PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM
எஸ்.ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'பெற்றோர் செய்த பாவம், பிள்ளைகள் தலையிலே' என்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல, நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற போது, அந்த விடுதலைக்கு அடிகோலியவர்கள் செய்த மாபெரும் பிழையை, இன்று நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையில்லை.
இந்தியாவை துண்டித்து, பாகிஸ்தான் என்று ஜின்னா பிரிந்து சென்றாரோ, நாமும் அன்றே ஹிந்துஸ்தான் என அறிவித்திருந்தால், நமக்கு இந்த அளவுக்கு பொருள் நஷ்டம், உயிர் நஷ்டங்கள், எல்லை பிரச்னைகள் உண்டாகி இருக்காது; நாடு பல விஷயங்களில் எப்போதோ முன்னுக்கு வந்திருக்கும். அந்த பெருமையும், புகழும் விடுதலை பெற்று தந்த காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்திருக்கும்.
அதை விடுத்து, இந்தியாவை, மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தனர். இதுதான், இன்று வரை தொடரும் பல பிரச்னைகளுக்கு காரணம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன், 'மதச்சார்பற்ற நாட்டை மதவாத நாடாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக அரசு பதவிகளில் இருக்கும் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்' என்று நேரடியாக சொல்ல தைரியமின்றி, மறைமுகமாக பா.ஜ.,வை குறி வைத்து குதறி இருக்கிறார்.
மதச்சார்பற்ற நாடு என்ற போர்வையை போர்த்திய உங்களால், காஷ்மீருக்கு கொடுத்திருந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கி, இந்த நாட்டின் ஒரு மாநிலமாக சேர்க்கவோ, அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தை ஆக்கிரமித்திருந்த இடத்தை மீட்கவோ முடிந்ததா... இல்லையே?
அதற்கு தேசப்பற்றும், இறை பக்தியும் இணைந்த பா.ஜ., என்ற அரசியல் கட்சி தானே தேவையாக இருந்தது. எனவே, காங்., ஆட்சியில் 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை, 10 ஆண்டுகளில் செய்த பா.ஜ.,வை குறை கூற, யாருக்கும் தகுதியில்லை.
தனியார் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்!
ஆ.பட்டிலிங்கம்,
பேரூர், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:கடந்த 2011ல், கருணாநிதி
முதல்வராக இருந்த போது, அனைவருக்கும் இலவச டிவி வழங்கினார். ஆனால்,
செட்டாப் பாக்ஸ் வழங்கப்படவில்லை. அப்போது, கருணாநிதியின் குடும்ப
உறவினரின் கேபிள் நிறுவனம் தான் கொடி கட்டிப் பறந்தது.
கருணாநிதி
அரசு பணத்தில் டிவி வழங்கினார்; ஆனால், அதற்கு கேபிள் இணைப்பு கொடுத்ததன்
வாயிலாக, அவரது உறவினர் குடும்பம் மாதந்தோறும் பல நுாறு கோடிகளை
சம்பாதித்தது.
அதன்பின் முதல்வராக வந்த ஜெயலலிதா, அரசு கேபிள்,
'டிவி' நிறுவனம் வாயிலாக, செட்டாப் பாக்ஸ் வழங்கி, குறைந்த கட்டணத்தில் பல
சேனல்களை இலவசமாக பார்க்கும்படி செய்தார்.
இதன் வாயிலாக
தனியாருக்கு சென்று கொண்டிருந்த பல கோடி ரூபாய், அரசு கஜானாவுக்கு திருப்பி
விடப்பட்டது. இந்த நடைமுறை, பழனிசாமி முதல்வராக இருந்த வரை தொடர்ந்தது.
மீண்டும்
தி.மு.க., ஆட்சி வந்ததும், நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்த, அரசு
கேபிள் டிவி நிறுவனத்தை முடக்கி விட்டு, மீண்டும் தனியார் செட்டாப்
பாக்சுக்குமுன்னுரிமை கொடுக்க துவங்கி விட்டனர். இதற்கென, டெண்டர் எதுவும்
அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை.
