கீதையை அறியாதவர், கீதாசாரத்திற்கு உரை எழுத முடியுமா?
கீதையை அறியாதவர், கீதாசாரத்திற்கு உரை எழுத முடியுமா?
PUBLISHED ON : மே 15, 2026 12:44 AM

ஆர்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி, நாட்டின் நலன் கருதி, 'தங்கம் கொள்முதல் செய்வதை குறையுங்கள்; மின்சாரம் மற்றும் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; சுதேசி பொருட்களை வாங்குங்கள்' என்றும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும்படியும், உணவு மற்றும் எண்ணெய் சேமிப்பை கடைப்பிடிக்குமாறும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறும் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவர் அறிவுரை தான் கூறியுள்ளாரே தவிர, 'எவரும் உணவு உண்ணாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள், வெளியில் செல்லாதீர்கள்' என்று சொல்லவில்லை.
'இந்த பாதை சேதமடைந்துள்ளது; இந்த வழியாக செல்லாதீர்கள்' என்று நெடுஞ்சாலை துறையினர் மக்களை எச்சரிக்கை செய்து பலகை வைப்பது போல், பிரதமர் மோடியும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் மனோபாவத்தை பொறுத்தது.
ஆனால், அந்த ஆலோசனையை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள் என, பிரதமர் மோடி கூறியது அறிவுரை அல்ல. இது, அவரது தோல்விக்கான ஆதாரங்கள். நாட்டின் நலனில் சமரசம் செய்துள்ள அவருக்கு, இனி நாட்டை வழிநடத்த தகுதி இல்லை. அவசரகால திட்டங்களை உருவாக்காமல், மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவது பொறுப்பற்ற செயல்' என்று விமர்சித்துள்ளார்.
அவசரகால திட்டம் என்றால் என்ன? தங்கத்தை மத்திய அரசே பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி, மக்களுக்கு தானம் அளிக்க வேண்டுமா அல்லது அமெரிக்கா - ஈரான் போரால் வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைவதை தடுத்து, அவற்றை மொத்தமாக வாங்கி, அங்கிருந்து டியூப் போட்டு இங்கு வினியோகிக்க வேண்டுமா? எண்ணெய் கப்பல்களை தடுத்து நிறுத்தும் ஈரான் மீது அணு ஆயுதத்தை வீசி, அந்நாட்டை அழித்து எண்ணெய் கப்பல்களை இந்தியா விடுவிக்க வேண்டுமா? மக்களை காக்க, ராகுல் தன் கைவசம் வைத்திருக்கும் அந்த அதி அற்புதமான அவசரகால திட்டம் என்னவென்று கூறலாமே!
கடந்த 2013ல் காங்., ஆட்சியில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தங்கம் வாங்காதீர்கள் என்று மக்களை கேட்டுக்கொண்டார், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். அவர் பொறுப்பற்று தான் இப்படி கூறினாரா?
படிப்பறிவு இல்லாதவர்கள் கூட, மொபைல் போன் வழியாக, அமெரிக்கா - ஈரான் போரால் உலக நாடுகளின் பொருளாதாரம் இன்று ஆட்டம் கண்டு கொண்டுள்ளதை அறிந்துள்ளனர்.
இந்த அசாதாரணமான சூழ்நிலையில், அத்தியாவசிய தேவை பாதிக்காத அளவு நாட்டை திறம்பட நடத்தும் மோடியை பாராட்ட மனம் இல்லை என்றாலும், நாட்டை வழிநடத்த தகுதியில்லை என்று விமர்சிப்பது, கீதையின் அரிச்சுவடி அறியாதவன், கீதாசாரத்திற்கு உரை எழுதுவது போல் உள்ளது!
பாவம் கழகத்தினர்!
ஆர்.சேஷாத்திரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: கடந்த 1970 காலகட்டத்தில், ஆடுதுறை விவசாய பண்ணையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நெற்பயிருக்கு, 'அஞ்சுகம்' என்று, தன் தாயின் பெயரை வைத்தார், அப்போதைய முதல்வர் கருணாநிதி.
