PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

எம்.பெரியகருப்பன், நெல்லையில் இருந்து எழுதிய, இ - மெயில்' கடிதம்: நாடு முழுதும், ஆறு தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடாத மற்றும் தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாத, 475 கட்சிகளின் பதிவை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட, 42 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், மனிதநேய மக்கள் கட்சி, கடந்த மூன்று தேர்தல்களில், தி.மு.க., கூட்டணியில், அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
அதேபோன்று, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைந்து, இக்கட்சி தேர்தலை சந்தித்து வந்தது.
கடந்த 2021ல் அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்திலும், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் தாமரை சின்னத்திலும் போட்டியிட்டது.
இப்படி சிறிய கட்சிகள் பிரதான கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, இப்போது, தேர்தல் கமிஷனால் தங்கள் கட்சிகள் ரத்து செய்யப்பட்டதும் புலம்பி வருகின்றன.
'தலைமை தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட, 400 கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள அபத்தங்களை, தேர்தல் ஆணையம் செய்யும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறார். அதை திசை திருப்ப, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.
மனித நேய மக்கள் கட்சிக்கு என்று தனியாக சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால், இந்நிலை வந்திருக்குமா?
கூட்டணியின் தலைமை கட்சி, தங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தால், 'எங்கள் கட்சி அடையாளத்தை விட்டு தர முடியாது...' என்று உறுதியாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டியது தானே... ஏன் மறுக்கவில்லை?
காரணம், கட்சியை காட்டிலும், பணமும், வெற்றி பெறுவதன் வாயிலாக கிடைக்கும் அதிகாரமும் பெரிதாக இருந்துள்ளது. இப்போது அங்கீகாரம் ரத்து என்றதும் புலம்பி என்ன பயன்?
அங்கீகாரம் ரத்தாகும் என்று தெரிந்திருந்தும், அந்த தவறை செய்து விட்டு, தேர்தல் கமிஷனை குற்றம் சொல்வதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?
படித்தால் மட்டும் போதாது... நேர்மை வேண்டும்! கோ.பாண்டியன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கல்வி தான்
அனைவரையும் உயர்த்தும்; எம்.பி.,யாக, மத்திய அமைச்சராக இருந்திருக்கிறேன்
என்றால், அது நான் படித்த கல்வியால் தான். அதனால், உங்கள் பிள்ளைகளை
படிக்க வையுங்கள்.
கல்வியும், அதிகாரமும் தான் உங்கள் குழந்தைகளை
காப்பாற்றும். வருங்காலத்தில் அறிவு மட்டும்தான், இந்த உலகத்தை ஆட்சி
செய்யும். அதை நோக்கி உங்கள் பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள்' என்று
பேசியுள்ளார், தி.மு.க., - எம்.பி., ராஜா.
கல்வி தான் அனைவரையும்
உயர்த்தும் என்பது உண்மை தான். ஆனால், அக்கல்வியை கற்றவர் நல்லவராகவும்,
நேர்மையாளராகவும் இருந்தால் மட்டுமே, அது, இந்த சமுதாயத்திற்கு நல்ல
விதத்தில் பயன்படும்.
ராஜா பெற்ற கல்வி அவரை எம்.பி.,யாகவும்,
மத்திய அமைச்சராகவும் ஆக்கியது என்றால், 'ஸ்பெக்ட்ரம் 2ஜி' ஊழலுக்கும்,
அவர் கற்ற கல்வியும் அதிகாரமும் தான் காரணம்!
அதுமட்டுமா... அவர் பெற்ற கல்வியும், அதிகாரமும் என்ன விளைவுகளை
ஏற்படுத்தியது என்று, மர்மமாக இறந்த இந்திய தொழில்முனைவோர் மற்றும் ரியல்
எஸ்டேட் நிறுவனமான கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சாதிக்
பாட்சா குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே நன்கு தெரியும்!
'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்கிறார் வள்ளுவர்.
கற்றால் மட்டும் போதாது; தான் கற்ற கல்விக்கு ஏற்ப, அறத்தின், நேர்மையின்
வழியில் வாழ வேண்டும். அதுதான் கற்றவனுக்கு அழகு.
ஆட்டோவில் பயணியர் விட்டு சென்ற பணத்தை, நகைகளை காவல் நிலையத்தில் ஒப் படைக்கும் டிரைவர்கள்...
குப்பையில் கிடந்த நகைகளை கண்டெடுத்து, தவறவிட்டவரிடம் ஒப்படைக்கும்
துாய்மை பணியாளர்கள்... ஒரு வேளை சோற்றுக்கு உண்மையாய் உழைத்து விட்டு,
நகரத்தின் சாலை ஓரங்களில் படுத்து உறங்கும் தொழிலாளிகள்...
அரை
வயிற்றுக் கஞ்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் விவசாய கூலிகள்
போன்றோரிடம் இருக்கும் வறுமையில் வாழ்ந்தாலும், நேர்மையாக வாழ வேண்டும்
என்ற உயர்ந்த எண்ணம் கல்வியும், அதிகாரமும் பெற்ற அரசியல்வாதிகளிடம்
இல்லாமல் போனது ஏனோ?
நேருவுக்குப் பின், பிரதமர் நாற்காலியில்
அமர்ந்தவர் லால் பகதுார் சாஸ்திரி. மத்திய உள்துறை அமைச்சராக இருந்தும்,
அலகாபாதில் சொந்தமாக ஒரு கூரை வீடு கூட இல்லாமல் தவித்தவர்.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின், தன் நண்பர் ராஜேஸ்வர்
பிரசாத் என்பவருக்கு எழுதிய கடிதத்தில்,'அரசு வீட்டில் இருந்து மிகச்சிறிய
வீட்டுக்கு என் குடும்பம் இப்போது இடமாறி விட்டது.
இனிமேல், ஒரே
ஒரு காய் மட்டும் உணவில் சேர்ப்பது என்றும், பால் வாங்குவதை நிறுத்தி
விடுவது என்றும் முடிவெடுத்துள்ளோம். எங்கள் துணிகளை நாங்களே துவைத்துக்
கொள்கிறோம்' என்று, தன் குடும்பத்தின் வறுமை குறித்து எழுதியிருந்தாராம்.
ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் ஊழல் செய்து ஆயிரம், இரண்டாயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.
இன்று ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்கும் திராவிட கட்சிகளின் பெரும்பாலான
அரசியல்வாதிகள் சட்டம் படித்தவர்களும், மெத்த படித்தவர்களும் தான்!
'படித்தவன் சூதும், பாவமும் பண்ணினால், போவான், போவான்... ஐயோ என்று போவான்'
- இது சூதும், பாவமும் செய்யும் படித்தவர்களுக்கு மகாகவி பாரதி இட்ட சாபம்!
எனவே, கல்வியும், அதிகாரமும் இருந்தால் மட்டும் போதாது; அதில், நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும்!