PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM

எஸ்.பி.சுந்தரபாண்டியன்,
திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெங்களூரில்
கிரிக்கெட் ரசிகர்கள், 11 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுதும்
பேசுபொருள் ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், கர்நாடக அரசின்
பொறுப்பின்மையே!
இந்திய அணி ஏதோ உலககோப்பையை வென்று, நாடு
திரும்புவது போல் நினைத்து, ஐ.பி,எல்., தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி
கோப்பையை வென்றதற்கு, பாராட்டு விழா என்ற பெயரில் நடத்திய கூத்தில், பல
உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன.
பாராட்டு விழாவை மைதானத்தில் நடத்தி, ரசிகர்களை வரிசையாக உள்ளே அனுப்பி இருந்தால், இந்த உயிரிழப்புகள் நேர்ந்திருக்காது.
ஆனால்,
கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் கிரிக்கெட்டில் சாதித்துவிட்டது
போல், இதை அரசியல் செய்தனர். கூடவே, கவர்னரையும் சேர்த்துக்கொண்டு,
'செல்பி' எடுப்பதில் குறியாக இருந்தனரே தவிர, பாதுகாப்பு கொடுப்பதில்
கோட்டை விட்டு விட்டனர்.
பாராட்டு விழா என்றால் ரசிகர்கள்
லட்சக்கணக்கில் கூடுவர் என்பது கூடவா அரசுக்கு தெரியாது? முன்னேற்பாடுகளை
செய்துவிட்டு, விழாவை நடத்தி இருக்கலாம்!
இதில் கொடுமை
என்னவென்றால், ஒரு பக்கம் மரண ஓலம் ஒலித்திருக்கிறது. நிச்சயம், அது
மைதானத்திற்குள் இருந்தவர்களுக்கு கேட்டிருக்கும்; ஆனாலும் விழாவை நிறுத்த
அவர்களுக்கு மனமில்லை.
ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக நினைத்து,
அப்பாவி ரசிகர்களின் மரணத்திற்கு காரணமாகி விட்டனர். இதற்கு முன்,
ஐ.பி.எல்., கோப்பையை சென்னை, ராஜஸ்தான், கொல்கட்டா, மும்பை உட்பட பல அணிகள்
பலமுறை வென்று இருக்கின்றன. அப்போதெல்லாம் இதுபோன்ற அசம்பாவிதம் எங்கும்
நிகழ்ந்ததில்லை.
கிரிக்கெட்டுக்கு ரசிகர்களாக இருக்கலாம்; வெறியர்களாக இருந்தால் இதுபோன்ற பின் விளைவுகள் ஏற்படும் என்பதை, இளைஞர்களும் உணர வேண்டும்.
பெங்களூரு
அணி நிர்வாகமும் சரி, கர்நாடக அரசும் சரி இறந்தவர்கள் குடும்பத்திற்கு
நிவாரணத்தொகை அறிவித்திருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்தினரின் வலி,
வேதனையை அப்பணத்தால் ஈடுகட்ட முடியுமா?
மற்ற மாநிலங்கள் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, வருங்காலத்தில் உயிர் இழப்புகளை தவிர்க்க வேண்டும்!
முதல்வருக்கு முதிர்ச்சி வேண்டும்!
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் என பயந்துதான் மாற்று திறனாளிகளுக்கான மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்' என்று கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
தாங்கள் ஆட்சியில் இருந்தால், கவர்னர் தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் அரசுக்கு எதிர்ப்பாளராக இருக்க வேண்டும் என்பது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடு.
ஆனால், எந்த அரசு கவர்னரை நியமித்து இருந்தாலும், அவர்களை மதிக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின் நிலைப்பாடு.
எமர்ஜென்சி காலத்தில் தமிழகத்தில் கவர்னராக நியமிக்கப்பட்டவர் மோகன்லால் சுகாடியா. 1977ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், 11 மாதம் பதவியில் இருந்த சுகாடியா நீக்கப்படவே, தன் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு புறப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று, அவரையும், அவர் குடும்பத்தினரையும் வழியனுப்பி வைத்தார், எம்.ஜி.ஆர்.,!
ஆனால், 1974ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, அப்போது தமிழக கவர்னராக இருந்தவர் கே.கே.ஷா. இவர் கருணாநிதிக்கு மிகவும் வேண்டியவர்.
கூட்டணி கட்சிகளான இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் கவர்னர் ஷாவை சந்தித்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி மீதான ஊழல் பட்டியல் மனுவைக் கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரினார்.
மறுநாள் இதுகுறித்து செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்ட போது, 'பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்' என கிண்டலாக பதில் அளித்தார்.
'தான் கவர்னரிடம் கொடுத்த மனு, கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது?' என்று கேட்டு கவர்னரை எம்.ஜி.ஆர்., விமர்சிக்கவில்லை. மாறாக, கூட்டணி தலைவர்களுடன் டில்லி சென்று, அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியிடம், கருணாநிதி மீதான ஊழல் பட்டியல் மனுவை வழங்கினார்.
கடந்த 2002ல் தி.மு.க., வுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ., மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தமிழக கவர்னராக இருந்தவர், ஐ.பி.எஸ்., அதிகாரி பி.எஸ்.ராமமோகன்ராவ்.
அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சில சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அரசு விஷயத்தில் இருவருக்கும் இணக்கமான போக்கு இருக்கவே, கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. உடனே, 'ராம்மோகன்ராவை மாற்ற வேண்டும். உத்தராஞ்சல் மாநில கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவை தமிழகத்திற்கு நியமிக்க வேண்டும்' என பா.ஜ., அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனாலும், கருணாநிதியின் கோரிக்கை தான் நிறைவேறியது.
தன் நண்பரான சுர்ஜித் சிங் பர்னாலாவை கவர்னராக நியமித்தால், ஜெயலலிதா அரசுக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்த்தார் கருணாநிதி. அது நடக்கவில்லை; அரசுக்கு இணக்கமாகவே இருந்தார் பர்னாலா. இது கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
உடனே, 'முரசொலி'பத்திரிகையில், 'பஞ்சாப் சிங்கம், போயஸ் தோட்டத்தில் சிறு நரியாகி விட்டதே' என்று பர்னாலாவை விமர்சனம் செய்தார். அதேபோல் ஜெயலலிதா அரசின் மீது சில குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் வழங்கினார் கருணாநிதி.
அந்த மனு எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. 'நான் கொடுத்த மனு எப்படி வெளியானது? ராஜ்பவனில் இருக்கும் அந்த கருப்பு ஆடு யார்?' எனக் கேட்டு, கடுமையாக விமர்சனம் செய்தார்.
அன்று, எம்.ஜி.ஆர்., கவர்னர் ஷாவிடம் வழங்கிய மனு தன் கைக்கு கிடைத்தவுடன், 'பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்' என வசனம் பேசியவர், தான் கொடுத்த மனு வெளியில் கசிந்தவுடன் ஆத்திரம்அடைந்தார்.
இதுதான் கருணாநிதியின் குணம்.
தன் தந்தையை போலவே முதல்வர் ஸ்டாலினும் செயல்படுகிறார். கவர்னர் மசோதாவை தாமதப்படுத்தினால், அவருக்கு நீதிமன்றம் என்ன சிறை தண்டனையா வழங்கப் போகிறது? கவர்னர் பயப்பட!
பதவிக்கு தக்க முதிர்ச்சி வேண்டும் முதல்வருக்கு!