sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : ஜூலை 22, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 22, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடனடி தேவை: தண்டனை! குரு.ஜெயராம் ராஜா, ஆர்.ஆர்.

நகர், விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மும்பையில் மீண்டும் குண்டு வெடித்து, 18 பேர் பலியான சம்பவம், மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. உள்துறை அமைச்சரும், அதிகாரிகளும், இன்னும் பிற அமைச்சர்களும் வெளியிட்ட அறிக்கைகள், புண்பட்ட இடத்தில், உப்பும், மிளகாய்பொடியும் வைத்து தேய்ப்பது போல் உள்ளது. உளவுத்துறை தோல்வி அடையவில்லையாம்; இக்குண்டு வெடிப்பு சம்பவம் எதிர்பாராத நிகழ்ச்சியாம். நல்ல வேளை, 'வழக்கமான நடைமுறை தான்' என சொல்லி, மக்கள் மனங்களில் ஈட்டி பாய்ச்சவில்லை. 'உடனடியாக மக்கள் சகஜ நிலைக்கு வந்துவிட்டனர்' என பாராட்டி, ஆராதிக்கின்றனர். பதவி சுகம் தேடி அலைபவர்களுக்கு, மக்களின் மன உளைச்சல் தெரியப்போவதில்லை. முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், சம்பந்தப்பட்டோருக்கு கோர்ட் தண்டனை அறிவித்தும், அதை நிறைவேற்ற கையாலாகாத நிலை தொடர்ந்தால், இத்தகைய மோசமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். குற்றவாளிகளை பிடித்து, ராஜ உபசாரம் செய்யாமல், அவர்களுக்கு உலகறிய, உடனுக்குடன் தகுந்த தண்டனை அளித்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இதை, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல், உடனடியாக அமல்படுத்த வேண்டும்.



கண்ணீருக்கு சட்டம் கரைந்தால்...: இ.ராவணதாசன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஏழைகளுக்காகவோ, இலங்கைத் தமிழர்களுக்காகவோ கண்ணீர் வடிக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்தால், கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும்! படுகொலை பற்றியும், பிரதமருக்கு விளக்கமாக நிறைய கடிதங்கள் எழுதியுள்ளார். இப்போது அவர் கவலையெல்லாம், சிறையில் கண்ணீர் விடும் தன் மகளைப் பற்றி தான். ராஜா சிறையில் இருக்கும் போது, தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படவில்லை. ஆனால், கனிமொழி சிறையில் இருப்பதால், கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரை சந்தித்து ஆறுதல் கூறியது, கனிமொழி கட்சித் தொண்டர் என்பதாலா; தன் மகள் என்பதாலா? தி.மு.க.,வில் தொண்டருக்கு ஒரு நீதி; தலைவரின் மகளுக்கு ஒரு நீதியா? கனிமொழி கட்சி உறுப்பினர் எனில், குறைந்தது, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்க வேண்டும். கட்சித் தலைவரின் மகள் எனில், தானே தார்மீக பொறுப்பு ஏற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதற்கு, இன முழக்கம் செய்த பொதுச் செயலரும், நிர்வாகிகளும் எப்படி ஒத்துப்போகின்றனர்? கட்சி, கனிமொழியை காப்பாற்ற, அவர் நாட்டுக்காகவோ, மக்களுக்காகவோ சிறை செல்ல வில்லை. பேராசையால் வந்த துன்பம், சுயநலத்தின் பிள்ளை என்பது தெரிந்திருந்தும், அலட்சியப் படுத்தியதால் வந்த நிலை என்பதை, கனிமொழிக்கு காலம் உணர்த்தியிருக்கிறது. கண்ணீருக்கெல்லாம் சட்டம் கரைந்து விட்டால், நீதி சுடுகாடு நோக்கி சென்று விடும்.



