/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உலக நாடுகளை அதிரவிடும் பிரம்மோஸ்!
/
உலக நாடுகளை அதிரவிடும் பிரம்மோஸ்!
PUBLISHED ON : மே 19, 2025 12:00 AM

எஸ்.ராஜேஷ்,
அவினாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆப்பரேஷன்
சிந்துார்' வெற்றிகரமாக முடிந்தது மட்டுமல்லாமல், நம் ஏவுகணைகளுக்கு
சர்வதேச வாடிக்கையாளர்களையும் பெற்று தந்துள்ளது.
பாகிஸ்தானை நோக்கி, 15 பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்களை இந்தியா நடத்தியது. அதில் ஒன்றை கூட பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை.
காரணம், ஒலியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும், 'சூப்பர்சோனிக்' எனப்படும் நம் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை!
இந்த
ஏவுகணையை பிலிப்பைன்சுக்கு மட்டுமே இந்தியா வழங்கியுள்ளது. வியட்நாமும்
அதை வாங்க ஆர்வம் காட்டுகிறது. காரணம், சீனாவுக்கு எதிராக தங்கள் கடல்
எல்லையை பாதுகாக்க இரு நாடுகளுக்கும் பிரம்மோஸ் தேவைப்படுகிறது.
ஆப்பரேஷன்
சிந்துாருக்கு பின், தற்போது சவுதி அரேபியா, மலேஷியா, பிரேசில், சிலி,
அர்ஜென்டினா, எகிப்து, கத்தார், ஓமன் போன்ற நாடுகளும் இதை வாங்க ஆர்வம்
காட்டுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதில் உள்ள சில
இஸ்லாமிய நாடுகள், ஒரு காலத்தில் காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானை
ஆதரித்தவை!
ஆப்பரேஷன் சிந்துார் இந்தியாவிற்கு வெற்றியை மட்டும்
பெற்றுத்தரவில்லை; நம் நாட்டில் தயாரான பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற
ஏவுகணைகளுக்கு மதிப்பையும் தேடி தந்துள்ளது.
'சீனாவின் எச்.க்யூ., -
9 ஏவுகணை, இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் எல்லைக்குள் கூட நுழைய
அனுமதிக்காது' என்று இறுமாப்பாக கூறினார், பாகிஸ்தான் முன்னாள் ஜெனரல்
பஜ்வா.
ஆனால், இந்திய தயாரிப்புகளான பிரம்மோஸ், ஆகாஷ், அக்னி, பராக்
- 8 மற்றும் ஸ்காலப் ஏவுகணைகள் சீனாவின் எச்.க்யூ - 9 தடுப்பு ஏவுகணை, ஜே
-17, ஜே -10சி., அமெரிக்காவின், யு.எஸ்.எப்., -16 போன்ற போர் விமானங்களை
துவம்சம் செய்துள்ளன.
பாகிஸ்தானின் மிக முக்கிய விமான தளங்களான
நுார் கான், சர்கோதா போன்றவை பிரம்மோஸால் கடுமையாக தாக்கப்பட்டதே,
அந்நாட்டை பணிய வைத்துள்ளது.
அர்ச்சுணனின் ஆயுதமான பிரம்மாஸ்திரம்
சக்தி வாய்ந்தது என்று மஹாபாரதத்தில் படித்திருக்கிறோம். ஆனால், இந்த
பிரம்மோஸ் அதை விடவும் சக்தி வாய்ந்தது போலும்!
இதில், பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரம்மோஸின் திட்ட இயக்குநராக இருந்தவர் விஞ்ஞானி ஆ.சிவதானு பிள்ளை என்ற தமிழர்.
இது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையே!
ஆழம் தெரியாமல் காலை விடும் சந்தானம்!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் தி.மு.க., இடம் பிடிக்க காரணமாக இருந்தவர், எம்.ஜி.ஆர்.,!
தான் நடித்த படங்களில் திராவிட கொள்கையை பேசி, கட்சியை வளர்த்தார். தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., விலக்கப்பட்ட பின், அக்கட்சிக்காக களம் இறங்கிய எத்தனையோ நடிகர்கள் காணாமல் போயினர்.
அவர்களில் ஒருவர் தான், தமாஷ் நடிகர் வடிவேலு!
