/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஏழைகளுக்கு கொடுக்க மனம் இல்லையா?
/
ஏழைகளுக்கு கொடுக்க மனம் இல்லையா?
PUBLISHED ON : டிச 26, 2025 03:43 AM

ஆர்.ராமசாமி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாத்மா காந்தி தேசிய
ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை, 'விக்சித் பாரத் -காரன்டி பார் ரோஜ்கர்
அண்ட் அஜீவிகா மிஷன்' என்று பெயர் மாற்றியதற்காக இண்டியா கூட்டணியினர்
வானுக்கும் பூமிக்குமாய் குதித்து, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
'ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து மஹாத்மா காந்தியின் பெயர்
நீக்கப்பட்டதன் வாயிலாக, இரண்டாவது முறையாக அவர் கொல்லப்பட்டு உள்ளார்.
குறைபாடுகள் உள்ள இச்சட்டத்தின் பெயரை, அமைச்சர்களே புரிந்து கொள்ள
சிரமப்படுவர்' எனக் கூறியுள்ளார், ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம்.
கூடவே, காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், 'மத்திய அரசின் புதிய
சட்டத்தில், மஹாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இச்சட்டம் எந்த வேலை வாய்ப்பு உத்தரவாதத்தையும் வழங்கவில்லை.
இச்சட்டத்திற்கு எதிராக, வரும் நாட்களில் மக்கள் வீதிகளில் இறங்கி
போராடுவர்' என்று, மக்களை போராட்டம் நடத்த துாண்டியுள்ளார்.
பழைய
100 நாள் வேலை திட்டத்தில், ஒரு நாள் ஊதியம், 319 ரூபாய்; புதிய 125 நாள்
வேலை திட்டத்தில், ஒரு நாள் ஊதியம், 336 ரூபாய். பழைய திட்டத்தில் ஆண்டு
ஒன்றுக்கு, 100 நாட்கள் மட்டும் தான் வேலை; புதிய திட்டத்தில் ஆண்டு
ஒன்றுக்கு, 125 நாட்களுக்கு வேலை.
அதாவது, தினசரி கூலியில், 19
ரூபாய் கூடுதலாகவும், 25 நாட்கள் கூடுதலாக வேலை கிடைக்கும் நிலையில்,
மக்கள் எதற்காக வீதிகளில் இறங்கி போராடப் போகின்றனர்?
இச்சட்டத்தின் வாயிலாக எந்த வேலை வாய்ப்பு உத்தரவாதத்தையும் அரசு வழங்கவில்லை என்கிறார், சுப்ரியா.
அப்படியெனில், பழைய, 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும், வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததா?
வேலை வாய்ப்பற்ற கிராமப்புற விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 475 ரூபாய்
கூடுதலாக கொடுப்பதற்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றனர்?
'விக்சித் பாரத் -காரன்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன்' என்று சொல்ல
சிரமப்படக் கூடாது என்று தான் அதை, மத்திய அரசே, 'ஜி ராம் ஜி' என்று
அழைக்கிறது. அதையே, நாமும் சொல்லலாமே! ஆனால், தி.மு.க., உட்பட, 'இண்டி'
கூட்டணி கட்சிகள் இத்திட்டத்தை எதிர்க்க, பெயர் நீக்கம் காரணம் அல்ல; வேறு
ஒரு காரணம் உண்டு. அது, பழைய, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் கூலியான
319 ரூபாயை, இதுவரை மத்திய அரசு கொடுத்து வந்தது. அதில், இக்கட்சி
தொண்டர்கள், இஷ்டம் போல புகுந்து விளையாடி கொண்டிருந்தனர்.
இப்போது, புதிய 125 நாள் வேலை திட்டத்திற்கான பணத்தில், 60 சதவீதம் மத்திய
அரசும், 40 சதவீதம் மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்று பங்கு பிரித்து
விட்டது.
சுருட்டியே பழக்கப்பட்டவர்களிடம், 40 சதவீத பங்கை விவசாய
கூலிகளுக்கு கொடு என்றால், கொடுக்க மனம் வருமா? அதனால் தான் இந்த
எதிர்ப்பு!
