PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

முனைவர், வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்பது பழமொழி. ஆனால், போராடினால்தான் பிழைக்க முடியும் என்பதுபோல், தமிழகத்தில் பயிர் காக்கும் விவசாயி முதல், உயிர் காக்கும் மருத்துவர் வரை தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட போராட வேண்டியுள்ளது.
கடந்த 2009க்கு முன் பணி நிறைவு செய்தவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளதால், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர், மருத்துவர்கள்.
அத்துடன், 'புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களின் சம்பளம், குமாஸ்தாவின் ஊதியத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது' என்று நீதிமன்றமே சுட்டிக் காட்டிய பின்பும், தமிழக அரசு கல் நெஞ்சோடு இருப்பது வருத்தமாக உள்ளது என்று, அரசு டாக்டர்களுக்கான போராட்டக் குழு தலைவர் கூறியுள்ளார்.
சமீபத்தில், மருத்துவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய தமிழக முதல்வர், டாக்டர்களின் உயிர் காக்கும் பணியை சிலாகித்து பேசினார். வெறும் பாராட்டு, சோறு போடுமா?
'கழகத்தினரை பொறுத்தவரை மேடை ஏறினால், ஆறு போல பேச்சு; கீழ இறங்கி வந்தால் சொன்னதெல்லாம் போச்சு' என்பார் கண்ணதாசன். அவர் கூறியது போன்றுதான் முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில், 500 வாக்குறுதிகளுக்கு மேல் கொடுத்து, அதில் பாதிக்கு மேல் நிறைவேற்றிவிட்டதாகக் கூறி, அவரே பெருமைபட்டுக் கொள்கிறார். மக்கள் என்ன விண்வெளியிலா இருக்கின்றனர்... இவர் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்பது தெரியாமல் போக!
எது எப்படியோ, உயிரைக் காக்கும் டாக்டர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது, ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல; எனவே, வெறும் வாய்ப்பந்தல் போடாமல், அவர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தி, புதிய மருத்துவ பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க ஆவன செய்து, தான் வெறும் வாய்ச்சொல் வீரர் இல்லை என்பதை முதல்வர் நிரூபிக்க வேண்டும்!
உரிமை இல்லையா?
டி.ஈஸ்வரன், சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா
விசுவாசி களையும், தி.மு.க., எதிர்ப்பாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
பா.ஜ., மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து, 2026ல் வளமான வெற்றிக்
கூட்டணியை அமைத்து, அ.தி.மு.க.,வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல
வேண்டும்' என்று முன்னாள் மேயர், சைதை துரைசாமி அ.தி.மு.க.,வுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது குறித்து, 'துரைசாமி வேலை வெட்டி
இல்லாதவர்; அனைத்துக் கட்சி தலைவர்களின் தொடர்பில் இருப்பவர். எங்கோ
அமர்ந்து கொண்டு யாரையோ திருப்திப்படுத்த இப்படி கருத்து சொல்கிறார்' என்று
கூறியுள்ளார், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி.
கடந்த
2021 சட்டசபைத் தேர்தலில், வேப்பனபள்ளி தொகுதியில், தான்
போட்டியிடாவிட்டால், வேறு எவராவது போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆகி விடுவர்.
அ.தி.மு.க. ஆட்சி அமைத்தால், தருமபுரி மாவட்ட பிரதிநிதித்துவம்
அடிப்படையில், அமைச்ச ராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போய்விடுமே
என்று, ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, சட்டசபை தேர்தலில்
போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனவர் முனுசாமி.
பேராசை காரணமாக, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்; அது, தி.மு.க.,வுக்கு சாதகமாகி விட்டது.
எம்.ஜி.ஆர்.,
ஆட்சிக் காலத்தில், அன்றைய காவேரிப்பட்டினமான இன்றைய வேப்பனபள்ளி
தொகுதியில், மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ., வாக இருந்தவர் டாக்டர்
சமரசம். பேச்சுத் திறமை மிக்கவர். இவரைப் போன்ற விசுவாசிகளுக்கு எம்.பி.,
அல்லது எம்.எல்.ஏ., பதவி கிடைக்க முனுசாமி சிபாரிசு செய்திருக்கலாம்.
