PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

கோ.பாண்டியன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அரசின், 10
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்தது சட்ட விரோதமானது'
என்று கூறி, அம்மசோதாக்கள் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது, உச்ச
நீதிமன்றம். இதன் வாயிலாக பல்கலை வேந்தர் பதவியிலிருந்து கவர்னர்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து
நீக்குவது மற்றும் அப்பதவிக்கு தமிழக அரசு நியமிப்பவர்களே வேந்தராக இனி
இருப்பர் என்பது தான், தி.மு.க., அரசு கொண்டு வந்த 10 மசோதாக்களில்
குறிப்பிடும்படியானது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழக அரசே
பல்கலை துணை வேந்தர்களை இனி நியமிக்கும்!
எனவே, இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பல்கலை வேந்தர் பொறுப்பானது சிறந்த கல்வியாளர்களுக்கு கொடுக்கப் போவதில்லை.
துணை
வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பில் வேந்தர் இருப்பதால், தி.மு.க.,
ஆதரவாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி, தமிழ் பாடநுால்
நிறுவனத்தில் தலைவரானதுபோல், பட்டிமன்ற பேச்சாளர்களும், நடுவர்களும் பல்கலை
துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம்.
தற்போது, துணை வேந்தர்களை
தேர்வு செய்ய, தேடுதல் குழு ஒன்றை நியமித்து, அதன் பரிந்துரையின் பேரில்
தான், புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
வருங்காலத்தில் இதுபோன்று தேடுதல் குழுவின் பரிந்துரைகள் தேவைப்படாது.
பட்டிமன்றங்களில்
ஆளுங்கட்சியையும், அதன் தலைவரையும் அதிகமாக புகழ்வோரும், கட்சிக்
கூட்டங்களுக்கு அதிகமாக ஆள்பிடித்து வருவோரும், கழகங்களுக்கு அதிக,
'கலெக்சன், கமிஷன்' கொடுப்போரும் துணை வேந்தராக முடியும் என்ற நிலை
ஏற்படலாம்.
பல கோடி ரூபாய் கொடுத்து தான், இந்த பதவிகள்
பெறப்பட்டதாக கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்தன. அதனால், இனி வரும்
காலங்களில் பதவிகள் ஏலத்தில் விடப்பட்டு, அதிக தொகைக்கு ஏலம்
கேட்பவர்களுக்கே பதவி வழங்கப்படலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு,
கவர்னர் ரவி என்ற தனிபட்ட நபருக்கு எதிராக வழங்கப்பட்டதாகவும், மாநில
உரிமையை நிலைநாட்டி விட்டதாகவும், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்
வழிகாட்டியாக விளங்குவதாகவும் தமிழக அரசியல்வாதிகள் புளகாங்கிதம்
அடைகின்றனர்.
இதனால் வீழப்போவது கவர்னர் அல்ல; கழகங்களிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகப்போகிற பல்கலை கல்வி முறை தான்!
ஆக்கப்பூர்வமான
பாடத்திட்டங்களுக்கு பதிலாக, கழக துதி பாடல்களும், ஒப்பாரிகளும் தான்
அதிகம் இடம் பெறும். அத்துடன், கட்சிகளின் கிளை அமைப்புகளாக பல்கலைகள்
மாறவும் வாய்ப்புள்ளது.
பாம்பன் பாலம் பத்தி பேசலாமா?
பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை கேள்வி நேரத்தின்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, ' படித்த இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும்' என்றார். அதற்கு, 'படித்த இளைஞர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பு பாலம் தான், 'நான் முதல்வன் திட்டம்' என்று கூறினார், சபாநாயகர் அப்பாவு.
'அந்த பாலம் வலுவாக அமைய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்று வானதி கூறியதும், குறுக்கிட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 'சமீபத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலம் போன்று இல்லாமல், திராவிட மாடல் பாலம் சிறப்பாக, உறுதியாக இருக்கும்' என்றார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் அமைக்கப்பட்ட செங்குத்து பாலம் இது. இதன் உறுதித்தன்மையை சென்னை, மும்பை ஐ.ஐ.டி., நிபுணர் குழுவும், திருச்சி பெல் நிறுவனத்தின் வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் உறுதி செய்துள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பாலத்தையும், அதை வடிவமைத்த இன்ஜினியர்களையும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார், சிவசங்கர்.