இந்த லட்சணத்தில், 'உரிமை தொகை கொடுக்கிறோம், இலவச பஸ்
விடுகிறோம்; பொங்கல் பரிசு வழங்குகிறோம், புளியோதரை சாதம் கொடுக்கிறோம்'
என்ற, 'பில்டப்'புகள் வேறு!
ஹிந்துக்கள் இல்லாமல் தி.மு.க., கட்சி நடத்த முடியுமா?
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காவல் துறையை வைத்து தடுத்தது, தி.மு.க., அரசு.
காரணம், மதக்கலவரம் ஏற்பட்டு விடுமாம்!
கிடா வெட்டி பிரியாணி பரிமாறிய போது வராத மதக்கலவரம், கோவில் இடத்தில் தீபம் ஏற்றினால் வந்து விடுமா?
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஹிந்துக்களையும், ஹிந்துக் கடவுள்களையும் அறவே பிடிக்காது. ஹிந்துக்களை திருடர்கள் என்று வசை பாடியவர்.
'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலையும், தில்லை நடராசர் ஆலயத்தையும் இடிக்கும் நாள் எதுவோ, அதுவே தமிழகத்தின் பொன்னாள்' என்று, 'முரசொலி' பத்திரிக்கையில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதியவர் கருணாநிதி.
அவரது வாரிசுகளுக்கு மட்டும் எப்படி ஹிந்துக்களை பிடிக்கும்?
சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், அதை டெங்கு, மலேரியா கொசு என்று துாற்றியவர், துணை முதல்வர் உதயநிதி.
ஹிந்துக்கள் தி.மு.க., விற்கு ஓட்டுப்போட மறுத்திருந்தால், கருணாநிதி ஐந்து முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பாரா இல்லை ஸ்டாலின்தான் ஆட்சியைப் பிடித்திருக்க முடியுமா?
அவ்வளவு ஏன்... ஹிந்துக்கள் ஆதரவின்றி, சிறுபான்மையினரின் ஆதரவை மட்டும் வைத்து, தி.மு.க., என்ற கட்சியைத் தான் நடத்த முடிந்திருக்குமா?
ஆனாலும், நன்றியில்லாமல், தொடர்ந்து ஹிந்துக்களை அவமரியாதை செய்து வருகிறது, தி.மு.க.,
ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து தி.மு.க.,விற்கு பாடம் கற்றுக் கொடுக்கவில்லை என்றால், தொடர்ந்து இது போன்ற அவமதிப்புகளையே சந்திக்க நேரிடும்!
வாய்ப்பூட்டு அவிழ்வது எப்போது?
அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் காலனி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன், பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து பலியாகியுள்ளான். போராட்டம் நடத்திய பெற்றோரையும், உறவினர்களையும் காவல் துறையினர் சமரசம் செய்து, விஷயம் பெரிய அளவில் சென்று விடாமல், தங்கள் கடமையை, செவ்வனே செய்துள்ளனர்.
முதல்வரும் வழக்கம் போல், 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கி, ஓர் இரங்கற்பா இசைத்து, தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் விலகி விட்டார்.
இதுபோன்று தான், கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்துள்ளது; பள்ளியைச் சுற்றி புதர் மண்டி கிடப்பதே இதற்கு காரணம்!
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியிலோ, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் வகுப்பறையில் மது அருந்தியுள்ளனர்.
இப்படி கல்வி நிலையங்களும், மாணவ - மாணவியரும் பாழ்பட்டு கிடக்கின்றனர். இதற்கெல்லாம் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமோ, சிறு கண்டன அறிக்கையோ வெளியிடவில்லை.
இதுவே, முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் நடந்திருந்தால், பொங்கி எழுந்திருப்பர், இந்த வர்க்க போராளிகள்!
இப்போது, 'சீட்'க்காகவும், நோட்டுக்காகவும், இவர்களது கைகளும், வாய்களும், இரும்பு சங்கிலிகளால் கட்டப்பட்டு உள்ளன போலும்!
ஆட்சி மாறி, காட்சி மாறினால், இவர்களது வாய்ப்பூட்டு அவிழுமோ!

