PUBLISHED ON : ஆக 10, 2025 12:00 AM

ஆர்.கார்த்திகேயன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., வுக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் உள் ளனர் என்று மேடைதோறும் முழங்குகிறார், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி.
இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியில் இருந்து, ஒன்றரை கோடி உறுப்பினர்கள் ஓட்டளித்தாலே எவருடைய தயவும் இன்றி, அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து விடலாமே!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டசபை தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று, 135 தொகுதிகளில் வெற்றி கொடி நாட்டினார்.
அந்த துணிச்சலும், தைரியமும் பழனிசாமிக்கு ஏன் இல்லை?
கூட்டணி ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிக் கொண்டிருக்க, 'அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும்; ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூவிக் கொண்டிருக்கிறார், பழனிசாமி.
பா.ஜ., கூட்டணியால், கிடைக்கும் ஒன்றிரண்டு சிறுபான்மை ஓட்டுகள் கிடைக்காமல் போகும் சாத்தியக் கூறுகள் பிரகாசமாக தெரிவதால், பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விட்டு, 2016 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா தனித்து நின்று ஆட்சியை கைப்பற்றியது போல், பழனிசாமியும் ஏன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடக் கூடாது?
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைந்த கதையாக, இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியைச் சேர்ந்த பழனிசாமி, சிறிய கட்சிகளிடம் கூட கூட்டணிக்காக ஏன் முட்டி மோத வேண்டும்?
வாயில் பந்தல் போட்டால், கொடி வீசி படர்ந்து, காய் காய்த்து கனிந்து விடாது!
மத்திய பா.ஜ., தலைவர்கள் யோசிப்பரா? பி .என்.கபாலி, சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., செயல்பாடுகளில் அண்ணாமலையின்
பங்களிப்பு குறைந்து விட்டதாக, இப்பகுதியில் வாசகர் ஒருவர்
எழுதியிருந்தார். உண்மைதான்!
மத்திய பா.ஜ., தலைவர்கள் அவரது அருமையையும் புரிந்து கொள்ளவில்லை; தமிழக அரசியலையும் விளங்கிக் கொள்ளவில்லை.
இன்று பா.ஜ., தமிழகத்தில் வளர்ந்திருப்பதற்கும், மோடி பெயர் பரவியிருப்பதற்கும் காரணம், அண்ணாமலை தான்!
தமிழக மக்களிடையே மோடி வெறுப்பை விதைத்து, அதில் வெற்றியும் கண்டவர்கள்
தி.மு.க.,வினர்! அண்ணாமலையின் அரசியல் வருகைக்கு முன், தமிழர்கள் மோடியை
ஏற்கவில்லை.
மோடி மட்டுமல்ல... முன்னாள் பிரதமர் இந்திராவின் பருப்பும் தமிழகத்தில் வேகவில்லை.
காமராஜர் இருந்தவரை இந்திராவை இங்கு எவரும் மதிக்கவில்லை. 'இந்திரா காங்கிரஸ்' கட்சி இங்கு செல்லாக் காசாகத்தான் இருந்தது.
காமராஜர் இருந்தவரை அவரை மதிக்காத இந்திரா, அவர் இறந்தபின் ஓடோடி வந்து
இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டதே, காமராஜரின், 'ஸ்தாபன காங்கிரசை'
கொள்முதல் செய்வதற்காகத்தான்!
அதில் வெற்றியும் பெற்றார். தலைவர்
பதவி கொடுத்து மூப்பனாரையும், கவர்னர் பதவி கொடுத்து ஸ்தாபன காங்கிரஸ்
தலைவராக இருந்த பா.ராமசந்திரனையும் வாங்கினார். சத்தியமுர்த்தி பவனும்,
காங்கிரஸ் திடலும் இலவச இணைப்பாக சேர்ந்து கொண்டது.
தமிழர்கள்
என்றுமே வடமாநிலத்தவரை ஏற்பதில்லை; மண்ணின் மைந்தர்களைத் தான் ஏற்பர்.
அதனால், வடமாநில தலைவர்கள் தங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடித்து
இங்கு வந்து புரியாத மொழியில் பேசுவதால் எந்த பலனும் விளையாது.