தி.மு.க.,வினர் கட்டும் பாலம் எந்த அளவு உறுதியாக இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன... திருவண்ணாமலைமாவட்டம், தண்டராம் பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 16 கோடி ரூபாயில் கட்டிய பாலம், மூன்றே மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதே... அதுபோன்று, உறுதியான, சிறப்பான பாலத்தை திராவிட மாடல் அரசை தவிர, உலகில் எவராலும் கட்ட முடியாது தான்!
பொதுவாக, பாலத்தை வடிவமைக்கும்போது நான்கு அல்லது ஐந்து மடங்கு தாங்கும் திறனோடு தான் வடிவமைப்பர். வெள்ளநீரை தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து போனது என்றால், அந்த அளவு தரமற்ற கட்டுமானத்தில் பாலத்தை அமைத்துஉள்ளனர்.
எதிலும் கலெக் ஷன், கமிஷன் என்று இருக்கும் தி.மு.க., அரசால், சாதாரண ஆற்றுப் பாலத்தையே உறுதியாக அமைக்க முடியவில்லை; பாம்பன் பாலத்தின் கட்டுமானத்தோடு போட்டி போடுகின்றனர்.
முதலில், சாதாரண மழைக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் தரமான சாலைகளை அமையுங்கள்; பின், பாம்பன் பாலம் குறித்து பேசலாம்!
கருணை காட்ட வேண்டும்!
வி.சந்திரசேகரன், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தும், அரசு ஊழியர் போன்ற சலுகைகள், ஓய்வூதியமின்றி வாழும் பாவப்பட்ட ஜென்மங்கள் தான், இ.பி.எப்., பென்ஷன் திட்ட ஓய்வூதியர்கள்!
மத்திய அரசின் வருங்கால வைப்புநிதி திட்டம் வாயிலாக, இவர்களின் ஓய்வூதியத்திற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டு, 5,000, 6,500 ரூபாய் பின், 15, 000 ரூபாய் என, காப்புறுதி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி ஒருவர், 35 ஆண்டுகள் பணிபுரிந்தாலும், 3,250 ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் பெறமுடியும். இச்சிறு தொகையை வைத்து வயதான காலத்தில் எப்படி வாழ முடியும் என்பதை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நினைத்துப் பார்ப்பதில்லை!
அத்துடன், 10 - 15 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை மட்டுமே ஓய்வூதியமாக பெறுகின்றனர்.
இவ்வளவு குறைந்த ஓய்வூதியம் பெறுவோர், 80 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கை, 2030ல் ஒரு கோடியை தாண்டும்!
இவர்கள் அனைவருமே, 70 வயதை கடந்தவர்கள்; குடும்பத்தினரின் கையை எதிர்பார்த்து வாழ்ந்து வருபவர்கள்!
கடந்த 2004 க்கு பின் பணியில் சேர்ந்தோர் தவிர்த்து, பழைய ஓய்வூதிய திட்ட ஓய்வூதியர்கள், 2017 புள்ளி விவரப்படி, மத்திய அரசு ஊழியர்கள், 34.65 லட்சம் பேர்; மாநில அரசு ஊழியர்கள், 1.06 கோடி பேர்கள் உள்ளனர். புதிய பென்ஷன் திட்ட ஊழியர்கள் குறைவே!
எனவே, மத்திய அரசு இ.பி.எப்., பென்ஷனை, விலைவாசிக்கு ஏற்ப திருத்தி, பஞ்சப்படியுடன் மாதம் 10,000 ரூபாயாக உயர்த்தி, வயதான ஓய்வூதியர்களின் அந்திம காலம் ஓரளவு அமைதியுடன் கழிய, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்!

