/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஜனநாயகம் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது!
/
ஜனநாயகம் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது!
PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM
எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற சவால், நம் முன்னே உள்ளது. 100 சதவீதம் ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும். இ.வி.எம்., இயந்திரத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதே, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் முடிவு.
'இந்த சவாலை ஏற்க மறுத்தால், விடுதலை சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறது' என, ஓட்டுப்பதிவில், 100 சதவீத ஒப்புகை சீட்டை பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.
'காலந்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை' என்று எம்.ஜி.ஆர்., அரை நுாற்றாண்டுக்கு முன்பே பாடி சென்றிருக்கிறார். ஒருவன், 10 வயதில் அணிந்து கொண்டிருந்த அதே ஆடைகளை, 50 வயதிலும் அணிந்து கொள்ள ஆசைப்பட்டால் முடியுமா?
ஆனால், திருமாவளவனோ பிடிவாதமாக, 10 வயதில் அணிந்த ஆடைகளைத் தான் அணிந்து கொண்டு உலா வருவோம் என்பதில், அதாவது ஓட்டுச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
நாடு முழுதும் இ.வி.எம்., இயந்திரத்தின் வாயிலாக ஓட்டுப்பதிவு நிகழும் போது, தமிழகத்தில், அதுவும் வி.சி.,க்கள் போட்டியிடும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டும் ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்த முடியுமா?
இ.வி.எம்., இயந்திரத்தின் வாயிலாக நடத்தப்படும் தேர்தலில் போட்டியிட விருப்பமிருந்தால், போட்டியிடுங்கள். விருப்பம் இல்லாவிட்டால், தேர்தலை புறக்கணித்து விடுங்கள். அதற்காக, நடைமுறைகளை உங்கள் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது.
நம் நாட்டில் ஜனநாயகம் மிகுந்த பாதுகாப்புடன் தான் உள்ளது. அதற்கு, திருமாவளவன் ஒன்றும் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை!
மின் கம்பங்களில் விளம்பரம்; யாருக்கு லாபம் ?
இ.ஷாஜகான்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை பெருநகர
தெருக்களில் உள்ள 3 லட்சம் மின் கம்பங்களில், தனியார் 'டிஜிட்டல்'
விளம்பரங்களை அனுமதிப்பதன் வாயிலாக, அடுத்த மூன்றாண்டுகளில், 94 கோடி
ரூபாய் வருவாய் ஈட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கட்டணமாக,
ஒரு கம்பத்துக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய்; விண்ணப்பிக்க 2,000 ரூபாய்.
டிஜிட்டல்
விளம்பரத்துக்கு செலவாகும் மின்சாரத்திற்கு, பிரத்யேக மீட்டர் பொருத்தி
தனி கட்டணம் வசூலிப்பரா; இல்லை, மேற்கண்ட 3,000 ரூபாயில் அதுவும் அடக்கமா
என, தெரியவில்லை; இதிலும் ஊழல் தான் நடக்கும்.
எழுத்துக்கள்
குறைவாகவும், படமே பிரதானமாகவும் உள்ள டிஜிட்டல் விளம்பரங்களில், எத்தகைய
படங்களை பயன்படுத்தலாம் என்ற விதிகள் உள்ளனவா, மீறினால் என்ன நடவடிக்கை,
யார் கண்காணிப்பர்?
இதில், கவனம் சிதற வைக்கும் உள்ளாடை
விளம்பரங்களை வெளியிடவே வாய்ப்புகள் அதிகம். அவ்வாறான ஆபாச படங்கள்
இடம்பெற்றால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துக்கு வழி வகுக்கும்
என்பதால், அவற்றை பொது இடங்களில் வைக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளை
விதித்தது.
ஆனால் தமிழக அரசோ, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி
விளம்பரங்களுக்கு கதவை திறந்து, தற்போது மின் கம்பங்களிலும்
அனுமதித்துள்ளது. ஆட்சேபகரமான, நம்பத்தகாத, அச்சிடக்கூடாத படங்கள் மற்றும்
விளம்பரம் வெளியிட பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடுகளும், கண்காணிக்க தனி
அமைப்பும் உண்டு.
இதனால், தமிழ் பத்திரி கைகளில் வராத உள்ளாடை விளம்பரங்கள், சில வடமாநில ஆங்கில பத்திரிகைகளில் வெளிவருகின்றன.
