PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

எஸ்.கண்ணன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சம்பவம் நடந்த நாளிலிருந்து, 157வது நாளில் குற்றவாளியின் தண்டனையை காவல்துறை உறுதி செய்துள்ளது.
'பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை, 2019 பிப்ரவரி முதல், 2025 மே மாதம் வரை, ஆறரை ஆண்டுகள் நடந்தன. ஆனால், அண்ணா பல்கலை வழக்கில், 157 நாளில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம்' என்று பெருமிதம் அடைந்துள்ளார், தி.மு.க., - எம்.பி., கனிமொழி.
இதில், பெருமிதம் அடைய என்ன இருக்கிறது?
தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை; ஞானசேகரனை குற்றவாளி என்று நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்... அவ்வளவுதான்!
குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் கழகத்தின் பொறுப்பில் இருந்தவர் மட்டமல்ல; கட்சி பெருந்தலைகள் பலரோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
மேலும், ஞானசேகரனுடன், 'சார்' ஒருவரும் தொடர்பில் இருந்துள்ளார். 'அந்த சார் யார்'என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லையே!
இதில், குறுகிய காலத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்டதாக பெருமைப்படுகின்றனர், தி.மு.க.,வினர்.
கரிகாலன் அரசவைக்கு இரு முதியவர்கள் ஒரு வழக்கை கொண்டு வந்தனர். நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்திருந்த கரிகாலனை பார்த்து, 'இவ்வளவு சிறியவனாக இருக்கிறானே... இவன் சரியாக நீதி வழங்குவானா' என்று சந்தேகப்பட்டு நின்றிருந்தனர். அவர்களது எண்ண ஓட்டத்தை அறிந்த கரிகாலன், 'உங்கள் வழக்கை வேறு ஒருவர் வந்து தீர்த்து வைப்பார்' என்று சொல்லி கீழிறங்கி சென்றவர், சிறிது நேரத்தில் முதியவர் வேடத்தில் வந்து அமர்ந்து, அம்முதியோருக்கு சிறந்ததொரு தீர்ப்பை வழங்கினானாம். தீர்ப்பை முதியோர் பாராட்டிய போது, தன் வேடத்தை கலைத்து, 'நான் தான் கரிகாலன்' என்றானாம். இது கற்பனை கதையல்ல; வரலாறு!
அதுபோல், தீர்ப்பு சொல்ல ஒருநாள் போதும். மன்னராட்சியில் மன்னர்கள் அப்படித்தான் நீதிபரிபாலனம் செய்தனர். வாய்தா, மேல்முறையீடு எல்லாம் கிடையாது.
அதனால், 157 நாளில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம் என்றெல்லாம் பெருமைப்பட தேவையில்லை.
சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கும் இறுதி தீர்ப்பில், 'யார் அந்த சார்?' என்ற வினாவுக்கு விடை கிடைத்து விட்டால், அப்போது, கனிமொழியும், தி.மு.க.,வினரும் பெருமையும், பெருமிதமும் அடையலாம்!
கொள்ளையர்களின் கூடாரமான கோவில்கள்!
மு.செந்தில்குமார்,
கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்
திருச்செங்கோடு கோவில் சென்றிருந்தோம். அடிவாரத்தில், நாகர் சிலை
வழிபாட்டிற்கு செல்லும் பாதை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும்,
அங்கு பூஜைகள் சரிவர நடைபெறவில்லை. பால், மஞ்சள் பொடி, நவதானியம், 100
ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதையாவது ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால்,
அர்ச்சனை செய்ய, 101 ரூபாய் வாங்குகின்றனர்.
எப்படி ஏழை எளியோர் கோவிலுக்கு செல்ல முடியும்?
மேலும்,
அர்ச்சனை சீட்டு வழங்கும் இடத்தில் அமர்ந்திருந்த நபர், '45 லட்சம் ரூபாய்
செலவு செய்து இந்த டெண்டரை எடுத்துள்ளோம்; அதனால் இப்படித்தான் பணம்
வாங்குவோம்' என்றார்.
கோவில் என்பது வழிபாட்டு தலமா அல்லது பொழுதுபோக்கு இடமா?
கோவில்
நிலங்களை 'டெண்டர்' விட்டு சம்பாதிக்கும் அரசு, இப்படி அர்ச்சனை
டிக்கெட்டுக்கும் டெண்டர் விட்டு, ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலித்தால், ஏழை
எளியவர்கள் எப்படி இறைவனை தரிசிக்க முடியும், தங்கள் வேண்டுதல்களை
நிறைவேற்ற முடியும்?
