sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சீமானுக்கு எத்தனை நாக்குகள்?

/

சீமானுக்கு எத்தனை நாக்குகள்?

சீமானுக்கு எத்தனை நாக்குகள்?

சீமானுக்கு எத்தனை நாக்குகள்?


PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் 2026, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வீழ்த்துவதுதான் எங்களது பிரதான நோக்கம்' என்று கூறியுள்ளார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் தினகரன்.

இவர் தான் கடந்த சில நாட்களுக்கு முன், 'தீயசக்தி தி.மு.க.,வின் ஆட்சியை வீழ்த்தி, அம்மா ஆட்சியை கொண்டு வருவதுதான். எங்கள் நோக்கம்' என்றார்.

இப்போது, 'முதல்வர் ஸ்டாலின், தன் பல ஆண்டுகால அரசியல் அனுபவத்தின்படி ஆட்சி செய்கிறார்' என்கிறார்.

தீய சக்தி தி.மு.க., எப்போது நல்ல சக்தியாக மாறியது?

'வரும் சட்டசபை பொதுத்தேர்தலில் தினகரன் வீழ்த்த நினைப்பது தி.மு.க.,வையா, பழனிசாமியையா?' என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, 'துரோகத்தை வீழ்த்துவதுதான் எங்கள் பிரதான நோக்கம்' என்றார்.

அப்படியானால், அம்மா ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொன்னது பொய்யா?

எதற்கு இந்த இரட்டை நாக்கு?

இதேபோன்று தான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் சம்பவம் குறித்து பேசும் போது, 'முதல்வரை நாகரிகம் இல்லாமல், 'முதலமைச்சர் சார்...' என்று பேசுகிறார் விஜய்...'என்றார்.

ஆனால், கடற்கரையில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வைக்க ஆலோசனை நடந்தபோது, 'முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதியின் நினைவாக பேனா சிலை வைக்க விரும்புகிறார். இவருக்குப் பின் இவருடைய மகன் உதயநிதி, தன் தந்தை ஸ்டாலின் நினைவாக, அவர் தலையில் அணியும், 'விக்'கை நினைவுச் சின்னமாக எழுப்புவாரா?' என்று நையாண்டி செய்தார், சீமான்.

விஜய் சொன்னது நாகரிகம் இல்லை என்றால், சீமான் பேசிய வார்த்தைகள் மட்டும் நாகரிகமா?

இதுமட்டுமா... 'ஜெயலலிதா பார்ப்பன பெண்ணாக இருந்தாலும், பட்டியலினத்தை சேர்ந்த தனபாலை சபாநாயகர் என்ற உயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து, சமூகநீதி காத்தவர்' என்று ஜெயலலிதாவை பாராட்டியவர், மற்றொ-ரு பேட்டியில், அண்ணா-துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது சமாதியைக் குறிப்பிட்டு, 'மூன்று ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் படுத்திருக்கிறார்' என்று கீழ்த்தரமாக விமர்சித்தார்.

இதேபோன்று, இலங்கை தமிழர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர்., என்று புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தவர், சமீபத்தில், எம்.ஜி.ஆரை, 'சனியன்' என்று குறிப்பிட்டு கடும் விமர்சனம் செய்துள்ளார். சராசரி மனிதர்களுக்கு ஒரு நாக்கு என்றால், தினகரனை போன்ற அரசியல்வாதிகளுக்கு இரு நாக்கு. இதில், தினந்தோறும் பேட்டிகளிலும், பொது மேடைகளிலும் மாற்றி மாற்றி கருத்துகளை கூறி வரும் சீமானுக்கோ எண்ணிக்கையில் அடங்காத நாக்குகள்!

எலும்பில்லாத நாக்கு தானே... அதுதான் எப்படியெல்லாமோ வளைகிறது!

lll

திருமாவிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை உயர் நீதிமன்றம் அருகே, வி.சி., தலைவர் திருமாவளவன் சென்ற கார், முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது லேசாக மோத, ஸ்கூட்டரில் சென்றவர் நிலை தடுமாறியுள்ளார். அதனால், 'ஏன் காரை இப்படி ஓட்டி வருகிறீர்கள்' என்று டிரைவரிடம் கேட்டுள்ளார்.

