தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?

 முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?

 முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?


PUBLISHED ON : ஏப் 04, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2026 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டது; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் போன்றோர் முதல் நாளிலேயே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவ்வகையில், ஸ்டாலின் தன் வேட்பு மனுவில் அசையும் சொத்தாக, 3 கோடியே, 31 லட்சம் ரூபாயையும், அசையா சொத்தாக, 2 கோடியே, 96 லட்சம் ரூபாய், கையிருப்பு, 10,000 ரூபாய் இருப்பதாகவும், சொந்தமாக வாகனங்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரின் மகன், சட்டசபை உறுப்பினர், சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்தவர், தற்போது, தி.மு.க., தலைவராக, முதல்வராக இருப்பவரின் சொத்து மதிப்பு இவ்வளவு தான் என்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.

முதலில், வேட்பாளர்களுக்கான நேர் காணலில், எவராவது ஒருவர் இதுபோன்ற சொத்து மதிப்பைக் கூறினால், ஸ்டாலின் அவரை தேர்வு செய்வாரா?

அப்படியிருக்கும் போது, ஸ்டாலின் தன் வேட்பு மனுவில் கூறியிருக்கும் சொத்து விபரம், தேர்தல் ஆணையத்தையும், ஓட்டு போடும் மக்களையும் முட்டாளாக்க நினைக்கும் முயற்சி அன்றி வேறென்ன?

இதுபோன்று தான், அமைச்சர் நேருவும் தன் வேட்பு மனுவில், சில கோடி ரூபாய் சொத்து மதிப்பையே காட்டியுள்ளார். சமீபத்தில், அரசுப் பணி நியமன ஊழலில் மட்டும் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் சுருட்டியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளதே... அப்பணம் எங்கே ஒளிந்துள்ளது?

கள்ளக் கணக்கு காட்டுவதில் கரை கண்ட தி.மு.க.,விற்கு இணையாக, கதை புனைந்துள்ளவர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்.

அவர் காட்டியுள்ள சொத்து மதிப்புகள் ஓரளவு நம்பும்படியாக இருந்தாலும், தன் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் அனைவருக்கும் கடன் கொடுத்துள்ளதாக கூறியிருப்பதை அறியும் போது, இது ஒன்றும் சைவ பூனை அல்ல; இதுவும் ரத்த ருசி காண துடிக்கும் காட்டுப் பூனை என்றே எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக அனைத்து வேட்பாளர்களுமே, தங்கள் ஆடிட்டரின் அறிவுரையின்படி தான் சொத்து விபரங்களை வேட்பாளர் மனுவில் மட்டுமின்றி, வருமான வரிக் கணக்குகளிலும் காட்டுவர்.

ஆனாலும், கொடுக்கப்படும் விபரங்கள், ஓரளவேனும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்று, ஓட்டு போடுபவர்கள் எதிர்பார்க்க மாட்டார்களா?

வேட்பாளர் மனு எனும் பிள்ளையார் சுழி போடும் போதே, இப்படி பொய் தகவல்களை அளிப்போர், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் எப்படி நேர்மையான ஆட்சியை தருவர்?

திருமாவின் கனவு பலிக்குமா?


கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிதம்பரம் தொகுதி எம்.பி.,யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை துவங்கிய போது, அக்கட்சியில் ஹிந்துத்துவ எதிர்ப்பு கொள்கை கிடையாது; அதில் இஸ்லாமியர்கள் இருந்ததும் இல்லை.

இந்நிலையில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில், தலித் மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்படுவது அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இதைப் பயன்படுத்தி, சில இஸ்லாமிய அமைப்புகள் வி.சி.க.,வுக்கு உதவுவது போல் உள்ளே நுழைந்து, கட்சி நிர்வாக பொறுப்புகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது.

இஸ்லாமிய திட்டங்களையும், ஹிந்து மத வெறுப்பு பிரசாரத்தையும் வி.சி.க., வாயிலாக பேச வைத்தது; ஹிந்துக்கள் நிறைந்த வி.சி.க.,வை இஸ்லாம் மதத்திற்கும்,'ரோகிங்கியா' முஸ்லிம்களுக்கும் ஆதரவாக போராட வைத்தது.

திருமாவளவனும் தலித் மக்களின் குரலாக இருப்பதைவிட, இஸ்லாமியர்களின் குரலாக இருப்பதே லாபம் என்று தீர்மானித்தார். விளைவு... இஸ்லாமியர்களின் தீவிர ஆதரவாளராக மாறிப் போனார்.

ஹிந்துக்களின் நம்பிக்கையை இழந்தாலும், இஸ்லாமியர்களுக்காக தான் இதுவரை குரல் கொடுத்தது வீண் போகாது என எண்ணி, தற்போதைய சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வனை, செய்யூர் தொகுதிக்கு அனுப்பி விட்டு, காட்டுமன்னார்கோவிலில் களமிறங்கியுள்ளார், திருமாவளவன்.

காரணம், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போனால், வி.சி.க.,வின் தயவு அக்கட்சிக்கு தேவையாக இருக்கும். அப்போது தனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் மட்டுமே ஆதரவு என்று நெருக்கடி கொடுத்து, காரியம் சாதிக்க நினைக்கிறார்.

திருமாவின் கனவு கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

தீய சக்தியின் வெற்றிக்கு பாடுபடும் நல்ல சக்தி!

செ.அ.ராகுல் கோல்டன், உதவி பேராசியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜயின் தனித்து போட்டியிடும் முடிவு, அவரது தன்னம்பிக்கையை வேண்டுமானால் வெளிப்படுத்தலாம்; அது வெற்றிக்கான சூத்திரம் இல்லை.

ஏனெனில், அரசியல் களம் என்பது வெறும் நம்பிக்கையால் மட்டும் இயங்குவதில்லை; அது கட்சியின் கட்டமைப்பு மற்றும் வாக்காளர் மனநிலை ஆகியவற்றின் மீது அமைகிறது.

இவை எதையும் பொருட்படுத்தாமல் எடுக்கும் முடிவு, பெரும்பாலும் தவறான கணிப்பாக மாறியுள்ளது என்பதே கடந்த கால அரசியல் வரலாறு.

மேலும், கூட்டணி வாயிலாக ஓட்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. அதை தவிர்த்து தனித்து நிற்பது, ஓட்டுகளை பிரிக்கத் தான் வழிவகுக்குமே தவிர, வெற்றி கோட்டை தொட முடியாது.

மக்கள் மத்தியில் கட்சியை ஆழமாக வேரூன்றாமல், வலுவான கட்டமைப்பு இல்லாமல் தனித்து போட்டியிடுவது என்பது, தற்கொலைக்கு சமம்!

இது வெறும் தோல்வியில் மட்டும் முடிவதல்ல; எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கும் தடையாக அமையும்!

த.வெ.க., தலைவர் விஜய், தான் ஏறும் பொதுக் கூட்ட மேடையில்,'வரும் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி; ஒன்று, த.வெ.க., இன்னொன்று, தி.மு.க.,' என்று கூறுவார்.

அவ்வகையில், தேர்தலில் தனித்து களம் காணுவதன் வாயிலாக, அவர் கூறும் தீய சக்தி தி.மு.க.,வின் வெற்றிக்கு வழியமைத்து கொடுத்து விடுவாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us