PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

கே.சுப்பு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சென்னை அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன்பின்பும், தமிழக அரசு மீது, திரும்பத் திரும்ப குற்றம் சுமத்துவது, எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆதாய நோக்கத்தையே காட்டுகிறது' என்று அந்தர் பல்டி அடித்துள்ளார், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்.
நேற்று வரை, 'யார் அந்த சார்?' என்று குரல் எழுப்பிய திருமா, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த பின், அப்படியே மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்.
ஒருவேளை, 'யார் அந்த சார்?' என்பதை, முதல்வர், திருமாவிற்கு மட்டும் ரகசியமாக கூறிவிட்டாரோ...
குற்றவாளி ஒருவன் மட்டும் அல்ல என்பது தான், எதிர்க்கட்சியினரின் போராட்டத்திற்கு காரணம். யார் அந்த சார் என்பதற்கு விடை கூற, காவல்துறைக்கும், ஆளுங்கட்சிக்கும் ஏன் இத்தனை பயம்?
'ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி, எதிர்க்கட்சி போல செயல்பட முடியாது; தோழமை கட்சியாகத் தான் செயல்பட முடியும்' என்று தன் இயலாமைக்கு, நொண்டி சமாதானம் கூறியுள்ளார், திருமாவளவன்.
இதையே, ஓட்டு சேகரிக்க செல்லும்போது, மக்களிடம் கூறி ஓட்டுக் கேட்க வேண்டியது தானே... அப்போது மட்டும் வாய்க்கு வந்ததைச் சொல்லி ஓட்டுக் கேட்பது, தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்ததும், கூட்டணி தர்மம் என்று நொண்டிச் சாக்கு கூற வேண்டியது.
இப்படி தேர்தல் அரசியல் மட்டுமே செய்யும் திருமா, எப்போது மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்யப் போகிறார்?
ஒரு அநீதி நிகழும்போது, மக்களின் குரலாக இருக்க முடியாத திருமா, ஆட்சி, அதிகாரத்திற்கு ஆசைப்படலாமா?
அதற்கு அவர் தகுதியானவர் தானா என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!
நேர்மையின் இலக்கணம்!
கு.அருண்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓர் அரசியல் கட்சித்
தலைவர் எப்படி கொள்கை பிடிப்புடன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம், இந்திய
கம்யூ., கட்சித் தலைவர் நல்லகண்ணு!
தன், 18 வயதில் கம்யூ.,
கட்சியில் இணைந்து, எமர்ஜென்சி காலத்தில், ஏழு ஆண்டுகள் சிறைவாசம்
அனுபவித்து, தாமிரபரணி ஆற்றைக் காக்க நீண்ட நெடிய போராட்டம் என, அவரின்
அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் பிரமிப்பை ஏற்படுத்துபவை!
இன்று,
பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளில் சிறை செல்வதும், கனிம வளங்களை
கொள்ளை அடிப்பதும், தங்களது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, அவ்வப்போது
கட்சி மாறுவதும் என, சுயநலவாதிகளாக வலம் வருகையில், தன், 80வது வயதில்
கட்சி தந்த, 1 கோடி ரூபாயை, கட்சிக்கே திருப்பித் தந்து, அனைவரையும் வியக்க
வைத்தவர், நல்லகண்ணு.
ஒரு முறை, தமிழகஅரசு, அவருக்கு அம்பேத்கர்
விருது மற்றும்1 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்த போது, விருதை மட்டும்
வைத்துக் கொண்டு, பணத்தில் பாதியை கட்சிக்காகவும், மீதியை விவசாய
சங்கத்திற்கும் கொடுத்து விட்டார்.
இதேபோன்று, 76வது சுதந்திர தின
விழாவில், தமிழக அரசு 10 லட்சம் ரூபாயும், தகைசால் தமிழர்விருதையும்
வழங்கியபோது, அப்பணத்துடன்,தன் கையிருப்பில் இருந்த, 5,000 ரூபாயை
சேர்த்து, தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பெரும்
மனதுக்காரர்.
தற்போது நான்கு மாவட்ட மக்கள் வெள்ளநீரால்
பாதிக்கப்பட்டபோது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சி
எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த நிவாரண நிதியையும், நல்லகண்ணுவின் கொடை
உள்ளத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், நகைப்பு வருகிறது.
நல்லகண்ணு
போன்று பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்படாத தலைவர்கள் இன்று,
கம்யூ.,கட்சியில் யாரேனும் இருக்கின்றனரா என்று கேட்டால், நிச்சயம் இல்லை.
கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, 'சீட்'டுக்கும், நோட்டுக்கும் காவடி துாக்கும் காம்ரேட்டுகள் தானே இன்று அக்கட்சியில் உள்ளனர்!
காங்., கட்சிக்கு காமராஜர், கக்கன் இருந்தது போல், இடதுசாரிகளுக்கு ஒரு நல்லகண்ணு!
மவுனமாக இருப்பது ஏன்?
எம்.ஆர்.பகவான்
தாஸ், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து
எழுதுகிறார்: சமீபகாலமாக சமூகநீதி எனும் சொல், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி
எனும் பேதம் இன்றி, அரசியல் வீதியில் உலா வருகிறது. இந்நிலையில்,
தெலுங்கானா நீதிமன்றம், சமூக நீதி வென்றதாய், ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.
ஆந்திர
மாநிலம் தனியாக பிரிக்கப்படும் முன், வெமுலவாடா சட்டசபை தொகுதியில்,
2010ல் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,
ஆனவர், சென்னமனேனி ரமேஷ்.
'இவர் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்;
இந்தியக் குடிமகன் அல்ல' என, இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., கட்சியை
சேர்ந்த ஆதி ஸ்ரீனிவாஸ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஆண்டுகள் பல கடந்தன... தொடர்ந்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார், சென்னமனேனி ரமேஷ்.
அவர்
மீதான வழக்கு ஜவ்வாக இழுத்துக் கொண்டு இருந்த நிலையில், கடந்த சில
வாரங்களுக்கு முன், ஒருவழியாக, நீதிமன்றம், அவரின் இந்திய குடியுரிமையை
ரத்து செய்ததுடன், 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதில், 25 லட்சம்
ரூபாயை, அவர் மீது வழக்கு தொடுத்த ஆதிஸ்ரீனிவாசுக்கு கொடுக்குமாறு
உத்தரவிட்டுள்ளது.
காலம் கடந்து, இங்கு சமூகநீதி காப்பாற்றப்பட்டுள்ளது!
பார்லிமென்ட்
எதிர்க்கட்சி தலைவரான ராகுல், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். 'இரட்டை
குடியுரிமை சட்டவிரோதம்' என, பா.ஜ.,வை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி வழக்கு
தொடுத்தார்; ஆனாலும், இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இது மட்டுமன்று, பல அரசியல்வாதிகள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பலர் ஜாமினில் உள்ளனர்; அதில் ராகுலும் ஒருவர்!
சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு,தனி நீதிமன்றம் அமைத்தும், நீதி வழங்குவதில் ஏன் இந்த காலதாமதம்?
முதல்வர்
ஸ்டாலின், 'நான் பதவி ஏற்ற உடன், அ.தி.மு.க., அமைச்சர்களின் ஊழலை தாக்கல்
செய்து, சமூகநீதி காப்பேன்' என்று முழங்கினார். அது காற்றுடன் போனது!
சட்டத்தை
உயிர்ப்புடன்வைத்திருக்க வேண்டிய மத்திய - மாநில அரசுகளும், நீதிமன்றமும்
கை கட்டி, வாய் பொத்தி மவுன சாட்சியாக இருப்பது ஏன்?