PUBLISHED ON : மே 01, 2026 12:00 AM

ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி, 2024 பார்லிமென்ட் தேர்தலில், 27 கட்சிகளை ஒன்றிணைத்து, 'இண்டி' கூட்டணி என்ற பெரும் கோட்டையை கட்டியது, காங்கிரஸ் கட்சி. ஆனால், தன் செயல்களாலும், செயலின்மையாலும், அக்கோட்டையை தானே கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்தும் வருகிறது.
கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலை சந்திக்கும் முன்பே, 27 தோழர்களில் ஒருவரான, பீஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரசில் இருந்து வெளியேறி, தேசிய ஜனநாயக கூட்டணியில் சங்கமித்து விட்டது; மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, 2024 பார்லிமென்ட் தேர்தலிலேயே, 'கூட்டணியில் இருக்கிறேன்; ஆனால், தனியாகத் தான் போட்டியிடுவேன்' என்று கூறி விட்டார்; டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், 2025-ல் வெளியேறியது.
இவையெல்லாம் அக்கட்சிகளின் தனிப்பட்ட விலகல்கள் அல்ல; காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவ திறமையின்மையின் வெளிப்பாடு.
மாநில கட்சிகளுக்கு, காங்கிரஸ் தேசிய சக்தியாக இருந்த நிலை மாறி, இன்று, தேவைப்படும்போது மட்டும் பயன் படுத்தும் கருவியாக மாறிவிட்டது.
இந்த நீண்ட வீழ்ச்சியின் இறுதி அத்தியாயமாக தற்போது தமிழகத்தில் காங்கிரசின் நிலை உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலின் போது, 25 தொகுதிகளில் இருந்து மூன்று இடங்கள் கூட்டுவதற்கு, காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் நேரில் சென்று, ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க வேண்டி இருந்தது.
அதுவும், சோனியாவின் நேரடி அழுத்தத்தால்!
இது, இரு கட்சிகளுக்கு இடையே நடந்த பேரமல்ல; ஒரு கட்சி மற்றொரு கட்சியிடம் கோரிய யாசகம்!
அதுமட்டுமா... பொதுக்கூட்டம் ஒன்றில், 'தொகுதிக்கு 2,000 ஓட்டு கூட வாங்க முடியாத கட்சி, அதிகாரப் பகிர்வு கோருகிறது' என்று ஏளனம் செய்தார், தி.மு.க., - எம்.எல்.ஏ., தளபதி.
இது, அந்த எம்.எல்.ஏ.,வின் தனிப்பட்ட கருத்தல்ல; தி.மு.க.,வினரின் ஆழ் மனதில் பதிந்துள்ள எண்ணத்தின் வெளிப்பாடு!
இப்படி கூட்டணிக்குள் சுயமரியாதையை இழந்துள்ள காங்., தன் வறட்டு கவுரவத்தை ஒதுக்கி வைத்தோ அல்லது தன்மான உணர்ச்சியால் உந்தப்பட்டோ செயல்பட்டால் தான் உருப்படும்.
இன்னும் கூட கெட்டுவிடவில்லை; தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று, தமிழக காங்., சுதாரித்து செயல்பட்டால், ஆட்சியில் பங்கு பெறலாம்!