அதுகுறித்து, 'துக்ளக்' பத்திரிகையில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'மக்கள் பணத்தை மந்திரிகள் சாப்பிடுவது போல், மந்திரிகளின் குடும்பத்தார் பெயரை மக்கள் சாப்பிடட்டும் என்று கருணாநிதி நினைத்து விட்டார் போலும்' என்று பதில் அளித்து இருந்தார், அப்பத்திரிகையின் ஆசிரியர், சோ.
இந்த பதிலைப் போல் தான், நடந்து முடிந்த தேர்தலில், மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, திராவிட கட்சிகள் அவர்களிடமே திரும்பிக் கொடுத்துள்ளன.
ஒரு காலத்தில் மக்கள் காசு வாங்காமல் ஓட்டு போட்டனர்; அதன்பின், கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தல் வரை காசு வாங்கிக் கொண்டே ஓட்டு போட்டனர். இப்போதோ பணத்தை வாங்கிக்கொண்டு, வேறு கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் விடாக்கண்டனாக பணத்தை கொடுத்து ஓட்டுகளை அறுவடை செய்ய நினைத்தனர்; மக்களோ கொடாக்கண்டனாக, பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்கு எந்த கட்சி நல்லது செய்யும் என்று நினைத்தனரோ அந்த கட்சிக்கு ஓட்டுபோட்டு விட்டனர்.
அரசியல்வாதிகளிடம் உள்ள பணம் எல்லாம் கொள்ளையடித்தது தானே... கொடுக்கட்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்து விட்டது.
கர்மா எவரையும் விட்டுவிடுவதில்லை... திருப்பரங்குன்றம் தீபத்துாணில் விளக்கேற்ற விடாமல் தடுத்த கட்சி, இன்று விடியலை காணாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம், நாள்தோறும் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என்று, எதையும் கண்டுகொள்ளாமல் விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார், ஸ்டாலின்.
அத்துடன், சட்டசபை தேர்தலை ஆரிய - திராவிட போர் என்றும், டில்லிக்கும் தமிழகத்துக்குமான யுத்தம் என்றும் கூறி பிரிவினை பேசினார். தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறது என்பதை மறந்து, 'தமிழகம் அவுட் அப் கன்ட்ரோல்' என்றார்.
விஜயின் அரசியல் கொள்கை குறித்து பேசா மல், அவரை மட்டம் தட்டி பேசினார்; இவை எல்லாம் ஒன்று சேர்ந்து இன்று, தி.மு.க.,வை 'ரெஸ்ட்' எடுக்க வைத்து விட்டது.
'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று; இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று!' எனும் கண்ணதாசன் பாடலைப் போல், தங்களை வெல்வார் எவரும் இல்லை என்பதுபோல் இறுமாப்புடன் இருந்த இரு திராவிட கட்சிகளும், விஜயின் வரவால் வீழ்ந்து விட்டன!
அடையாளம் காட்டியதற்கு நன்றி!
பி.கணேஷ்,கோவிலாம்பூண்டி, சிதம்பரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்தை பார்க்கும் போது, இங்குள்ள அரசியல் களம் அயோக்கியர்களின் கூடாரமாக, பொய்கள், துரோகத்தின் அடையாளமாகவே இருக்கிறது.
இவர் தான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி ஓட்டு போட்டவர்கள் கூட, தமிழக அரசியல்வாதிகளின் இந்த குள்ளநரி தந்திர சதிராட்டத்தைக் கண்டு எரிச்சல் அடைந்துள்ளனர் .
பதவிக்காக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்; எப்பேர்ப்பட்ட சமரசத்தையும் செய்து கொள்ளலாம் என்ற அரசியல் பழம், 'பெருச்சாளிகளின்' எண்ணம், தற்போது, விஜயின் அரசியல் வருகையால் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
இதுவும் ஒருவகையில் நல்ல விஷயம் தான்!
தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற என்னவெல்லாம் பேசினர் என்பதை மறந்து விட்டு, கடைசியில், 'நாங்கள் எல்லாருமே ஒரு கூட்டணி தான்' என்பதை நிரூபித்து விட்டனர்.
தமிழக அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளம் காட்டிய முதல்வர் விஜய்க்கு நன்றி!