ரயில்களில் நரக வேதனை...: வி.எஸ்.ராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தென்னக ரயில்வே, 3,800 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளதாக, தகவல் தெரிவிக்கும் நேரத்தில், பல அகல ரயில்பாதைப் பணிகள், தொங்கலில் தான் உள்ளன. தமிழகத்தில், பல தடங்களில் இருவழிப் பாதைகள் இல்லாததால், போதுமான ரயில்களை இயக்க முடியவில்லை. பெரும்பாலும் இரவு நேரங்களில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள், ஆடு, மாடுகளைப் போல், பயணம் செய்கின்றனர். இப்பெட்டிகளில் பயணிகள் படும்பாட்டை, வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நரகத்திற்குச் செல்லாமலேயே, அதன் வேதனையை அனுபவித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி எப்போது? மேலும், மின்மயமாக்கல் பணியும், மந்த கதியில் நடப்பதால், டீசல் செலவு அதிகரிக்கிறது. மின்மயமாக்கல் செய்யப்பட்ட பகுதிகளில், மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்குவது ஒருபுறம் இருக்கட்டும். பல முக்கிய நகரங்களில், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புறநகர் மின்சார ரயில்களை இயக்க, ரயில்வே துறை முன்வர வேண்டும். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், டிக்கெட் பரிசோதகர்களை நியமித்தால், டிக்கெட் இன்றி பயணம் செய்யும் நபர்களை பெருமளவு குறைக்க முடியும்.



அரசுப்பள்ளி மாணவர்கள் ஓர் அபாயம்! வி.எஸ்.ராமு, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: ராமநாதபுரம் மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் நடத்திய ஆய்வின் போது, சில அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் இருந்து, ஆபாச புத்தகம், சி.டி., மொபைல், அணியக்கூடாத பெல்ட்கள், பனியன்கள், போதைப் பொருட்கள் போன்றவை பிடிபட்ட செய்தியை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்கள் கெட்டுப்போகும் வேகம் அதிகரிக்கிறது. மேலும், கிராமப்புற அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்டுவது திருப்திகரமாக இல்லை. படிக்காத பெற்றோரை, இம்மாணவர்கள் எளிதில் ஏமாற்றிவிடுகின்றனர். இன்று, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களை, ஆசிரியர்கள் தட்டிக் கேட்கமுடியாது. அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மாணவர் மீது அக்கறை கொண்டு, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தால், அவர்களின் வேலைக்கு வேட்டு வைத்துவிடுவர். ஆசிரியர்கள் மீது, எளிதில் பொய்ச் குற்றச்சாட்டை சுமத்தவும் தயங்கமாட்டார்கள். இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கும், மாணவருக்கும் பயந்து, பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களை தண்டிக்கும் விஷயத்திலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விஷயத்திலும், அரசு, பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால், நல்ல மாற்றம் ஏற்படும்.



'வெரிகுட்' ராகுல்! பி.திலகன், மாமல்லபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'லோக்சபாவில் கற்றதை விட, விவசாயிகளிடம் அதிகம் கற்றேன்' என, ராகுல் பெருமிதப்படுவதில் வியப்பில்லை. லோக்சபாவில் இடம்பெற்றுள்ள பலர், கிரிமினல்களாகவும், அறிவிலிகளாகவும், சிலர் பேசாமடந்தைகளாகவும் உள்ளனர். அப்படி இருக்கையில், லோக்சபாவில் ஆக்கப்பூர்வ, அறிவுபூர்வ விஷயங்களை, எதிர்காலத்தில் பிரதமராகத் துடிக்கும் ராகுல் எப்படி கற்க முடியும்? எறும்பு, தேனீயிடம் சுறுசுறுப்பையும்; எருதிடம் உழைப்பையும், நாயிடம் நன்றியையும் கற்க முடியும். ஆனால், ஆறு அறிவு உடைய மனிதனிடம், பார்லிமென்டில் கற்க கூச்சல், குழப்பம், களேபரம் இவற்றை தவிர, உருப்படியான விஷயங்கள் என்ன இருக்கிறது? கத்தியை, சாணக் கல்லில் தீட்டலாம்; காய்ந்த சாணியில் தீட்ட முடியாது. அறிவுள்ள மனிதர்களிடம் பழகினால் புத்தி கூர்மை அடையும். சுயநல, ஊழல் மனிதர்களிடம் பழகினால், புத்தி கேடு அடையும்.








      Dinamalar
      Follow us