PUBLISHED ON : மார் 28, 2026 03:23 AM

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'உளறுவாயர்கள் ஊர் வாய்க்கு இரையாவர்' என்பது போல், ஒருவருக்கும்
புரியாமல் பேசி, கேலிக்கு ஆளாவதில் தமிழகத்திலேயே முதல் இடத்தில்
இருப்பவர், நடிகர் கமல்ஹாசன் தான்.
அவ்வகையில், அவரது புதிய உளறல் பேசு பொருளாகி உள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க., இரண்டு சீட் ஒதுக்கி,
அதையும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று
கூறிவிட்டது.
அதை புறக்கணித்து, 'நாட்டுக்கான போராட்டத்தில்
தமிழகம் முன்னணியில் நிற்கிறது; அதற்கு உறுதுணையாக நிற்பது என் கடமை' என்று
வழக்கம் போல் உளறியுள்ளார்.
நமக்கு தெரிந்தவரை சமீபகாலமாக
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேதான் போர் நடக்கிறது; தமிழகம்
போர்க்களத்தில் முன்னணியில் நிற்குமளவுக்கு இந்தியாவில் எதுவும்
நடக்கவில்லை.
பின் கமல் எதைக் குறிப்பிடுகிறார்?
ஒருவேளை, 'வரும் சட்டசபை தேர்தல் திராவிடத்திற்கும் - ஆரியத்திற்கும்
நடக்கும் போர்; உடன்பிறப்புகளே ஒன்றுபடுங்கள்' என்று, கடந்த மாதம் போர்
முழக்கமிட்டாரே தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்... அந்தப் போரை
குறிப்பிடுகிறாரோ?
அப்படியெனில், கடந்த தேர்தலில், தமிழகத்தில்
குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிக்க போகிறேன் என்று வீரவசனம் பேசி,
டார்ச் லைட்டால், 'டிவி'யை உடைத்தது எந்த நாட்டை காப்பாற்ற?
உளறுவாயர்கள் சில சமயம் உண்மையையும் உளறி விடுவராம்... 'என் கட்சிக்கு
மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நெருக்கடி வந்துள்ளது' என்று உண்மையை போட்டு
உடைத்துள்ளார், கமல்ஹாசன்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, ஊழல்,
தி.மு.க., குண்டர்களின் அடாவடி, குடிபழக்கத்தால் சமூக சீரழிவு என தவறான
ஆட்சி முறையால், தமிழக மக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும், மிகப்பெரிய
நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர் என்பதையும், அதுபோல், கொடுத்த இரண்டு
சீட்டுகளையும் தன் கட்சி சின்னத்தில் போட்டியிட விடாமல் தி.மு.க., கொடுத்த
நெருக்கடியையும் தன்னை மீறி உளறி கொட்டியுள்ளார்.
எது எப்படியோ,
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மூடுவிழா நடத்த தயார்படுத்தியாச்சு; இரண்டு
எம்.எல்.ஏ., சீட்டுகளை வீணாக்காமல் மிச்சப்படுத்தியாச்சு. அவ்வகையில் ஒரே
கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்ட களிப்பில், 'கமல்ஹாசனின் தியாகத்தை
வரலாறே பாராட்டப் போகிறது' என்று புகழ்ந்து தள்ளியுள்ளார், ஸ்டாலின்.
இதற்கு பெயர் தான் இடத்தை கொடுத்து மடத்தை பிடுங்குவது என்பது!
தி.மு.க.,வின் பணநாயகம் வெல்லுமா?
என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 தமிழக சட்டசபை தேர் தலில், தி.மு.க., தந்த வாக்குறுதி, தங்களுக்கு பெரிய விடியலை தரப்போகிறது என்ற ஆவலுடன் காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, தி.மு.க., கொடுத்த, 'அல்வா' பெவிக்கால் போல், அவர்கள் வாய்களை திறக்க முடியாமல் செய்து விட்டது.
அவர்களின் நிலைதான் இப்படி என்றால், தமிழக வாக்காளர்களுக்கு வாக்குறுதி என்ற பெயரில், தி.மு.க., கொடுத்த, 'அல்வா'வில் மூச்சு முட்டிப் போய் உள்ளனர், மக்கள்.