இதன் வாயிலாக, அரசுக்கு வர
வேண்டியதொகை திசை மாறி தனியாருக்கு சென்று கொண்டிருக்கிறது. செட்டாப்
பாக்ஸ் கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தி விட்டனர். இப்படி, அதிகமாக
கட்டணம் வசூல் செய்கின்றனரே... சிறப்பு அம்சங்கள் எதுவும் உள்ளதா என்றால்
அதுவும் இல்லை.
எனவே, இத்துறையில் தனியாரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும்,
தமிழக அரசு அனைத்து வசதிகளும் உள்ள செட்டாப் பாக்சுக்கு டெண்டர் விட்டு,
குறைந்த கட்டணத்தில் சேனல்களை பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
கொள்ளையடிப்பதை நிறுத்துங்களேன்!
ஆர்.பிரேம்
சுதாகர், பெரிய குளம், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஓட்டுக்காக
ஒரு பக்கம் இலவச மின்சாரம் கொடுத்துவிட்டு மறுபுறம் கட்டண உயர்வு என்று
தமிழக மின்சார வாரியம் மக்களை கசக்கி பிழிகிறது. மின் கட்டணம் செலுத்த ஒரு
நாள் தாமதமானால் கூட, 150 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
இரண்டு
மாதத்திற்கு, 100 ரூபாய் கூட மின் கட்டணம் கட்ட இயலாத பல குடும்பங்கள்
உள்ளன என்பது தமிழக அரசுக்குத் தெரியாதா? அந்த 100 ரூபாயை செலுத்த ஒரு நாள்
தாமதமானால், 150 ரூபாய் அபராதம் விதித்து, 250 ரூபாயாக வசூலிப்பது
நியாயமா? இது அப்பட்டமான கொள்ளை அல்லவா?
இப்படி அநியாயமாக கொள்ளை
அடிப்பதை விட்டுவிட்டு, மின் கட்டணம் செலுத்த குறிக்கப்பட்ட கடைசி நாள்
முதல், மின் கட்டணம் செலுத்தும் வரை நாள் ஒன்றுக்கு, 5 ரூபாய் அல்லது 10
ரூபாய் அபராதமாக வசூலிக்கலாம் அல்லது மின் கட்டணத்தில் மொத்தமாக, 10 சதவீத
தொகையை கூடுதலாக அபராதம் என்ற பெயரில் வசூலிக்கலாம்.
இதை
விட்டுவிட்டு அபராதம் என்ற பெயரில் தமிழக மின் வாரியம் மக்களிடம்
கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும். மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்
கப்படும் என்ற தன் தேர்தல் வாக்குறுதியை, தி.மு.க., நிறைவேற்ற வேண்டும்.
எங்கே செல்லும் இந்த பாதை?
ஆர்.ரபீந்த்,
பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: தமிழக கவர்னர் ரவி, கேரள கவர்னர் ஆரிப்
முகமது கான், தெலுங்கானா கவர்னர் தமிழிசை மூவரும் தங்கள் மாநிலங்களில்
பா.ஜ., செய்தி தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர் என்றும், பத்திரிகைகளில்
யார் பெயர் அதிகம் வர வேண்டும் என்பதற்காக போட்டி போடுகின்றனர் என்றும்,
தமிழக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இவருக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தி.மு.க.,வினருக்குமே கவர்னர் என்றாலே பயங்கர அலர்ஜி தான்.
கவர்னர்களுக்கென்று
சில அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்களையும் கைப்பற்றி சுருட்டலாம் என்ற
ஒரே ஆசை தான், இவர்கள் இப்படி பேச காரணம்.
மேலும், 'தமிழக
மக்களின்கோரிக்கைக்காக கவர்னர் எப்போதாவது டில்லி சென்றுள்ளாரா?' என்று,
ரகுபதி கேட்கிறார். கவர்னர் ஏன் செல்ல வேண்டும்?
நாட்டுக்கும்,
நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதற்கு தான், ரகுபதியையும்,
தி.மு.க.,வினரையும், மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனரே... அவர்கள் செய்ய
வேண்டியது தானே!
ஆட்சியில் அமர்ந்து விட்டால், ஆக்கப்பட்ட பொருட்கள்
அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என அமைச்சர் ரகுபதி நினைக்கிறார். எங்கே
செல்லும் இந்த பாதை?

