/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
எல்லை அறிந்து செயல்படுவது நல்லது!
/
எல்லை அறிந்து செயல்படுவது நல்லது!
PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தங்களது குறைகளை சுட்டிக் காட்டுவோர் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைப்பது வழக்கமாக உள்ளது. காவல் துறையை தங்களது உத்தரவுகளுக்கு பயன்படுத்தி, யாரை வேண்டுமானாலும், எந்த வழக்கைபோட்டும் கைது செய்து விடுவர்.அந்த வகையில், தி.மு.க.,வுக்கு வலை பதிவுகள் வாயிலாக, மிகப்பெரிய குடைச்சல் செய்து வந்த, 'யு டியூப்பர்' சவுக்கு சங்கர் மீது கொலை வெறியோடு இருந்ததுஆளுங்கட்சி. அவர் எப்போது வகையாகசிக்குவார் என்று காத்திருந்தனர். அவர், பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக புகார் பெறப்பட்டு, சிறையில் அடைத்தது.
பின், வழக்கம் போலவே கஞ்சா வழக்கு மற்றும் பலரிடம் புகார்கள் பெறப்பட்டு, சவுக்கு சங்கரை ரவுடியாக சித்தரித்து, குண்டர் சட்டத்தில் அடைத்து, அவர்ஜாமினில் வர முடியாத அளவுக்கும் செய்தது. மேலும், அவரை தமிழகத்தில்உள்ள பல நீதிமன்றங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வந்ததும், பெண் போலீசாரை மட்டுமே பாதுகாப்புக்கு அனுப்பி, அசிங்கம்செய்ததையும் நாம் அனைவரும் பார்த்து வந்தோம்.இவை எல்லாம், அரசை விமர்சனம் செய்பவர்கள் பயப்பட வேண்டும் என்பதை போன்று செய்யப்பட்டது. ஆனால், 'அய்யோ பாவம் சவுக்கு சங்கர்' என்ற அனுதாபத்தை பொது மக்களிடம் உண்டு பண்ணி விட்டது.
நல்லவேளை, நம் சென்னை உயர் நீதிமன்றம், 'ஆளும் அரசை, கொள்கைகளை, செயல்களை விமர்சனம் செய்வதை, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக கருத முடியாது' என்று சுட்டிக் காட்டியது மட்டும் அல்லாமல், சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்குகளில் உரிய சட்டப் பிரிவுகள் கீழ் நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காண அறிவுரை கூறியுள்ளது சரியே.
மேலும், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தின் உத்தரவாதத்தை எடுத்துச் சொல்லி, அந்த சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அரசே, தன் இயந்திரங்களை பயன்படுத்தி குரல் வளையை நெறிப்பது, ஜனநாயகத்துக்கு அழகல்ல என்றும் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும்,'ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பான முறையில் உரிமையை பயன்படுத்த வேண்டும்' என்று சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. இனியாவது, இரு
தரப்புமே தங்கள் எல்லையறிந்து செயல்படும் என நம்புவோம்.
அனைத்துக்கும் அரசியலே காரணம்!
வி.சி.கிருஷ்ணரத்னம்,காட்டாங்கொளத்துார்,செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: வங்கதேசத்தின் ேஷக் ஹசீனா, கடந்த 5ம் தேதி முதல், 'முன்னாள் பிரதமர்'ஆகி விட்டார்.தற்போதைய தற்காலிகஅரசின் தலைவர் முகம்மது யூனுசிடம்,வங்கதேச சிறுபான்மை அமைப்புகளான ஹிந்து, புத்த, கிறிஸ்துவ ஒற்றுமை கூட்டமைப்பு மற்றும்
பூஜா உத்ஜபன் பரிஷத் ஆகிய அமைப்புகள்கடிதம் ஒன்றை அளித்துள்ளன. அதில், '5-ம் தேதி முதல் சிறுபான்மையினருக்கு எதிராக, வங்கதேசத்தில், 205 தாக்குதல்
சம்பவங்கள் நடந்துஉள்ளன.
'ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள் நிர்க்கதியாகிவிட்டன. பல கோவில்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. பல பெண்கள் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் கொலைகள் நடந்துள்ளன. மற்ற சிறுபான்மையினரும் இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைகளை நடத்தி, இந்த சாதனையை களங்கப்படுத்த ஒரு கட்சி சதி செய்வதை நாங்கள் வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் குறிப்பிட கடமைப்பட்டிருக்
கிறோம். 'ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கிய வகுப்புவாத வன்முறை, வங்கதேசத்தில் சிறுபான்மையினரிடையே பரவலான அச்சம், பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைதியின்மை, சர்வதேச கண்டனத்தையும் விளைவித்துள்ளது.
இந்தப் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேச ஹிந்து புத்த - கிறிஸ்துவ ஒற்றுமைகூட்டமைப்பு பொதுச் செயலர் ராணா தாஸ்குப்தா, வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் தலைவர் பாசுதேவ் தார் ஆகியோர், கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டமைப்பின் மூன்று தலைவர்களில் ஒருவரான நிர்மல்
ரொசாரியோ, 'எங்கள் வாழ்வு, பேரழிவு நிலையில் உள்ளதால் நாங்கள் பாதுகாப்பைத் தேடுகிறோம்.
நாங்கள் இரவில்விழித்திருக்கறோம்.எங்கள் வீடுகள் மற்றும் கோவில்களை காத்து வருகிறோம். இதுபோன்ற ஒரு சூழலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. நாட்டில் மத நல்லிணக்கத்தை மீட்
டெடுக்க அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.ஒற்றுமை கவுன்சிலின்பிரதான தலைவர் காஜல் தேவ்நாத், 'யாரும் இல்லாத
நிலையில் வீட்டையோ, கோவிலையோ விட்டுச் செல்ல முடியாத நிலை உள்ளது. பல ஹிந்து சமூகத்தினர் இப்போது மற்றவர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
'நானும் நண்பர் வீட்டில்தங்க வேண்டியகட்டாயத்தில் உள்ளேன்.
சிறுபான்மையினரைத் தாக்கியவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சிறுபான்மையினர் தாக்கப்பட்டால், அது மேலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வீடுகளை எரிப்பதும், கொள்ளையடிப்பதும் நீதிக்கு வழிவகுக்காது' என்று கூறியுள்ளார். சிறுபான்மை சமூகங்கள், வெவ்வேறு நாடுகளிலும், வெவ்வேறு மதங்களை கொண்டுஉள்ளன.நம் நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர்;முஸ்லிம்கள் சிறுபான்மையினர். வங்கதேசத்தில், 'உல்டா!'எந்த நாட்டிலும், பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை அரவணைத்து செல்லும் பழக்கத்தை கைகொள்ள வேண்டும். நம் நாட்டிலும், 30 ஆண்டுகளுக்கு முன் அரவணைப்புமிக நன்றாக கோலோச்சியது. அரசியல்வாதி
களின் பிரிவினை மற்றும் பாரபட்ச பேச்சுகள், அனைத்து இன மக்கள் மத்தியிலும் பகைமையை உண்டு பண்ணி விட்டன. தற்போது, இந்த நிலை தான் வங்கதேசத்திலும் தென்படுகிறது. ஓட்டுக்காக சர்வ அட்டூழியங் களையும் மேற்கொள்ளும்அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இனப் போராட்டம் தீக்கங்குகளை கக்காமல்இருக்காது.