தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/மாயையில் இருந்து வெளியே வாருங்கள் ஸ்டாலின்!

மாயையில் இருந்து வெளியே வாருங்கள் ஸ்டாலின்!

மாயையில் இருந்து வெளியே வாருங்கள் ஸ்டாலின்!


PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் தேர்தல் தோல்வி குறித்த ஆய்வு கூட்டத்தில், 'தோல்விக்கான காரணங்களை அனைவரும் தைரியமாக என்னிடம் தெரிவிக்கலாம்' என்று கூறியுள்ளார், அக்கட்சி தலைவர் ஸ்டாலின்.

அடுத்தவர்களிடம் காரணத்தை கேட்பதற்கு முன், தனக்கு தானே ஸ்டாலின் கேட்டுக்கொண்டாலே போதும்; அதற்கான விடை கிடைத்துவிடுமே!

ஏனெனில், ​நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர், முதியோரும், மீண்டும் மீண்டும் வாய்ப்பு பெற்ற எம்.எல்.ஏ-.,க்களுமே இருந்தனர்; இளைஞர்களுக்கான பங்கு மிகக்குறைவு.

அப்படியே சில இளைஞர்களுக்கு வாய்ப் பு தரப்பட்டிருந்தாலும், அவர்களும் இந்த சீனியர்களின் வாரிசுகளாக இருந்தனரே தவிர, தொண்டர்களுக்கு முன்னுரிமை இல்லை.

​உதாரணமாக, 86 வயதை கடந்த துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள், மீண்டும் மீண்டும் தேர்தலில் நின்றனர்.

இப்படி வாரிசுகள் மற்றும் முதியோருக்கு மட்டுமே வாய்ப்பு என்ற நிலை, வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண கட்சி தொண்டர்களுக்கு பெரும் சோர்வையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது.

இதில், மூத்த தலைவர்கள் பலரின் மீது ஊழல் புகார்களும், பல்வேறு வழக்கு களும் நிலுவையில் இருந்தது, கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனால், மாற்று அரசியல் பேசிய தமிழக வெற்றிக் கழக கட்சியில், எந்தப் பின்னணியும் இல்லாத எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களை ஆதரித்து, மக்கள் வெற்றி பெற வைத்து விட்டனர்.

எனவே, 'அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்தான் ஜெயிக்க முடியும்' என்ற மாயையில் இருந்து ஸ்டாலின் வெளிவர வேண்டும்.

சீனியர்களை கவுரவ பதவிகளுக்கு அனுப்பிவிட்டு, வாரிசு அல்லாத புதிய முகங்களுக்கும், துடிப்புள்ள இளைஞர்களுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தி.மு.க., தன்னை ஒரு குடும்ப அமைப்பாக, சீனியர்களின் புகலிடமாக வைத்திருக்காமல், மக்களுக்கான இயக்கமாக மாற வேண்டும்.

இந்த மாற்றத்தை செய்யாவிடில், அ.தி.மு.க., இன்று அரசியல் களத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பது போல், அடுத்த சில தேர்தலுக்கு பின், தி.மு.க.,வும் தள்ளாட துவங்கி விடும்!

தி.மு.க.,வின் தோல்விக்கான காரணம், சிதம்பரம் ரகசியம் அல்ல; அது உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே, தோல்விக்கான காரணிகளை களையெடுப்பதே கட்சியின் நலனுக்கு உகந்தது!

அனைவருக்குமான அரசாக இருக்குமா?


ஆர்.ஸ்ரீராம் காஷ்யப், சவுரி பாளையம், கோயம்புத்துார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்று வழங்கிய உரையில், 'ஹிந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் என் மூன்று முகங்கள்; இது அனைவருக்குமான அரசு' என்று சூளுரைத்த போது, தமிழக மக்கள் அனைவரும் நடுநிலையான முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று, மனம் மகிழ்ந்தோம்.

கடந்த ஆட்சியில் ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் ஹிந்து மதத்தை அவமதித்தும், கேலி செய்தும் ஹிந்துக்களின் மனம் நோக பேசி வந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவிற்கு பின்பும், ஹிந்துக்களின் உரிமைகளை நிராகரித்தது, தி.மு.க., அரசு.

இதையெல்லாம் கண்டு மனம் வெதும்பி தான், மாற்றம் வேண்டி, த.வெ.க.,விற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தோம்.

ஆனால், 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என்பதுபோல் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று சட்டசபையில் பேச, அதை, சபாநாயகர் கண்டிக்காமல் அமைதியாக கடந்து செல்கிறார்.

த.வெ.க., - எம்.எல்.ஏ., முஸ்தபாவோ, 'நாங்களும் தான் சனாதனத்தை ஒழிக்க வந்துள்ளோம்' என்கிறார். அதை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆமோதித்து, சனாதனம் என்பதற்கு, 'ஜாதி' என்று அர்த்தம் கற்பித்து, தனி ஆத்திச்சூடி வகுக்கிறார்.

இவர்கள் இருவரையும் இன்றுவரை முதல்வர் கண்டித்ததாக தெரியவில்லை.

சனாதனம் வேறு; ஹிந்து மதம் வேறு அல்ல. மனிதன் எப்படி ஒழுக்கமாக, தர்ம வழியில் வாழ வேண்டும் என்று வழிகாட்டுவது தான் சனாதன தர்மம். அதன் வழி நடப்பது தான் ஹிந்து மதம்.

அந்த தர்மம், சக மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவது கிடையாது.

எனவே, 'இது அனைவருக்குமான அரசு' என்று கூறும் முதல்வர், இனிவரும் காலங்களில் சனாதன தர்மத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ தவறாக பேசும் தன் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தன் அரசு அனைவருக்குமானது என்பதை நிரூபிக்க வேண்டும்.

மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றாமல், பாரபட்சமற்ற அரசாக திகழ வேண்டும் என்பதே, தமிழக மக்களின் விருப்பம்!

புண்ணியமாக போகும்!


என்.கந்தன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஆட்சியாளர்கள், 100 யூனிட், 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற லேபிள் ஒட்டினாலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டால் ஒவ்வொரு குடும்பமும், தாங்கள் பயன்படுத்திய யூனிட்களுக்கான கட்டணத்தை காட்டிலும், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த துன்பத்திலிருந்து விடுதலை அடையும் நோக்கத்தில் தான், 2021 சட்டசபை தேர்தலின் போது, 'மாதந்தோறும் மின் கட்டண கணக்கு எடுக்கப்படும்' என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை உண்மை என நம்பி ஓட்டு போட்டோம்.

ஆனால், ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் மாதந்தோறும் மின் கட்டண கணக்கு என்ற, 'கான்செப்டை' தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. விளைவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பமும், ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவே மின்சார கட்டணம் கட்டியுள்ளன.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசு மண்ணை கவ்வியதற்கும், இந்த, 'டுபாக்கூர்' வாக்குறுதிக்கும் முக்கிய பங்குண்டு.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசாவது, இதை நிவர்த்தி செய்யும் என்று பார்த்தால், முந்தைய அரசைக் காட்டிலும் இந்த அரசு கூடுதலான கட்டணத்தை வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆட்சியாளர்களே... எங்களுக்கு நீங்கள் கொடுக்கும், 100, 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்; மாதந்தோறும் நாங்கள் உபயோகிக்கும் மின்சாரத்திற்கான முறையான கட்டணத்தை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுத்தால் போதும்; உங்களுக்கு புண்ணியமாக போகும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us