கடந்த 2011ல் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் பிரசாரம் செய்த வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்தை அநாகரிகமாக விமர்சனம் செய்தார்.
அவரது நாகரிகமற்ற பேச்சுக்கு விஜயகாந்த் தரப்பினர் எதிர்வினை ஆற்றவில்லை. 'அற்பனின் பேச்சு, அரைக்காசுக்கும் லாபம் இல்லை' என்பது போல், வடிவேலுவின் பேச்சிற்கு பெரிதாக மதிப்பும் கொடுக்கவில்லை.
அத்தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
அரசியல் - சினிமா என தமிழகத்தை அதிர விடலாம் என்று கனவு கண்ட வடிவேலு, அதன்பின் காணாமல் போனார்.
'அரசியலும் போச்சு; சினிமாவும் போச்சு' என அவரை கண்ணீர் விட வைத்து விட்டனர், தமிழக மக்கள்.
வடிவேலுவை போன்று இன்று சந்தானமும், தி.மு.க.,வின் அரசியல் பேச்சாளராக களம் இறங்க துடித்துக் கொண்டிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, சினி மாவில் கால் பதித்து, கதாநாயகனாக வளர்ந்துள்ள சந்தானம், 'தலைமை விரும்பினால், வரும் சட்டசபை தேர்தலில்தி.மு.க.,வின் வெற்றிக்கு பிரசாரம் செய்வேன்' என்று அறிவித்துள்ளார்.
சினிமா துறையில் நீடித்திருக்க தி.மு.க., முக்கியஸ்தரின் ஆதரவு, அனுசரணை தேவை தான்; அதற்காக தன்னையே பலிகடாவாக்க கிளம்புவது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்!
தி.மு.க.,வை நம்பி அரசியலில் களம் இறங்கி, காணாமல் போன நடிகர்கள் அனேகர்.
பாவம் சந்தானம்... வளரும் நடிகர். ரசிகர்களை சிரிக்க வைத்தவர், இனி, அரசியல் மேடைகளில் தவளை போல் பேசி, சந்தி சிரிக்காமல் தப்பினால் சரி!
இது தான் மதச்சார்பின்மையா?
எஸ்.பி.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது' போல், ஹிந்து அறநிலையத் துறை என்ற பெயரில், கோவில் உண்டியல் பணம், அரசு வருமானத்தில் சேர்க்கப்பட்டு கண்டபடி செலவு செய்யப்படுகிறது.
ஹிந்துக்கள் ஏன் கோவில் உண்டியலில் பணம் செலுத்துகின்றனர்? பல்வேறு குடும்ப பிரச்னைகள், தனிப்பட்ட விருப்பங்கள், நோய் உபாதைகள், பரிகாரம் என பல்வேறு பிரச்னைகள் தீர கடவுளிடம் வேண்டி, சிறுக சிறுக பணம் சேர்த்து, பிரச்னை தீர்ந்தவுடன் அதை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அப்பணம், கோவிலை பராமரிக்கவும், பூஜைகள், விழாக்கள் நடத்தவும் பயன்படுத்த வேண்டுமே தவிர, அரசு அதை எடுத்து, தன் கஜானாவில் வைத்துக்கொண்டு, பிற மதத்தினருக்கு பங்கிட்டு தருவது எந்த வகையில் நியாயம்?
வக்ப் வாரிய பணம், சர்ச்சுகளின் வாயிலாக வசூலாகும் பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படுகிறதா... பின் ஏன் கோவில் பணம் மட்டும் அரசு கஜானாவில் சேர்க்கப்படுகிறது?
வீட்டில் பணத்தை வைக்க முடியாமல், கோவில் உண்டியலில் எந்த ஹிந்துவும் பணத்தை போடுவதில்லை. தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த, சிறுக சிறுக சேமித்த தொகையை செலுத்துகின்றனர். அதை இப்படி எல்லாருக்கும் பங்கு போடும் உரிமையை அரசுக்கு யார் தந்தது?
அதேநேரம், மக்கள் வரிப்பணத்தில் கிறிஸ்துவர்கள் வாடிகன் செல்வதற்கும், இஸ்லாமியர் மெக்கா செல்வதற்கும் பணம் கொடுக்கும் அரசு, ஹிந்துக்கள் தீர்த்த யாத்திரை செல்ல ஏன் கொடுப்பதில்லை?
இதற்கு பெயர் தான் மதச்சார்பின்மையா?