கிருமி
நாசினி விளம்பரமாக இருந்தாலும், அது, 100 சதவீதம் கிருமியை
கட்டுப்படுத்தும் என குறிப்பிடாமல், 99 சதவீதம் என்றே குறிப்பிடப்படும்.
இந்நிலையில்,
கண்காணிப்பு, கட்டுப்பாடு அற்ற படங்களுடன் டிஜிட்டல் விளம்பரங்களை
ஒளிபரப்பினால், அவற்றை முறைப்படுத்துவது யார், தவறாக இருந்து மக்கள்
ஏமாற்றப்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்விகள் எழுகின்றன.
தற்போது,
பொது இடங்களில் வைக்கப்படும், 'ஹோர்டிங்ஸ்'களிலேயே விதிமீறல்கள் அதிகம்
நடக்கின்றன. சிறியளவில் விளம்பரம் வைக்க அனுமதி பெற்று, பெரியளவில்
வைக்கின்றனர். மின் கம்பங்களில், டிஜிட்டல் விளம்பரங்கள் வாயிலாக
மாநகராட்சிக்கு கிடைக்கும்வருவாய் குறைவு; அதை பயன்படுத்தி
அரசியல்வாதிகளின் பாக்கெட்டிற்கு போகும் தொகையே பெரிதாக இருக்கும்.
அள்ளப்படும்
ஆற்று மணல் அளவை குறைத்து மதிப்பீடு செய்து, கொள்ளை விலைக்கு விற்பது
போலதான், இந்த டிஜிட்டல் விளம்பரத்திலும் நடக்கும். மாநகராட்சி
இத்திட்டத்தை கைவிட்டு, மாற்று முறையில் வருவாய் ஈட்டும் நடவடிக்கையை
கமிஷனர் ராதாகிருஷ்ணன் மேற்கொள்ள வேண்டும்; செய்வாரா?
இடைத்தேர்தல் என்பதே இருக்க கூடாது!
கே.ஜே.செல்வராஜ்,
கோத்த கிரி, நீலகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பொதுவாக, ஒரு சட்டசபை அல்லது லோக்சபா தொகுதிக்கான தேர்தல், மக்களின்
வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவழித்து தான் நடத்தப்படுகிறது.
இது
குறித்து வேட்பாளருக்கோ, கட்சிகளுக்கோ ஒருபோதும் கவலையில்லை.
எம்.எல்.ஏ.,வாக இருக்கும் சிலர், நினைத்தது நடக்கவில்லை என்றால், ராஜினாமா
செய்து, எம்.பி., பதவிக்கு போட்டியிடுவர். அப்போது, எம்.எல்.ஏ., தொகுதிக்கு
மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும். தேவையில்லாமல் மக்களின் வரிப்பணம் வாரி
இறைக்கப்படும்.
இன்னும் சிலர் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பதவிகளை
ராஜினாமா செய்து, மாற்று கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள்ராஜினாமா செய்த
தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், புதிய கட்சியின் வேட்பாளராக நின்று
மீண்டும் சட்டசபை அல்லது பார்லிமென்டுக்குள் நுழைகின்றனர்.
கர்நாடகாவில்
இதுபோன்ற கட்சி தாவல் சம்பவங்களும், அடிக்கடி இடைத்தேர்தல் நடப்பதும்
சகஜமாகி விட்டது. இவற்றை, வரி செலுத்தும் நாமும் வாயை மூடி வேடிக்கை தான்
பார்க்கிறோம்.
இதை தேர்தல் கமிஷன் தான் சட்டம் போட்டு தடுக்க
வேண்டும். சட்டசபை அல்லது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர்,
அப்பதவியில் கண்டிப்பாக ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டும்.
அவர்
காலமானாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ராஜினாமா செய்தாலோ, அவரை
எதிர்த்து போட்டியிட்டு, இரண்டாம் இடம் பெற்றவரை வெற்றியாளராக அறிவித்து,
இடைத்தேர்தல் என்ற வார்த்தையே தேர்தல் வரலாற்றில் இல்லாமல் செய்ய வேண்டும்.
அப்போது தான் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். தேர்தல் கமிஷன் இது பற்றி யோசிக்குமா?

