தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ 'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!

 'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!

 'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!


PUBLISHED ON : ஆக 14, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2026 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:

கடந்த 50 ஆண்டு காலமாக, திராவிட கட்சிகளால் ஊழலில் புரையோடிப் போன தமிழகத்தில், ஊழலை ஒழிக்க முதல்வர் விஜய் எடுத்த உறுதி, பலன் அளிக்க துவங்கி இருப்பதை கண்கூடாக கண்டேன்.

என் நண்பரின் காலி மனைக்கு பட்டா வழங்க அளவீடு செய்ய வந்த சர்வேயர், 'பட்டாவிற்கு பணம் வாங்க மாட்டேன்' என்று சொன்னதை கேட்டதும், 'முதல்வர் விஜய் வாழ்க' என்று உரக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது.

இதுவே, திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் பட்டாவிற்கு, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.

அதேநேரம், ஊழல் முழுதும் ஒழிந்து விடவில்லை என, பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. முதல்வர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையிலேயே கட்சி நிதி வசூலிப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

முதல்வருக்கு, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உள்ளதா என்று தெரியவில்லை. அப்படியொரு பழக்கம் அவருக்கு இருக்குமானால், 'தினமலர்' நாளிதழை தினமும் வாசிக்க வேண்டும்.

முக்கியமாக, 'டீக்கடை பெஞ்ச்' பகுதியை படிக்க வேண்டும்.

அப்போது தான், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும், ஊழல் செய்வோர் குறித்தும் அவர் அறிந்து கொள்ள முடியும்.

'தினமலர்' செய்திகளை அடிப்படையாக வைத்து, முதல்வர் நடவடிக்கை எடுக்க துவங்கினாலே போதும்; 90 சதவீத ஊழல் ஒழிந்து விடும்.

மேலும், லஞ்சப்புகாரில் கையும் களவுமாக சிக்குவோரை, உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்; தற்காலிக பணி நீக்கம் செய்து, வழக்கு முடியும் வரை அவர்களுக்கு பிழைப்பூதியம் தருவதை நிறுத்த வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, லஞ்சம் வாங்குவோர் பயப்படுவர்.

'லஞ்சத்தை ஒழிப்பேன்' என்ற முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, கடந்த மாதம் 'தினமலர்' நாளிதழில், முதல்வர் விஜய் புகைப்படத்துடன், 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்று வாசகத்துடன், தொலைபேசி எண்களுடன் வந்த செய்தியை, எங்கள், நிதி நிறுவன வாசலில் வாடிக்கையாளர்கள் கண்ணில் படும்படி ஒட்டி வைத்து, லஞ்சத்தை ஒழிக்க முதல்வர் மற்றும் 'தினமலர்' நாளிதழ் பாதையில் நானும் பயணிப்பதை பெருமையாக கருதுகிறேன்!

கருணை ஓய்வூதியத்தை ரத்து செய்யலாமா?


திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெறுவதற்காக மக்களிடத்தில், 'தேர்தல் வாக்குறுதிகள்' அளிப்பது வழக்கம்.

அதை, 100 சதவீதம் நிறைவேற்றிய ஆளுங்கட்சி இதுவரை தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை. ஆனாலும், ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த ஆட்சியில் கொண்டு வந்த மக்களுக்கு பயன் தரும் நலத்திட்டங்களை ஆட்சியாளர்கள் தொடர்வது உண்டு.

அவ்வகையில், கடந்த தி.மு.க., ஆட்சியின் இறுதி கட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் கொடுத்த நெருக்கடியில், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, புதுப்பிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டது, தி.மு.க., அரசு.

அப்போது, 'இத்திட்டத்தை மேலும் சீரமைத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவோம்' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.

தற்போது, த.வெ.க., ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க, அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன.

அதேநேரம், தி.மு.க., அரசு, 2026 ஜன., 1 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், அதற்கு முன் பணி நிறைவு பெற்றோருக்கு, அவர்களின் பணி காலத்தை பொறுத்து, கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால், த.வெ.க., அரசு ஆணையில், 2026 ஜன., 1க்கு முன் ஓய்வு பெற்றோருக்கு எந்த விதமான ஓய்வூதியமும் வெளியிடப்படவில்லை.

பழைய ஓய்வூதியம் பெறுவோர், தற்போது புதிய ஓய்வூதியம் பெறுவோர் இவர்களுக்கு இடையில், 2026 ஜன., 1க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் என்ன பாவம் செய்தனர்?

தேர்தலுக்கு முன், பழைய ஓய்வூதிய திட்டத்தை சீரமைப்போம் என்றார், முதல்வர் விஜய்.

அப்படியெனில், கடந்த தி.மு.க., அரசு அறிவித்துள்ளதன்படி கருணை ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி அல்லவா தர வேண்டும்... மாறாக, அதை ரத்து செய்வது சரியா?

இவ்விஷயத்தை முதல் வர் கவனத்தில் கொள்வாரா?

தாத்தாவின் பாணியை கடைப்பிடிக்கும் பேரன்!


கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சென்னையில் மேம்பாலம் கட்டியதில், 12 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பலர் மீது, ஜெயலலிதா ஆட்சியில், 2001-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, நள்ளிரவில் கருணாநிதியை கைது செய்ய, ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு முன் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் தன்னை கைது செய்ய வந்திருப்பதை அறிந்து கொண்ட கருணாநிதி, தனக்கு வேண்டப்பட்ட தொலைக்காட்சி அலுவலகத்திற்கு போன் செய்து விஷயத்தைக் கூறி நிருபர்கள், கேமராமேன்கள் சகிதம் உடனடியாக தன் வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு, அவர்கள் வந்து படம் பிடிக்கும் வரை கைது ஆகாமல் இருக்க, படுக்கை அறையிலேயே நேரத்தை கடத்தினார்.

அதற்குள், அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

கருணாநிதியின் படுக்கை அறைக்கு வெளியே காத்திருந்த போலீசார், பொறுத்துப் பொறுத்து பார்த்து, தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்து கருணாநிதியை கைது செய்ய, அதை அப்படியே அந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்தது.

அந்த கைது நடவடிக்கையை அடுத்து வந்த, 2006 சட்டசபை தேர்தலில் ஒளிபரப்பி அனுதாபத்தை தேடி, ஆட்சிக்கு வந்தார், கருணாநிதி.

அன்று அவர் கடைப்பிடித்த பாணியை, தற்போது அவரது பேரனும், தி.மு.க., எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி கடைப்பிடித்துள்ளார்.

நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், போலீசார் தன்னை கைது செய்ய வந்த போது, போலீசாருக்கு பல மணிநேரம் போக்கு காட்டி, முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் வரும் வரை காத்திருந்து, அதன்பின்பே கைதுக்கு உடன்பட்டார் உதயநிதி.

என்ன... கருணாநிதியின் கைது, அவர் மீது மக்களுக்கு ஓர் அனுதாபத்தை ஏற்படுத்தியது; உதயநிதியின் கைது கேலிக் கூத்தாகிப் போனது.

அவ்வகையில், சீனியர் கருணாநிதியை, ஜூனியர் உதயநிதியால் மிஞ்ச முடியவில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us