தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தமிழகம் எப்படி கல்வியில் சிறக்கும்?

 தமிழகம் எப்படி கல்வியில் சிறக்கும்?

 தமிழகம் எப்படி கல்வியில் சிறக்கும்?


PUBLISHED ON : ஏப் 13, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ரூபன் விநாயக், பொள்ளாச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 15,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 68 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

இப்பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டட உறுதித்தன்மை, தீ அணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை சான்றிதழ் ஆகியவற்றை பெற்று, மாவட்ட கல்வி அலுவலகம் வாயிலாக, அவை கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, அவர்களுடைய அங்கீகாரத்தை பெற்றால்தான், அப்பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு டி.சி., வழங்க முடியும்; பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., செய்ய முடியும்; வங்கியில் கடன் பெற முடியும்; புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அனுமதியையும் பெற முடியும்.

இந்நிலையில், 8,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், கல்வித் துறையின் அனுமதியைப்பெற அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

அதனால், அவர்களால் மாணவர்களுக்கு டி.சி., வழங்க முடியவில்லை; பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., எடுக்க முடியவில்லை; புதிய கட்டடங்களை கட்ட முடியவில்லை என, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியுள்ளார்.

அப்படியெனில், தமிழகம் பள்ளி கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது என, திராவிட மாடல் முதல்வர் மேடைக்கு மேடை கூறிவருவது பொய்யா?

கல்வி துறைக்காக ஓர் அமைச்சரையே வைத்துள்ள நிலையில், கல்விக்காக மொத்த பட்ஜட்டில் பல நுாறு கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு கூறும் நிலையில், 15,000க்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் அரசின் எந்த உதவியும் பெறாமல் பல லட்சம் மாணவர்களுக்கு கல்வியை வழங்கிவரும் நிலையில், அப்பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் அங்கீகாரத்தை கூட வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் இந்த அரசா, தமிழக மாணவர்களை கரைசேர்க்கப் போகிறது ?

அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள், கட்டடங்கள் இல்லை. ஏழைப் பிள்ளைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் நவோதயா பள்ளிகளையும் வரவிடவில்லை.

சரி... தனியார் பள்ளிகளிலாவது தங்கள் பிள்ளைகள் தரமான கல்வியை கற்றுக் கொள்ளட்டும் என்று பெரும் பொருட்செல்வில், அப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தால், அதற்கும் இதுபோன்று ஆயிரம் இடையூறு!

இந்த லட்சணத்தில் தி.மு.க., ஆட்சி இருக்கும் போது, தமிழகம் எப்படி கல்வியில் சிறக்க முடியும்?

கருணை ஒருவழி பாதையா?


வ.உதயகுமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வழக்கில், ஒன்பது போலீசாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது குறித்து, 'இது, அவர்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய தண்டனை' என உருகியுள்ளார், நடிகர் கமல்ஹாசன்.

காவல் துறையினரின் குடும்பத்தினர் மீது தான் கமலுக்கு எவ்வளவு பாசம்...

நிகிதா என்ற பெண் அளித்த புகாரின்படி மடப்புறம் கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றவர்களும், இந்த போலீஸ்காரர்கள் தானே... கண்மூடித்தனமாக, இரக்கமில்லாமல் சித்ரவதை செய்து சாகடித்தது நியாயம் என்கிறாரா கமல்?

அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளியை பாதுகாக்க போலீசார் செய்த தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் ஏற்புடையது தானோ?

சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமிக்கு எதிராகவும், குற்றவாளிக்கு ஆதரவாகவும் நடந்து நீதிமன்றத்தில் குட்டுபட்ட காவல் துறையின் செயல்பாடு சட்டத்திற்கு உட்பட்டது தானா?

சட்டத்தை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க நினைக்கும் காவல் துறையினர், தண்டனையில் இருந்து தப்புவது தான் நியாயம் என்கிறாரா கமல்?

அநீதிக்கு ஆட்படுவதை விட, அநீதி இழைப்பது அதிக கேவலமானது என்கிறார், அறிஞர் பிளாட்டோ.

அமெரிக்கா முன்னாள் அதிபர் கிளின்டனின் மகள், தன் காரின் மூலம் ஒரு சிறிய விபத்தை ஏற்படுத்தி, சிக்கிக் கொண்டார். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில், அவர் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்பட்டு, 400 டாலர் அபராதம் கட்டினார். இங்கோ வட்டம், மாவட்டத்தை கூட காவல் துறையினரால் தண்டிக்க முடிவதில்லை.

'சட்டம் ஈக்களை பிடிக்கும்; குளவிகளை தப்பவிடும்' என்று அண்ணாதுரை கூறியுள்ளது போல், இங்கு எளியவர்களுக்கு தான் சட்டமே தவிர, அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத் தவர்களுக்கும் இல்லை!

மரண தண்டனை ஏற்புடையது அல்ல என்றால், அப்பாவிகள் இருவரை அடித்துக் கொன்றது மட்டும் ஏற்புடைய செயல் தானோ?

இரு உயிர்களை துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்ற காவல் துறையின் குடும்பத்திற்கு வருத்தப்படும் கமல், உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபப் படவில்லையே ஏன்?

இரக்கமும், கருணையும் ஒருவழிப் பாதையா என்ன?

தாராளம் காட்டும் தி.மு.க.,!


எம்.கருப்பசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள், பஞ்சாயத்து போர்டு பள்ளிகளில் போதுமான கட்டடம், கழிப்பறை வசதி இல்லை. ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியாத நிலையில் உள்ளது, தி.மு.க., அரசு. அதே நேரம், உருது பள்ளிகளுக்கு மட்டும் கட்டட வசதிகளை செய்து கொடுத்து, ஆசிரியர்களுக்கு ஊதியத்தையும் அள்ளித் தந்து, உருது மொழியை பேணுகிறது.

இந்த லட்சணத்தில், 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்பது கல்வி சீர்திருத்தம் அல்ல; அது ஹிந்தி திணிப்பு' என் கிறார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.

இந்திய மொழிகளில் ஒன்றை படிக்க வேண்டும் என்றால், அது ஹிந்தி திணிப்பு என்று அலறும் தி.மு.க., உருது மொழிக்கு மட்டும் உருகுவது ஏன்?

உருது என்ன திராவிட மொழியா அல்லது தமிழிலில் இருந்து பிறந்த மொழியா?

ஓர் அந்நிய மொழிக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகளும், பராமரிப்பும்?

ஹிந்தி படிக்க விரும்புவோர், 'தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா' வாயிலாக பயில்வது போல், 'அரேபிய உருது பிரசார சபா' என்ற ஒன்றை துவக்கி, அதன் வாயிலாக அம்மொழியை படித்து விட்டு போகட்டுமே... ஹிந்துக்கள் 80 சதவீதம் வசிக்கும் நாட்டில், அவர்களது வரிவசூலில் இருந்து எதற்கு உருது பள்ளிகளுக்கு செலவு செய்ய வேண்டும்?

உருது மொழியை வளர்த்தே தீருவோம் என்றால், கழகத்தினர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளிலிருந்தோ அல்லது கழக அறக்கட்டளையில் குவிந்துள்ள கோடிகளில் இருந்தோ செலவு செய்ய வேண்டியது தானே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us