/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நெத்தியடி கொடுத்த ஹிமாச்சல் காங்.,
/
நெத்தியடி கொடுத்த ஹிமாச்சல் காங்.,
PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், மக்களை மட்டுமல்ல; தங்கள் கட்சிப் பிரதிநிதிகளையும் மூளையில்லாதவர்களாகவே நடத்துகின்றன.
அந்த நினைப்புக்கு மரண அடி கொடுத்து இருக்கிறார்கள் ஹிமாச்சல் பிரதேச காங்., கட்சியினர்.
அங்கு, சுக்விந்தர் சிங் சுகு தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்த போதும், பா.ஜ., வென்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, வெற்றிகரமாக தோல்வியை தழுவினார்.
காரணம், காங்கிரஸைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களும், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறி ஓட்டளித்ததால், பா.ஜ.,வின் ஹர்ஷ் மகாஜன், சுலபமாக வெற்றிக்கனியை பறித்து விட்டார்.
தொடர்ந்து, கட்சி மாறி ஓட்டளித்த ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்; தலைவலி போய் திருகு வலி வந்தது!
கட்சிமாறி ஓட்டளித்த ஆறு எம்.எல்.ஏ.,க் களை தகுதி நீக்கம் செய்யப்போக, தற்போது, ஹிமாச்சல் பிரதேச காங்கிரஸ் கட்சி ஆட்சியே ஆட்டங்காண துவங்கிஉள்ளது.
கட்சிமாறி ஓட்டளித்த ஆறு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான ராஜிந்தர் ரானா கூறும் போது, 'நாங்கள் எங்கள் மனசாட்சியின் படி ஓட்டளித்தோம். ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்கள் ஒருவரும் இல்லையா? ஏன் வெளிமாநிலத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்?
'எங்கள் மன உணர்வுகளை முதல்வரும், கட்சி தலைமையும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் கட்சிமாறி ஓட்டளித்து, எங்கள் மன உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ள வைத்தோம்' என்கிறார்.
இது ஹிமாச்சல பிரதேசத்தில் மட்டும் நிகழும் நிகழ்வல்ல; பா.ஜ., உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ராஜ்யசபா தேர்தலின் போது, அந்த மாநிலத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவதை வழக்கமாக்கி வைத்துள்ளன.
உதாரணமாக, தி.மு.க.,வின் ஜெகத்ரட்சகனை எடுத்துக் கொள்வோம்... இவர் வசிப்பது சென்னை அடையாறு பகுதியில்; லோக்சபாவுக்கு போட்டியிடுவது அரக்கோணம் தொகுதியில் இருந்து!
அரக்கோணம் தொகுதியில் ஒரு பிரச்னை என்றால், அந்த பிரச்னையை பற்றி தொகுதி எம்.பி.,யிடம் எடுத்து சொல்லவே 500 ரூபாய் செலவழித்து, சென்னைக்கு வர வேண்டும்.
அதேபோல, துரைமுருகன்! அன்னார் வசிப்பது, சென்னை கோட்டூர்புரத்தில்; ஆனால், சட்டசபைக்கு போட்டியிடுவது காட்பாடி தொகுதியில் இருந்து!
தமிழக வாக்காள பெருமக்களே...
இன்னும் இரண்டு மாதங்களில் உங்கள் பொன்னான வாக்குகளை, ஈ.வி.எம்., இயந்திரத்தில் அழுத்தி, உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள்.
அந்த பிரதிநிதி உங்கள் தொகுதியில் வசிப்பவரா என்பதை மட்டும் ஆராய்ந்து, சூதனமாக நடந்து கொள்ளுங்கள். நாடு முக்கியம்!
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!
க.ஆறுமுகம்,
நாங்குநேரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின் 178வது வாக்குறுதியாக,
'ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்' என
அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது 446 மூன்றாம் நிலை நுாலக
பணியிடங்களுக்கு பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
கிட்டத்தட்ட 1,530 ஊர்ப்புற நுாலகர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில்
பெரும்பாலானோர், 50 வயதை கடந்தவர்கள்; பலர் இரண்டொரு ஆண்டு களில் ஓய்வு
பெறவும் உள்ளனர்.
இவர்களுக்கு, மூன்றாம் நிலை நுாலகர்களுக்கு இணையான
கல்வி தகுதி, பணி நேரம் இருந்தும், போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. அரசு
பணியாளர்களுக்கு இணையான விடுப்புகள், சலுகைகள் எதுவும் வழங்கப்படாமல்,
சொற்ப ஊதியத்தில் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
நுாலகத்திற்கு
புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, நன்கொடையாளர்கள் மற்றும் புரவலர்கள்
வாயிலாக, தளவாட பொருட்கள் பெற்று, நுாலகத்தை நடத்துகின்றனர். 1996ல்
உருவாக்கப்பட்ட ஊர்ப் புற நுாலகர் பணியிடங்கள், இன்று வரை பணிவரன்முறை
செய்யப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நுாலகங்கள் தரம்
உயர்த்தப்படவும் இல்லை. ஆனால், தற்போது 446 காலி பணியிடங்கள் மட்டும்
நிரப்பப்பட்டு, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது போன்ற பொய்யான
தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி,
ஊர்ப்புறநுாலகர்களுக்கு பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்குவதுடன்,
நுாலகங்களை தரம் உயர்த்தவும் வேண்டும். சட்டசபை தேர்தலில் அளித்த
வாக்குறுதியை, லோக்சபா தேர்தலின் போதாவது தி.மு.க., அரசு அமல்படுத்த
வேண்டும்.
500 விக்கெட் அஸ்வினை பாராட்டுவோம்!
வெ.சீனிவாசன்,
திருச்சி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய கிரிக்கெட்
அணியில் விளையாடி வரும், தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரன்,
சமீபத்தில் 500வது விக்கெட்டை எடுத்து பெரிய சாதனை புரிந்துள்ளார்.
உலகத்திலேயே,
500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள பந்து வீச்சாளர்கள் மிகக் குறைவே.
அந்த சாதனையை நம் அஸ்வின் செய்துள்ளார் என்பது, நம் அனைவருக்கும் பெருமை,
மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். 500 விக்கெட்டுகள் எடுப்பதற்கு, பல
ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்.
கிட்டத்தட்ட, 140
கோடிக்கு மேல் மக்கள் தொகையுள்ள நம் நாட்டில், விளையாடும் 11 பேர் கொண்ட
குழுவிற்குள் தொடர்ந்து இடம்பெற வேண்டியது அவசியம். இது சாதாரண விஷயமல்ல...
மிக மிக கடினமானது.
இத்தனை ஆண்டுகள் விளையாடுவதற்கு உடல்
ஆரோக்கியமாகவும், 'பிட்'டா கவும் இருக்க வேண்டியதும் அவசியம்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் தேவை. அஸ்வின், தன் பவுலிங்கை ஒரே
மாதிரியாக வீசாமல், காலத்திற்கேற்றார் போல் மாற்றங்களை செய்து வந்தார்.
பந்து வீச்சில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்ள தயங்கியதில்லை.
வெறும் பந்து வீசுபவராக மட்டுமின்றி, பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி, கணிசமான ரன்களையும் நாட்டிற்காக குவித்துள்ளார்.
'டி
- 20, டி - 50' டெஸ்ட்டுகள் என்று கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும்
தன் திறமைகளை வெளிப்படுத்தியவர் அவர். அஸ்வின் இதுபோன்று இன்னும் பல
சாதனைகளை படைக்க வாழ்த்துவோம்.