விளைவு... விடியல் ஆட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணை உளவு துறையின் வாயிலாக கணக்கு போட்டு பார்த்ததில், தலைசுற்றிப் போன தி.மு.க., தலைமை, இப்படியே போனால், கடந்த காலத்தில் கிடைத்த 10 ஆண்டு வனவாசம்; வருங்காலத்தில் நித்ய வாசமாகிவிடும் என பயந்து, திடீர் கொடை வள்ளலாக மாறி, மகளிர் உரிமை தொகையை அள்ளிக் கொடுத்துள்ளது.
அத்துடன், நிதிநிலையை காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்த சைக்கிள், மடிக்கணினியை மாணவர்களுக்கு திரும்பக் கொடுத்துள்ளது. விதவைகள், மாற்றுத்திறனாளி, முதியோருக்கான உதவி தொகையுடன், 'போனஸ்' ஆக கூடுதல் பணத்தை அள்ளித் தந்து ஆனந்தம் கொள்ள வைத்துள்ளது.
கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த மருத்துவர்கள், செவிலியர் முதல், தொகுப்பூதியத்தில் பல ஆண்டுகளாக பணி செய்யும் ஆசிரியர்களின் குரல் நசுக்கப்பட்டு, அப்பாவி பொதுமக்களுக்கு பணத்தை கொடுத்து பலனை அறுவடை செய்ய நினைக்கிறது, தி.மு.க.,
அதுமட்டுமல்ல... தேர்தல் பணியில் பல சித்துகள் புரிந்து வெற்றியை தங்களுக்கு மடை மாற்றம் செய்ய, ஆசிரியர், அரசு ஊழியர்களை, 'திருப்தி' செய்ய தேர்தல் கால போனஸாக பல பரிசுகளை தர மந்திரலாசனை நடத்தி வருகிறதாம்!
பறக்கும் படை என்ன தான் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு காவல் இருந்தாலும், காப்பவனை விட கள்ளன் பெரியவன் என, கொடுக்க வேண்டியதை உரியவர்களுக்கு கொடுத்து, ஓட்டு பெற வழி தேடுகிறது, தி.மு.க., தலைமை.
ஜனநாயகத்தை காக்க, மக்கள் இந்த பணநாயகத்தை வீழ்த்துவரா அல்லது பணநாயகத்தின் பிடியில் அகப்பட்டு, ஜனநாயகத்தை சாய்ப்பரா என் பது தேர்தல் முடிவில் தான் தெரியும்!
நிதர்சனத்தை புரிந்து கொள்வாரா பழனிசாமி?
கே.சந்தானகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட்டதன் விளைவு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தற்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளது வலு சேர்த்திருந்தாலும், அ.தி.மு.க.,விலிருந்து பன்னீர்செல்வம், செங்கோட்டையன் பிரிந்து சென்றது , தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும்.
கூடவே, சசிகலா தன் பங்கிற்கு அ.தி.மு.க.,விற்கு கிடைக்க இருக்கும் முக்குலத்தோர் ஓட்டில் சிறு ஓட்டையை போட்டுள்ளார்.
இது ஒருபுறம் என்றால், அண்ணாமலையை மாற்றியதால், அவருக்காக பா.ஜ.,வில் இணைந்த வாக்காளர்கள் பழனிசாமிக்கு எதிரியாக மாறி விட்டனர்.
இதனால், தங்கள் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிட்டால், 'எங்கள் ஓட்டு சீமானின் நாம் தமிழர் கட்சிக்கே' என்று கூறத் துவங்கியுள்ளனர்.
மேலும், அவர் ஆறு தொகுதிகளில் பிராமண வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருப்பதால், இதுவரை பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,விற்கும் கிடைத்த ஓட்டு, இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும். இதனால், அவர், 30 தொகுதிகளிலாவது வெல்ல வாய்ப் புள்ளது.
எனவே, இதையெல்லாம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கவனத்தில் வைத்து, உட்கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ எந்த உள்குத்து வேலையும் நடக்க அனுமதிக்காமல், எல்லாரையும் அரவணைத்து, விட்டுக்கொடுத்து, அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று தேர்தல் களத்தில் பணிபுரிந்தால், அ.தி.மு.க., வெல்ல வாய்ப்புள்ளது!
