PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

ம.கண்ணன், வாடிப்பட்டி, மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை, 2025 - 2026 கல்வியாண்டில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதாக கூறி, தமிழ் மொழிப் பாடத்தில், 25 சதவீதம் வரை குறைத்துள்ளது.
அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகிறது பள்ளிக்கல்வித் துறை.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகம் எட்டு இயல்களில் இருந்து, ஆறு இயல்களாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு, மாற்றம் என்னும் பெயரில், பிளஸ் 1 மனப்பாடப் பாடலை, பிளஸ் 2 புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.
ஏற்கனவே, தமிழாசிரியர்களுக்கு போதுமான பாடவேளைகளைப் பள்ளிகள் தருவதில்லை. இதில், பாடம் குறைக்கப்பட்டுள்ளதால், இனி, வகுப்பறையை கணிதம், வேதியியல், இயற்பியல்,உயிரியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆசிரியர்கள் ஆக்கிரமித்துக் கொள்வர்.
இதன் காரணமாக, வாரத்திற்கு எட்டு அல்லது 10 முறை தான் வகுப்பு எடுக்க முடியும். மாணவர்களுக்கு உண்மையான மன அழுத்தமே இனிதான் ஆரம்பிக்கப் போகிறது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ஒருவர், 'தமிழ் தானே...' என்று இளக்காரமாக நினைத்து, ஆங்கிலப் பாடவேளையை அதிகரித்து, தமிழ் பாடத்திற்கான நேரத்தை குறைக்கவே,'தமிழாசிரியர் பணியே வேண்டாம்' என்று முடிவெடுத்தார், 20ம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த உரையாசிரியரும், தமிழ் புலவருமான சோழவந்தான் அரசஞ்சண்முகனார்.
ஆனால், இன்று தமிழர்களை வைத்தே, 'தமிழ் மெல்ல இனிச் சாகும்' என்பதை நிரூபிக்க துணிந்து விட்டனர், ஆட்சியாளர்கள்.
உண்மையிலேயே மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால், வினாத்தாளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமே தவிர, பாடத்தைக் குறைத்தால் எப்படி பாஸ் ஆவர்?
மொழி அறிவு தான் பூஜ்ஜியமாகும்!
இது தமிழ் மொழிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்!
நம்புங்கள் மக்களே!
எஸ்.ஸ்ரீனிவாசன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஓரணியில் தமிழ்நாடு'
என்ற பெயரில் தேர்தலுக்கு தயாராகி வருகிறது, தி.மு.க.,!
இப்போது,
'ஓரணியில் தமிழ்நாடு' என்பர். தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்த பின்,
முதல் நான்கு ஆண்டுகள் இவர்கள் அரசர்கள் போன்றும், மக்கள்
அனைவரையும்பிச்சைக்காரர்கள் போலவும் நடத்துவர்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு, 'ஓசி' தானே என்று ஏளனம் செய்வர்.
'அரசு
மகளிருக்கு கொடுக்கும், 1,000 ரூபாயில் இல்லத்தரசிகள் சந்தோஷமாக குடும்பம்
நடத்தலாம். கல்லுாரி மாணவியர் போனில் ஆண் நண்பர்களுடன்பேசலாம்' என்று
பெண்களை அவமதிப்பர்.
தமிழன் ஒருவன் கலெக்டராகவோ, நீதிபதியாகவோ
முன்னேறினால், அது தங்கள் அரசு போட்ட பிச்சை என்றும், ஹிந்துக்களின் சனாதன
தர்மத்தை மலேரியா கொசுவைப் போல் அழிப்போம் என்றும் கூறுவர்.
கூடவே, மின்சாரம் முதல் சொத்து வரி வரை அனைத்து வரிகளையும் அதிகரித்து மக்கள் தலையில் சுமையை ஏற்றுவர்.
இவை அனைத்தும், முதல் நான்கு ஆண்டுகளுக்கான தி.மு.க.,வின் நிகழ்ச்சி நிரல் மட்டுமே!
ஐந்தாவது ஆண்டோ அப்படியே தலைகீழாக மாறி விடுவர்.
'தேர்தல்
வரும் பின்னே,தி.மு.க.,வின் அறிக்கைகள் வரும் முன்னே' என்பது போல்,
பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவர். மக்கள் மகிழ்ச்சி கடலில்
நீந்துவதாகவும், தாங்களே மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாகவும் ஒரு மாயத்
தோற்றத்தை ஏற்படுத்துவர்.
சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்கள், முருகன் மாநாடு நடத்தி, வேல் பிடித்துக் கொண்டு சுற்றுவர்.
கடந்த
தேர்தலில் கொடுத்த நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி
விட்டதாக சொல்வர்; மக்கள் அதை நம்பியாக வேண்டும். வரும் தேர்தலுக்கான
வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவர்; மீண்டும் மக்கள் நம்ப வேண்டும் என்று!
இங்கே மாற வேண்டியது மக்கள் தான்!
யார் அந்த அதிகாரி?
கு.அருணாச்சலம்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2001ல்
பார்லிமென்ட்டிற்குள் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அப்சல் குருவை கூட,
கைது செய்து சிறையில் அடைத்து, சட்டப்படி வழக்கு தொடுத்து, விசாரணை செய்து
பின்னர் தான் துாக்கிலிட்டனர்.
ஆனால், தமிழகத்தில் 2021ல்
தி.மு.க., ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து தற்போது வரை, 25 பேர் போலீஸ்
காவலில் மரணம் அடைந்துள்ளனர். தமிழக போலீசார் சட்டத்தை தங்கள் கைகளில்
எடுத்து, கிரிமினல்களாக மாறிவிட்டனர் என்பதற்கு இக்கொலைகளே சாட்சி!
கொடூரமாக அடித்து துன்புறுத்தும் அளவுக்கு, திருப்புவனம் அஜித்குமார் என்ன பாலியல் குற்றவாளியா இல்லை எவரையேனும் கொலை புரிந்தவரா?
'தமிழகத்தில்
நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது போலீஸ் ராஜ்யமா?' என்று சென்னை உயர்
நீதிமன்றம் கேள்வி எழுப்பும் நிலையில் தான் இங்கு சட்டம் - ஒழுங்கு உள்ளது.
இது ஆட்சியாளர்களுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய தலை குனிவு!
தற்போது இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐந்து போலீசாருக்கும், உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்?
ஞானசேகரன்
வழக்கில், 'யார் அந்த சார்? என்பது தெரியாமலேயே அவசரமாக ஐந்து மாதங்களில்
வழக்கை நடத்தி, 30 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது போல்,
இவ்வழக்கிலும், 'யார் அந்த உயர் அதிகாரி? என்ற கேள்விக்கு விடை
தெரியாமலேயே, அவசர கதியில் வழக்கு நடத்தி, போலீசார் மட்டுமே
தண்டிக்கப்பட்டு விடக்கூடாது.
இச்சம்பவத்தை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு, நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் வரையாவது பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அவரின் சாட்சியும், மருத்துவர்களின் சாட்சியும் மட்டுமே போதும்... இப்படுகொலையை செய்த போலீசாருக்கு தண்டனை வாங்கித் தர!
அத்துடன்,
போலீசார் மற்றும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த காவல் துறை உயர்
அதிகாரிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் சி.பி.ஐ.,
விசாரணை செய்து, அவர்களுக்கும் தண்டனை வாங்கி தந்தால் தான், இதுபோன்ற
சட்ட விரோதமான லாக் - -அப் மரணங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்!