sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

/

கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

2


PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ரவிக்குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் போட்டியிடாத, 345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.

காலதாமதமான நடவடிக்கை என்றாலும், இப்போதாவது விழித்து கொண்டதே!

இந்திய குற்றவியல் சட்ட தொகுப்பான, 'இந்தியன் பீனல் கோடு' முதல், அரசியல்வாதிகளுக்கு வழங்கி கொண்டிருக்கும் அளப்பரிய சலுகைகள் வரை, நாட்டில் திருத்த வேண்டிய சமாசாரங்கள் ஏராளமாக உள்ளன.

அவற்றில், அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதும் ஒன்று!

வருமான வரி விலக்கு, அங்கீகாரம், பொது சின்னம், சின்னம் ஒதுக்குவதில் முன்னுரிமை போன்ற இன்னபிற சலுகைகளை அனுபவிப்பதற்காகவே, நாட்டில், 2,800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.

அவற்றில், இந்திய அளவில், 345 கட்சிகளும், தமிழகத்தில் மட்டும் 24 கட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தேர்தல் நேரங்களில், 'எங்களுக்கு இத்தனை சதவீதம் ஓட்டு உள்ளது. தங்கள் ஜாதியினர் தாங்கள் கைகாட்டும் கட்சிக்குத்தான் ஓட்டளிப்பர். அந்த ஓட்டுகள் அனைத்தும் உங்கள் கட்சிக்கு சிந்தாமல், சிதறாமல் வந்து சேரவேண்டுமானால், இத்தனை கோடிகளை வெட்டுங்கள்...' என்று பேரம் பேசி, பைகளை நிரப்பி கொள்ளும்!

மத்தியில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருந்த பல தில்லாலங்கடி வேலைகளுக்கு ஆப்பு வைத்துள்ளது.

அதாவது, எரிவாயு சிலிண்டர் இணைப்புகள், மத மாற்றத்திற்கென்றே இயங்கும் என்.ஜி.ஓ.,க்கள், முதியோர் இல்லம் என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உடல் உறுப்புகள் மற்றும் கண் திருட்டுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு சீலிட்டுள்ளது.

இத்தகைய முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருளீட்டி வந்த கும்பலை சேர்ந்தவர்களே, மோடியையும், பா.ஜ., அரசையும் முழு மூச்சாக எதிர்க்கின்றனர்.

அவ்வரிசையில், இனி அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேடு கட்சிகளும் இணைந்து கொள்ளும்.

பின்னே... அவர்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டால், வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பர்!



ஓட்டு போட்டது யார்?


க.கைலாஸ், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மழை பொழிந்து, வெள்ளம் அணைகளில் பெருக்கெடுத்து ஓடியும், கோவையில் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை!

கடந்த வாரத்தில்பெய்த மழை பொழிவால், சிறுவாணி, பில்லுார் அணைகள் நிரம்பி வழிகின்றன.

அதேநேரம், சிறுவாணியில், 41 அடி கொள்ளளவை எட்டுவதற்குள் தண்ணீரை திறந்து விட்டு கேரளா அரசு புண்ணியம் கட்டிக்கொள்கிறது.

மொத்தம் 50 அடி கொள்ளளவு இருக்கும் சிறுவாணி அணையில், வெறும் 41 அடி மட்டுமே தேக்க விடுவதால், கிட்டத்தட்ட 20 நாட்கள் கோவை யின் குடிநீர் தேவைக்கான நீர் வீணாகிறது.

இதை தட்டிக்கேட்பதற்கு முதல்வருக்கு தைரியம் இல்லை. ஆனால், நட்பு கரம் கோர்த்து ஒற்றுமைபாலம் அமைக்கிறார்.இவருக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தியிருப்பது, தமிழக மக்களா, கேரள முதல்வர் பினராயி விஜயனா?



கருணாநிதி ஆகமுடியுமா ராமதாஸ்!


செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடைசி வரை தி.மு.க., தலைவராக இருந்தார். அப்போது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. தன் தந்தைக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. அவர் போல் என் மகன் இல்லையே...' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதி குடும்பத்தில் பதவிக்காக சண்டை போட்டுக் கொண்டதும், அதனால், மதுரை, 'தினகரன்' பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும், அதில் அப்பாவி ஊழியர்கள் இருவர் உயிரிழந்ததும் ராமதாஸுக்கு மறந்து போனதா?

குடும்பத்தில் பதவிக்காக சண்டைகள் நடந்த போதெல்லாம், தெளிந்த அரசியல்வாதியான கருணாநிதி பத்திரிகையாளர்களை அழைத்து, அதை வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒருசமயம், கலைஞர் 'டிவி' அலுவலகத்தின் முதல் மாடியில் அமலாக்க துறையின் சோதனை நடந்தது. அதேநேரம், கீழ்த்தளத்தில் காங்., கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்திய பரந்த மனசுக்காரர் கருணாநிதி!

அவரது குடும்பத்தில் வாரிசுகளிடையே நடந்த அரசியல் சர்ச்சைகள் குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'இயற்கை தான் இதனை முடிவு செய்யும்...' என்று சாதுர்யமாக பதிலளித்தார்.

இங்கு வாரிசு அரசியல் நடத்தும் எந்த ஓர் அரசியல்வாதியும் ராமதாஸ் போன்று, தன் வாரிசை அமைச்சர் மற்றும் தலைவராக்கியதை தன் தவறு என்று மேடை போட்டு பேசியது இல்லை.

குடும்ப உறவினர்களுடன் உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை, நாள்தோறும் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்து, பக்கம் பக்கமாக அறிக்கை விடுத்து வருவதால் தான், தற்போது, ராமதாஸ் பக்கம் இருந்த தொண்டர்கள் எண்ணிக்கை நலிவடைந்து வருகிறது.

ராமதாஸின் ஒவ்வொரு அறிக்கைக்கும் எதிர்வினை ஆற்றாமல் அன்புமணி நடந்து கொள்வதால், பா.ம.க.,வினர் மத்தியிலும், பிற அரசியல் கட்சியினரிடையேயும் நன்மதிப்பைப் பெற்று வருகிறார்.

இன்றைய நிலையில் பெரும்பாலான பா.ம.க., தொண்டர்கள் அன்புமணி பக்கம் என்பதால், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேச, ராமதாஸ் இருக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு எவரும் தேடிப் போக மாட்டார்கள். மாறாக, அன்புமணி இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் பக்கம் தான் போவர்.

இதனால் சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசும் வலிமையை ராமதாஸ் இழந்துவிட்டார் என்பதே உண்மை!

நான் சுயம்புவாக உருவாக்கிய கட்சி பா.ம.க., என்று இறுமாப்புடன் கூறும் ராமதாஸ், தன் ஆணவ நடவடிக்கையால், கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார் என்பது மட்டும் நிச்சயம்!








      Dinamalar
      Follow us