இதில் என்ன தவறு?

ஆனால், அப்படி கேட்டதற்காக திருமாவளவனுடன் காரில் வந்தவர்கள், ஸ்கூட்டரை ஓட்டி வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியுள்ளனர். அவரது ஸ்கூட்டரையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இவையெல்லாம் திருமாவளவன் முன்னிலையில் நடந்துள்ளது என்றால், அவர் என்ன மாதிரியான தலைவர்? இவருக்கு ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது?

'ஊருக்கெல்லாம் பலன் சொல்லுமாம் பல்லி; அது விழுமாம் கழுநீர் பானைக்குள் துள்ளி' என்பது போல், நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பிரச்னை நடந்தாலும், இங்கு பத்திரிகையாளர்களை கூட்டி, ஜனநாயகம், அரசியலமைப்பு, சமூகநீதி, சமத்துவம் என்று வாய் கிழிய பேசும் திருமாவளவன், வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இளைஞரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்காமல், கட்சிக்காரர்கள் தாக்குவதை வேடிக்கை பார்த்து ரசித்துள்ளார்.

அதுசரி... 'அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி' என்பவரிடம் என்ன நியாயம் கிடைக்கும்?

lll

தமிழ் மொழியை சிதைப்பது யார்? கு.கோப்பெருந்தேவி,சென்னையில் இருந்து எழுதுகிறார்: ' கல்வியில் சிறந்தது தமிழ்நாடு' என்று மார்தட்டிக் கொள்வதும், 'தமிழை காப்போம்' என்று சூளுரைப்பதும், ஆளும் அரசின் நிர்வாக தோல்வியை, ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க போடும் வேஷம்.

ஹிந்தி படிப்பது பெரிய தேச துரோகமாகவும், தமிழை இழிவுபடுத்தும் செயல் போலவும் பேசுகின்றனர், தமிழக முதல்வரும், கல்வி அமைச்சரும்!

ஒரு தமிழன் ஹிந்தி படித்து தோல்வி அடைந்தாலோ, ஹிந்தி படிக்க தெரியவில்லை என்றாலோ அதில் தவறு இல்லை. ஆனால், தமிழகத்தில் பிறந்து, தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், தமிழ் பாடத்தில் தோல்வியுறுவதும், தமிழை படிக்கத் தெரியாமல் இருப்பதும் தான் வெட்கக் கேடு!

கடந்த முறை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர், என்னிடம் தமிழ் படிக்க வந்தார்.

அவரிடம் தமிழ் புத்தகத்தை வாசிக்கச் சொன்ன போது, 'திருதிரு'வென விழித்து, 'எனக்கு தமிழ் எழுத்துகளே புரிய மாட்டேங்குது. ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு, துணைக்கால் எங்கு போட வேண்டும் என்று தெரியவில்லை. ல, ழ, ள, ர, ற,ந, ண, ன போன்ற எழுத்துகள் தலை சுற்ற வைக்கின்றன' என்று, எனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அத்துடன், உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளை அடையாளம் காண்பதே அம்மாணவிக்கு தகராறாக இருந்தது.

தமிழ் எழுத்துகளே தெரியாத அம்மாணவியை ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் பாடத்தில் எப்படி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வைத்தனர்?

இதைவிடக் கொடு மை... பத்தாம் வகுப்பில் தமிழில், 70 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவிக்கே தமிழில் பிழையின்றி எழுத தெரியவில்லை; சரளமாக வாசிக்கவும் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில், ஹிந்தியை எதிர்த்தும், 'தமிழை காப்போம்' என்றும் சூளுரைக்கின்றனர், தி.மு.க.,வினர்.

தமிழை காக்கத்தான் வேண்டும்; அது, ஹிந்தியை படிக்க வேண்டும் என்பவரிடம் இருந்து அல்ல; கூடவே இருந்து கொல்லும் நோய் போல், தமிழ், தமிழ் என்று கூவிக்கொண்டே, தமிழை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் கழகத்திடம் இருந்து!

lll






      Dinamalar
      Follow us