.
அதுகுறித்து அ.தி.மு.க., வினர் கேள்வி கேட்ட போது, 'பணத்தை கட்டி விடுகிறேன்' என்று ரோஷமாக கூறிய கருணாநிதி, கடைசி வரை கட்டவில்லை.
அவரின் அடித்தொட்டு நடக்கும் முதல்வர் ஸ்டாலினும், தன் சிகிச்சைக்கு
எவ்வளவு செலவானது, அது, சொந்தப் பணமா அல்லது மக்களின் வரிப்பணமா என்பதை
தெரிவிக்கவில்லை!
அதுசரி... எப்படி தெரிவிப்பர்?
ஆளுங்கட்சியாகி விட்டாலே, 'கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள்' என்ற அரச தோரணை அல்லவா தி.மு.க., தலைமைக்கு வந்து விடுகிறது!
இதிலுமா விஜய் காப்பி அடிப்பார்? ஸ்ரீனிவாச ராகவன், சென்னை யில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கவர்னர் விருந்தை நடிகர் ஜோசப் விஜயின்
தமிழக வெற்றிக் கழகம் புறக்கணித்து உள்ளது.
தி.மு.க.,வும்,
இடதுசாரிகளும், சிறுபான்மை அமைப்புகளும் எந்தப் பாதையில் செல்கிறதோ, அதே
திசையில் நாமும் பயணிக்கலாம் என்பது தான் விஜயின் அரசியல் நிலைப்பாடு.
அவ்வகையில், கவர் னர் விருந்து புறக்கணிப்பு நாடகத்தையும் அரங்கேற்றி யுள்ளார், விஜய்.
இவர் புறக்கணித்ததால் விருந்து நடைபெறவில்லையா இல்லை கவர்னர் இதை அவமானமாக
எண்ணி, தன் பதவியை ராஜினாமா செய்து விட் டாரா? இரண்டுமே இல்லை. பின்
எதற்கு இந்த விளம்பரம்... 'நாங்களும் களத்தில் இருக்கிறோம், கவர்னர் தரும்
விருந்தையே புறக்கணித்துள்ளோம் பார்த்தீர்களா' என்று சுய தம்பட்டம்
அடிக்கவா?
'ஈயடிச்சான் காப்பி போல்' திராவிட கட்சிகள் என்ன
செய்கின்றனவோ, அதை அப்படியே காப்பி அடிப்பதற்கு எதற்கு புதிதாக ஒரு கட்சி?
அதற்கு ஒரு தலைவன்?
மாற்றத்திற்காகத் தான் மக்கள் புதிய கட்சிகளை எதிர்பார்க்கின்றனரே தவிர, பழைய கள்ளை புதிய மொந்தையில் வாங்கிக் குடிப்பதற்கு அல்ல!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும், அவரது மகன் கார்த்திக்கும், 2019ல் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் வெளிவந்தனர். அதன்பின், அந்த வழக்கு என்னவானது என்றே தெரியவில்லை!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்., - எம்.பி.,க்கள் ராகுல் மற்றும் சோனியா மீது குற்றச்சாட்டு உள்ளது. அந்த வழக்கும் கிணற்றில் போட்ட கல்லாகத் தான் உள்ளது.
அதேபோன்று, '2ஜி' வழக்கில் தி.மு.க., - எம்.பி.,க்கள் ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பு அப்பீல் செய்தது, அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியோ, சுதந்திரமாக திரிகிறார்.
தலைமறைவாக இருந்த தம்பி பிடிபட்டால், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்டம், 'க்ளோஸ்' என்றனர். செந்தில் பாலாஜியின் தம்பியும் வந்தார், ஜாமின் பெற்றார், சென்றார்; எதுவும் நடக்கவில்லை.
முன்னாள் அரசு தலைமைச் செயலர் ஒருவர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டதாக செய்தி வந்தது. அதன்பின் , அந்த வழக்கு முன்னேறியதாகவோ, அவர் தண்டிக்கப்பட்டதாகவோ செய்தி இல்லை.
குட்கா வழக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க, ஈ.டி., - சி.பி.ஐ., - சுப்ரீம் கோர்ட் போன்றவற்றை பார்த்து அரசியல்வாதிகள் எதற்கு பயப்பட வேண்டும்?
இந்த அமைப்புகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், உச்ச நீதிமன்றத்திற்கு ஆதாரங்களை கொடுத்து, பலமான வாதம் புரிந்து, குற்றத்தை நிரூபிக்க வேண்டிய அரசு தரப்பு, தன் கடமையை சரிவர ஆற்றாததே, 'ஈ.டி.,க்கும் பயமில்லை; மோடிக்கும் பயமில்லை' என்று அரசியல்வாதிகள் கூறக் காரணம்!
மக்களும், 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...' என்ற எண்ணத்தில், கறைபடிந்த அரசியல்வாதிகளை தேர்தலில் வெற்றி பெறச் செய்கின்றனர். ஊழல் குற்றங்களும் தொடர்கதையாகின்றன.
அரசியல்வாதிகள் தண்டனை பெறாத வரை, அமலாக்கத் துறை சோதனையும், நீதிமன்ற வழக்கும் கண் துடைப்பாகவே பார்க்கப்படும்!