மாறாக, நல்லவராகவும், வல்லவராகவும் உள்ள அண்ணாமலையிடம் பொறுப்பை விட்டு,
அவருக்கு சர்வ அதிகாரத்தை யும் கொடுப்பது மட்டுமின்றி, அவர் மீது
வயிற்றெரிச்சல் கொண்டு இடக்கு செய்யும் பழம் பெருச்சாளிகளை ஒடுக்கினால்,
இங்கு, பா.ஜ., வளரும்.
மோடி மிக சிறந்த தலைவர், நம் நாட்டிற்கு
வாராது வந்த மாமணி என்பதில் ஐயமில்லை. ஆனால், அதை அண்ணாமலை போன்ற ஒரு
தலைவன் சொன்னால்தான் தமிழன் ஏற்பான். இல்லையேல், மண்ணின் மைந்தர்களை
மதிக்கத் தெரியாத காங்கிரசின் கதிதான் பா.ஜ.,விற்கும் நேரிடும்!
தரத்தை முன்னிறுத்துவோம்; தரணியில் நிலைத்து நிற்போம்! சொ.முத்துசாமி,
பாளையங் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பரமசிவன்
கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா?' என்ற கவிஞர்
கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர்
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஆணவத்தில், உலக நாடுகளை எல்லாம், 'வரி' என்ற
பூச்சாண்டியை காட்டி மிரட்டுகிறார், அந்நாட்டு அதிபர் டிரம்ப்.
அவ்வரிசையில், தற்போது இந்தியாவையும் மிரட்டி வருகிறார்.
அத்துடன், 'ரஷ்ய மற்றும் இந்தியப் பொருளாதாரம் இறந்து போனவை;
பாகிஸ்தானிடம் இருந்து, இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்' என,
தன் வன்மத்தையும் கக்கியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா
குறைந்த விலை யில் கச்சா எண்ணெய் வாங்குவதுதான் இதற்குக் காரணமாம்.
அதேநேரம், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும், ரஷ்யாவோடு வியாபாரத்தில்
உறவாடுவராம். நாம் மட்டும் எவரிடம் என்ன வாங்க வேண்டும் என்பதை இவர்கள்
முடிவு செய்வராம்!
என்ன ஆணவம்!
ரஷ்யா -- உக்ரைன் போர்
இவ்வளவு நாட்கள் நீடிக்க காரணமே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின்
நேரடி மற்றும் மறைமுக ராணுவ உதவிகள் தான். அவற்றை இந்நாடு கள் நிறுத்தினாலே
போதும்; போர் நின்று விடும் .
கூடுதல் வரி விதிப்பால்,
அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை கூடும் தான். அதே
நேரம், உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம் கூடினால், நம் பொருட்கள்
அமெரிக்கச் சந்தையில் நிலைத்து நிற்கும்!
சீனாவின் மிக மலிவான
பொருட்களுக்கு, இந்தியச் சந்தையைத் திறந்து விட்டதும், 'இந்தியப்
பொருளாதாரம் மிகவும் பாதிக்கும்' என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
ஆனால், தரமான தயாரிப்புகளால் நம் நாட்டு பொருட்கள் சந்தையில் நிலைத்து
நின்றன.
எனவே, பொருட்களின் விலையைக் குறைத்து, தரத்தைக் கூட்ட அரசும், உற்பத்தியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
கூடவே, உலக நாடுகளில் நம் சந்தையைப் பெருக்கவும் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். ஒரு வாசல் அடைத்தால், ஒன்பது வாசல் திறக்கும்!
இந்தியாவின் அசுர வளர்ச்சி, பல நாடுகளை பதற்றப்பட வைத்துள்ளது என்பதே உண்மை.
அமெரிக்கா நம் மீது தொடுத்திருப்பது, 'வர்த்தகப் போர்' என்பதை மறந்து,
இங்குள்ள சில அரசியல் தலைவர்கள், அந்நாட்டின் ஊதுகுழலாக மாறியுள்ளனர். இந்த
உள்நாட்டு தேச துரோகிகளை மக்கள் நினைவில் நிறுத்தி, தேர்தலில் பாடம்
கற்பிக்க வேண்டும்.
நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும்
கண்ணுக்கெட்டிய துாரம் வரை எதிரிகள் உள்ள நிலையில், மத்திய அரசு எச்சரிக்கை
யாகப் பயணிக்க வேண்டிய நேரம் இது!