தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கஷ்டப்படாமல் நிலைக்காதா?

 கஷ்டப்படாமல் நிலைக்காதா?

 கஷ்டப்படாமல் நிலைக்காதா?


PUBLISHED ON : பிப் 22, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது; கஷ்டப்படாமல் கிடைப்பது எதுவும் நிலைக்காது' என்ற படையப்பா திரைப்படத்தின் வசனத்தை, தி.மு.க., முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஒரு கல்லுாரி விழாவில் பேசியுள்ளார்.

தி.மு.க.,வில் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் கட்சிக்காக கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ப எவ்வித பதவியும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

அதேநேரம், அக்கட்சி தலைவர்கள் பலரின் வாரிசுகள் எந்தவித உழைப்பும், கஷ்டமும் இல்லாமல் சுலபமாக எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர்கள் போன்ற முக்கிய பதவிகளுக்கு வந்து விடுகின்றனரே... அது எப்படி?

முரசொலி மாறனின் மறைவுக்கு பின், அவரது மகன் தயாநிதி மாறன் எம்.பி.,யானதுடன், மத்திய அமைச்சராகவும் ஆனாரே... அவர் கட்சிக்காக அப்படி என்ன கஷ்டப்பட்டு உழைத்து விட்டார்?

அதுமட்டுமா... அமைச்சர்கள் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நேருவின் மகன் அருண், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போன்றோர் எம்.பி.,யாக உள்ளது எப்படி?

கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா, தமிழக தொழில் துறை அமைச்சராக உள்ளார். அதேபோல், அமைச்சர் பெரியசாமியின் மகன் செந்தில்குமார் மற்றும் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் ஆகியோர் சட்டசபை உறுப்பினராக உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ., தங்கபாண்டியனின் மகன் தங்கம் தென்னரசு அமைச்சராகவும், மகள் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகவும் உள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் வாரிசுகளான அன்பில் பொய்யாமொழி, அன்பில் பெரியசாமி ஆகியோர் சட்டசபை உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில், பொய்யாமொழியின் வாரிசு மகேஷ் தற்போது அமைச்சராக இருக்கிறார்.

முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜன் அமைச்சராக உள்ளார்.

இந்த அரசியல் வாரிசுகள் எல்லாம், ஊர் ஊராக கூட்டம் போட்டு, தெருத் தெருவாக திண்ணை பிரசாரம் செய்து கட்சியை வளர்த்ததால், இவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதோ!

அவ்வளவு ஏன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி, கட்சிக்காக கஷ்டப்பட்டு உழைத்து தான் துணை முதல்வர் பதவிக்கு வந்தாரோ!

குறிப்பிட்ட சில குடும்பங்கள் அதிகாரத்தை ருசித்து, பணத்தில் புரண்டு கொண்டிருக்க, அடிமட்ட தொண்டன், போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டிருக்கிறான்.

இதில், 'கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது; கஷ்டப்படாமல் கிடைப்பது எதுவும் நிலைக்காது' என்று, 'டயலாக்' அடிக்கிறார், ஸ்டாலின்.

மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாம் கஷ்டப்படாமல் அதிகாரத்தை ருசித்துக் கொண்டிருப்பதால், வரும் தேர்தலில் அவர்கள் பதவி நிலைக்காது என்பதை தான், முதல்வர் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாமா?

lll

கடன் வாங்கி ஓட்டு வாங்கவா இடைக்கால பட்ஜெட்! எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் நிதிநிலை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட 2026 -- -27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட், மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியை விட, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை மட்டுமே குறிக்கோளாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டின் மிக அதிர்ச்சிகரமான அம்சம், தமிழகத்தின் கடன் சுமை!

வரும் நிதியாண்டின் இறுதியில் மாநிலத்தின் மொத்தக் கடன், 10.71 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

​ஒவ்வொரு தமிழனின் தலையிலும் பல லட்சம் ரூபாய் கடன் சுமையை ஏற்றிவிட்டு, அதை மறைக்க, வழக்கம் போல் மத்திய அரசின் மீது பழி சுமத்தியுள்ளது.

நிதிப் பற்றாக்குறை, 1.22 லட்சம் கோடி ரூபாய் என்ற எல்லையைத் தொட்டுள்ள நிலையில், இதைக் குறைக்க எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. அதேநேரம், வரும் நிதியாண்டின் இறுதியில், மாநிலத்தின் மொத்தக் கடன், 10.62 லட்சம் கோ டி ரூபாயாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

இது, ஒவ்வொருவரின் தலையிலும் பல லட்சம் ரூபாய் கடன் சுமையை ஏற்றும்!

ஓர் அரசு தன் செலவுகளுக்குத் தேவையான வருவாயை எப்படி ஈட்டப் போகிறது என்பதில் தெளிவு இருக்க வேண்டும். பட்ஜெட்டில் அது குறித்த எந்த தெளிவும் இல்லை. வழக்கம் போல், மாநிலத்தின் வருவாய்க்கு டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு வருவாயை மட்டுமே நம்பியுள்ளது.

புதிய தொழில் முதலீடுகள் வாயிலாக, அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாயைப் பெருக்க எந்தப் புதிய உத்திகளும் இல்லை.

​மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது தேர்தலுக்கான, 'ஓட்டு வேட்டை'க்கு தானே ஒழிய, அது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

​வருவாய் பற்றாக்குறை, 48,696 கோடி ரூபாய் என இருக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்காமல், மேலும் கடன் வாங்கிச் செலவு செய்வது, கையாலாகாத நிர்வாகத்தையே காட்டுகிறது.

தமிழகத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும்படியான, பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், இப்பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் இல்லை.

​சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் முடங்கியுள்ளதற்கு, மத்திய அரசை சாடுவதே பட்ஜெட் உரையின் மையப் பொருளாக உள்ளது.

​விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவோ அல்லது கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ உருப்படியான அறிவிப்புகள் காணப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகள், மீண்டும் ஒருமுறை கழற்றி விடப்பட்டுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தேர்தலுக்காக தற்காலிக சலுகைகளை மட்டும் அறிவிப்பது நிரந்தர தீர்வாகாது.

மொத்தத்தில், 2026 - -27 இடைக்கால பட்ஜெட் என்பது, 'கடன் வாங்கி ஓட்டு வாங்கும்' ஒரு முயற்சியாக தெரிகிறதே ஒழிய, ஆக்கப்பூர்வமான பொருளாதாரத் திட்டங்களை ஏற்படுத்தி, தமிழகத்தின் வருவாயை பெருக்குவதாக இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us