அதைவிடுத்து,
தி.மு.க., வினருக்கு தன் பதவி கிடைத்தாலும் பரவாயில்லை;
அ.தி.மு.க.,வினருக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்
முனுசாமி.
இவரைப் போல் அமைச்சர் கனவில், தன் ராஜ்யசபா எம்.பி.,
பதவியை ராஜினாமா செய்து, தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்
வைத்தியலிங்கம்.
எம்.பி. பதவியை தி.மு.க.,வுக்கு விட்டுக்கொடுத்து
விட்டு, இப்போது பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழுவின்
துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நல்ல வேடிக்கை தான்!
இந்த இருவரின் ராஜினாமா கூத்து, ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்திருக்குமா?
கடந்த 1996ல் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வி
அடைந்தது. தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய, மாவட்ட வாரியாக செயல்வீரர்கள்
கூட்டத்தை கூட்டினார், ஜெயலலிதா.
அக்கூட்டத்தில் கருத்து
தெரிவித்த முனுசாமி, 'உங்களை புகழ்ந்து பேசியவர்களுக்கு பதவி
வழங்கினீர்கள். அவர்கள்தான் இப்போது துரோகியாகி விட்டனர்' என்று கட்சி
தோற்றதற்கான காரணத்தை தைரியமாக கூறினார்.
அன்று, எந்த உரிமையில்
அ.தி.மு.க., தோல்விக்கான காரணத்தை முனுசாமி சொன்னாரோ, அதே உரிமையில்தான்,
இன்று துரைசாமி ஆலோசனை சொல்கிறார். இதில் என்ன தவறு?
முனுசாமிக்கு உள்ள உரிமை துரைசாமிக்கு இல்லையா?
இதுதான் மதச்சார்பின்மையா?
ஆர்.சுகந்தன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை
சைதாப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில், வக்ப் சட்டம் மற்றும் தமிழகம்
வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
நடந்தது.
இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர்,
ப.சிதம்பரம், 'ஒரு மதத்தின் சொத்து, வழிபாடு மற்றும் நிர்வாகத்தில் அரசு
தலையிடக் கூடாது; எனவே, வக்ப் திருத்த சட்டம் செல்லாது.
'இதில்,
அரசு தலையிடுவது மிகப்பெரிய பிழை. மதச்சார்பற்ற நாட்டில், ஹிந்து ராஷ்டிரா
என்ற தவறான கொள்கையை கொண்டு வர, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,
முயற்சிக்கின்றன' என்று கூறியுள்ளார்.
இது மதச்சார்பற்ற
நாடுதானே... பின் ஏன், ஹிந்து கோவில்களுக்குள் அறநிலையத்துறை என்ற பெயரில்
அரசு அதிகாரம் செலுத்துகிறது? கோவில் நகைகளையும், நிலங்களையும், கோவில்
வளர்ச்சிக்காக பக்தர்கள் அளிக்கும் நிதியையும் அபகரிக்கிறது?
மதத்தின்
சொத்து, வழிபாடு மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கூறும்
சிதம்பரம், அதை தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கலாமே... ஏன் செய்யவில்லை?
வக்ப் வாரிய விஷயத்தில் அரசு தலையிடுவது பிழை என்றால், நாடு
சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை, காங்கிரஸ் ஏன் அதில் மூன்று முறை
சீர்திருத்தம் செய்தது?
இன்று வக்ப் சட்டத்திற்கு எதிராக
உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக கூறும் சிதம்பரம், இதுவரை ஹிந்து கோவில்
நிலங்களை பாதுகாக்க, எத்தனை சட்டப் போராட்டம் நடத்தினார்?
ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு மதத்திற்கு எதிராகவும் நடப்பதற்கு பெயர் தான் மதச்சார்பின்மையா?

