PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

ஆர்.எஸ்.மணி, ஈரோடிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செயற்கரிய சாதனைகளை செய்தவர்கள், அதை வெளிக்காட்டிக் கொள்ளா மல் அமைதியாகத் தான் இருப்பது வழக்கம்.
அந்த வழக்கத்தை நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடைப்பிடித்து இருக்கிறார் என்றால், மிகையில்லை.
நாமக்கல் மாவட்டத்தில், 16,031 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்துவோம்' என சூளுரைத்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாகத்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
* டாஸ்மாக் வியாபாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது
*இந்தியாவிலேயே, டாஸ்மாக் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள முதல் மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளி விற்பனைக்காக, 3,500 புதிய கவுன்டர்கள் திறக்கவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாநிலமாவது, 'குடிமகன்'கள் மீது இவ்வளவு கரிசனம் கொண்டிருக்கிறதா?
* தமிழக மக்களில் சற்றேறக்குறைய 80 சதவீத மக்கள், 'குடி'மகன்களாக தான் உள்ளனர். மீதியுள்ள 20 சதவீதம் மக்களையும் ஆட்சி காலம் முடிவதற்குள், 'குடிநோயாளி'ளாக ஆக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது
* குடும்பப் பெண்கள், கல்லுாரி மாணவ - -மாணவியர், இளம் பெண்கள், பள்ளி மாணவ - -மாணவியர் அனைவருக்கும் பிரதி மாதமும் உதவித் தொகை என்ற பெயரில் ஒரு தொகையை கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்திருக்கிறது. இந்தியா வில் வேறு எந்த மாநிலமாவது இந்த சாதனையை செய்ய முன் வந்ததுண்டா?
* மாணவ- - மாணவியர் மட்டுமல்லாது, பச்சிளம் பாலகர்களையும் காலை உணவுக்கு அரசிடம் தட்டேந்தி நிற்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது பாருங்கள். வேறு எந்த மாநிலத்திலாவது இந்த சாதனை உண்டா?
* வீட்டுவரி, சொத்துவரி, பத்திரப்பதிவு வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளதில், தமிழகம் முதல் மாநிலமாகத் தானே திகழ்ந்து கொண்டிருக்கிறது
* கடந்த மூன்றாண்டு காலத்தில், எத்தனை எத்தனை ஹிந்து கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன... வேறு எந்த மாநிலமாவது திராவிட மாடல் கழக அரசின் இந்த சாதனைக்கு பக்கத்தில் நிற்க முடியுமா?
'சொன்னதைச் செய்வோம்; சொல்லாததை யும் செய்வோம்!' என்பது கழகத்தின் கொள்கை முழக்கங்களில் முதன்மையானது. அந்த கொள்கையின்படி, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல விஷயங்களை, சந்தடியில்லாமல் செய்து எவ்வளவு அடக்கமாக, 'அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்துவோம்' என்று அறிவிக்கிறார் பாருங்கள்.
அந்த தன்னடக்கம், வேறு எந்த மாநில முதல்வருக்கு வரும்!
அதிகாரிகளை குறைசொல்லி பலனில்லை!
ராம்கோ.
பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: இதே
பகுதியில், 'முடியுமா முதல்வரால்? சந்தேகம் தான்!' என்ற தலைப்பில்
மதுரையிலிருந்து பாலமுருகன் என்ற வாசகர் கடிதம் எழுதி இருந்தார். 'தமிழக
அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லா மல் எந்த வேலையும் நடக்காது' என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் என்றைக்கு திராவிட கட்சிகளின் பிடியில்
சிக்கிக் கொண்டதோ, அன்றிலிருந்து தமிழகத்தில் ஊழலும், லஞ்சமும் வேர் விட
துவங்கி, ஆலமரமாக வளர்ந்து வருகிறது.
பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்,
சர்க்கரை பேர ஊழல், எரிசாராய ஊழல், சர்க்காரியா கமிஷன், வருமானத்திற்கும்
அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என, பல விசித்திரமான வழக்குகளை சந்தித்தது
இந்த தமிழகம்.
ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, ஆண்ட கட்சியாக
இருந்தாலும் சரி, ஊழல் வழக்குகளில் அமைச்சர்கள் பலர் சிக்கி,
நீதிமன்றங்களின் கருணையால் நல்லவர்கள் போல வெளியில் உலாவிக்
கொண்டுஇருக்கின்றனர்.
ஊழல் செய்து சிக்கிய அமைச்சர் வெளியில்
வரும்போது, அவரை தேசத்தின் தியாகி போல சித்தரித்து வரவேற்பு கொடுக்கும்
நிலை இருக்கும்போது, நாட்டில் ஊழல் எப்படி குறையும்?
ஆண்டொன்றுக்கு
1,000 கோடி, 2,000 கோடி எனும் சுருட்டும் அமைச்சர்களை பார்க்கும்போது,
'அவர்கள் தான் அப்படி சுருட்டுகின்றனரே... நாமும் கொஞ்சம் சுருட்டி
கொள்ளலாம்' என்று யோசித்து, அதிகாரிகளும் ஊழல்வாதிகளாய் மாறி விடுகின்றனர்.
'அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை வேடிக்கை பார்க்கவா நாம் பதவியில்
இருக்கிறோம்... நாமும் முடிந்த அளவுக்கு மூட்டை கட்டிக் கொள்ளலாம்' என்ற
நினைப்புதான் மேலோங்கி நிற்கும்.
அமைச்சர்கள் நேர்மையானவர்களாக
இருந்தால் தான், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் நேர்மையாக
பணியாற்றுவர்; அவர்களைப் பார்த்து இடைநிலை அதிகாரிகளும், கடைநிலை
ஊழியர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் இருப்பர். இதில்,
அரசு அலுவலர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
தமிழிசை மேடம்... நீங்களும் வாரிசு தானே!
சி.கார்த்திகேயன்,
சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் வாரிசு அரசியல் என்ற பேச்சு, நாலாபுறமும் தெறிக்கிறது. பா.ஜ.,
கட்சி, இதை வைத்தே தி.மு.க.,வை, 'டின்' கட்டுகிறது.
பார்க்கப் போனால் அது, ஓரளவு உண்மை தான் என்றாலும்கூட, பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை என்றால், தமிழகத்தில் அது தவறு.
சமீபத்தில்,
துணை முதல்வர் உதயநிதியைப் பற்றி, பா.ஜ., தமிழிசை பேசியபோது, 'அவருடைய
தாத்தா மற்றும் தந்தை போல, தான் வாரிசு அரசியல் செய்யவில்லை' என்று
கூறினார்.
இவருடைய தந்தை, சித்தப்பா, தற்போது உள்ள கன்னியாகுமரி எம்.பி., என, நம் கண் முன் தெரிந்த அனைவரும், இவருடைய சொந்தங்கள் தானே!
பா.ஜ.,வில் சேரும் வரை, வேறு கட்சியில் இருந்த இவரை, குமரி அனந்தன் மகள் என்று தானே நாம் அடையாளம் சொல்வோம்?
கருணாநிதி
பரம்பரையில், ஏறக்குறைய அனைவருமே, மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து,
மக்கள் ஓட்டளித்து தான் பதவியில் அமர்கின்றனர் என்பது தமிழிசைக்கு தெரியாதா
என்ன!
ஆனால், தமிழிசை நிலை அப்படி கிடையாது. பா.ஜ., தமிழக தலைவராக
மாறிய பின்தான், இவரை பலரும் அடையாளம் கண்டனர். தமிழகத்தில் கோலோச்ச
வேண்டும் என்ற தீராத ஆசையில், துாத்துக்குடி மக்கள் மண் அள்ளிப்
போடுகின்றனர்.
அந்த விரக்தியில், வாரிசு அரசியலை பற்றி பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார். யோசித்து பேசுங்க தமிழிசை மேடம்!