கோவில் ஒன்றும் வர்த்தக இடமோ, அரசு நிறுவனமோ அல்ல... டெண்டர் விட்டு சம்பாதிக்க!
கடவுள்
நம்பிக்கையாளர்களின் பக்தியோடு விளையாடி, பணம் சம்பாதிக்க துடிக்கும்
திராவிட மாடல் ஆட்சியில், கோவில்கள் இன்று கொள்ளையர்களின் கூடாரமாகி
விட்டது!
இதற்கு யார்தான் முடிவு கட்டுவர்?
கார்கேவுக்கு கலெக்டிவ் அம்னீஷியா?
ஆர்.சாமிக்கண்ணு,
நெய்வேலி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாழ்க்கையில் நடந்த
ஒரு சில சம்பவங்கள் மட்டும் நினைவுத் திரையில் இருந்து நகர்ந்து போனால்,
அதை, 'செலக்டிவ் அம்னீஷியா' என்றும், நடந்த மொத்த சம்பவங்களும் மறந்து
போனால் அதை, 'கலெக்டிவ் அம்னீஷியா' என்றும் கூறுவர்.
அவ்வகையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கேவுக்கு வந்திருப்பது கலெக்டிவ் அம்னீஷியா!
ஏனெனில்,
கார்கேவுக்கு, இந்திரா ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி
மற்றும் அதன் விளைவுகள் சுத்தமாக மறந்து விட்டதுடன், 'பிரதமராக
பதவியேற்று, 11 ஆண்டுகளை மோடி நிறைவு செய்துள்ளார். இந்த காலத்தில் நாட்டு
மக்களுக்கு அவர் செய்த நல்லது என்ன? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியே நாட்டில்
இப்போது நிலவுகிறது' என்றும் கூறியுள்ளார்.
எமர்ஜென்சி காலத்தில்
மக்கள் உணவு உண்பதற்கு மட்டும்தான் வாயை திறக்க முடிந்தது. வீண் வம்பு,
விதண்டாவாதம் பேசவோ, அரசை விமர்சிக்கவோ, பிரதமரை கிண்டல், கேலிசெய்யவோ
அனுமதி கிடையாது. மீறி வாயை திறந்தால் ஜெயில்தான். உண்ண களியும், உறங்க
கட்டாந்தரையும் தான் கிடைத்தன. இப்போது அப்படியா நிலைமை உள்ளது?
காங்.,
கட்சியை எதிர்த்து அரசியல் செய்ததுடன், தம் மாநிலத்தில் செல்வாக்கு
பெற்றவர்களாக இருந்த ஒரே காரணத்துக்காக, ஜெய்ப்பூர் ராணி காயத்திரி
தேவியையும், குவாலியர் ராணி விஜயராஜே சிந்தியாவையும் கைது செய்து, எலிகள்
நிறைந்த துர்நாற்றம் வீசும் அறையில் அடைத்தாரே... அதுபோன்று
எதிர்க்கட்சியினரை மோடி அரசு சிறையில் தள்ளியுள்ளதா என்ன?
உடல்நிலை
பாதிக்கப்பட்ட நிலையில், தன்னை விடுவிக்கும்படி, அரசுக்கு கோரிக்கை கடிதம்
அனுப்பியபோது, வயதான பெண் என்று இரக்கம் கொள்ளாமல் நிராகரித்தவர்,
இந்திரா. பின், 'அரசியலை விட்டு முழுமையாக விலகுகிறேன்; நீங்கள் கூறும்
எல்லா நிபந்தனைக்கும் கட்டுப்படுகிறேன்' என்று காயத்திரி தேவி ஒப்புதல்
கையெழுத்து போட்டுக் கொடுத்த பின்னரே விடுதலை செய்தார்.
அப்படியா இப்போது நடைபெறுகிறது?
அரசியல் பழி வாங்கலுக்காகவே எமர்ஜென்சியை கொண்டு வந்து, அரசியல் அமைப்பு சட்டத்தையே நசுக்கியவர் இந்திரா.
அதையெல்லாம்
மறந்துபோன கார்கே, மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக
கூறுகிறார் என்றால், அவர் கடுமையாக, 'கலெக்டிவ் அம்னீஷியா'வில்
பாதிக்கப்பட்டுள்ளார் என்றே அர்த்தம்!