PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

ஏ.எம்.ஏ. ராஜேந்திரன், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், ஒரு மூத்த அரசியல்வாதி, சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர். மது கடைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட இரு திராவிடக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்து இருந்தவர்.திருமாவுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுக்கொடுக்க தேவை இல்லை. மக்களின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர், புரிந்தவர். திருமா மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். தமிழகம்மது போதை கலாசாரத்திற்கு மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதிலிருந்து மீள திருமா விரும்பினாலும் மக்கள் மது போதை கலாசாரத்திலிருந்து விடுபட தயார் இல்லை.
மேலும், மது கடைகள் வாயிலாக தமிழகஅரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த வருமானத்தை வைத்து தான், தமிழக அரசு பல இலவச திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இது திருமாவுக்கும் தெரியும். அதே சமயம் ஒரு கூலி தொழிலாளி, தன் குடும்பத்தை பற்றி சிந்திக்காமல், தன் வருமானத்தின் பெரும் பகுதியை மது
கடையில் கொடுத்து விட்டு அரசு கஜானாவை நிரப்பி வருகிறார்.திருமாவின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்ள மது பிரியர்கள் தயாராக இல்லை என்பது தான் கசப்பான உண்மை. மது கடையைதமிழக அரசு திறந்து விட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவிப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் திருமா கூறியுள்ளார். அந்த கருத்து சரியானது தான்.ஆண்டி முதல் அரசன் வரையிலும் ஜாதி, இனம், மதம், மொழி பாகுபாடு இல்லாத ஒரே இடம் மது கடைகள் தான். எனவே, திருமாவின் மது ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் எந்த திருப்பு முனையையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. எல்லாம் காலம் கடந்த ஞானம் அல்ல நாடகம்.
கோபம் வெளிப்படுமே!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில்பேசிய மாநகர செயலர், 'உறுப்பினர் அட்டையை அனைவரும் கேட்டு பெறுங்கள். போக்குவரத்து போலீசிடம் மாட்டும்போதோ, திட்ட உதவியில் இருந்து பல்வேறு சலுகைகளையும் பெற வேண்டியோ உதவியாக இருக்கும்' என்று கூறிஉள்ளார். இப்பொழுது புரிகிறதா, கட்சிக்காரர்கள் ஏன் கட்சிக் கொடி பறக்கும்இரு சக்கர, நாலு சக்கர ஊர்திகளில் சுற்றுகின்றனர் என்று?
நடிகர் விஜய் ஜோசப்பின் புதிய கட்சி மாநாட்டிற்கு இடம், அனுமதி கொடுக்க, எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்பதை, நாம் பார்த்தபடி தானே உள்ளோம்!எதிர்க்கட்சிகளின் கொடியேற்றத்திற்கோ, பொதுக் கூட்டங்களுக்கோ,போராட்டங்களுக்கோ அனுமதி எளிதில் கிடைப்பதில்லை. கடைசியில் கடும் நிபந்தனைகளோடுதான் அனுமதி பெற முடிகிறது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலங்களுக்கு, கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கீழமை நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல், மேல்முறையீடு செய்தனர்; இறுதியாக உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கக் கூறியது. ஆனால் ஆளுங்கட்சியின், அதன் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு, மத்திய அரசு, கவர்னர் எதிர்ப்புக் கூட்டங்களுக்கு, போராட்டங்களுக்கு எளிதில் அனுமதிகள் கிட்டி விடுகின்றன.
கனிம வளங்கள் கொள்ளை, மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்தல்,கட்டுமானப் பணிகள் ஒப்பந்தம், பார்க்கிங் கட்டணம் வசூலித்தல், தெருவோர கடைகளில் கட்டணம் வசூலித்தல்,மதுபான விடுதிகளுக்கு அனுமதி போன்ற அனைத்திலும் ஆளுங் கட்சியினரின் ஆதிக்கத்தை மக்கள் காண முடியும்.எங்கெல்லாம் முடியுமோ,அங்கெல்லாம் கட்சிக்காரர்களை, ஆதரவாளர்களை புகுத்தி விடுகின்றனர்.
சமீபத்தில், சென்னை பள்ளியில் நடைபெற்ற அறிவுரை அரங்கத்தில், பேச்சாளரை தடுத்துப் பேசிய ஆசிரியரின் கருத்துக்கள் கூட, ஆளுங் கட்சியின் கொள்கையை வெளிப்படுத்தும் விதமாக தான் இருந்தது. 'அனைவருக்குமான அரசு, பாரபட்சமில்லா அரசு' என்று அடிக்கடி முதல்வர் கூறிவந்தாலும், அரசின் செயல்பாடுகளோ,அதற்கு நேர்மாறாக உள்ளது என்பதே மக்களின் அபிப்ராயம்.
'தி.மு.க., ஆட்சியில், நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும்; கட்சிக்காரர்களின் ஆதிக்கம்,அராஜகம், வன்முறை போன்றவை சற்று அதிகமாகவே இருக்கும்' என்பது அனைவரும் அறிந்ததே; ஆனால், இந்த முறை மிக அதிகமாகவும், வெளிப்படையாகவும் தெரிகிறது.இதைக் கட்டுப்படுத்தவில்லை எனில், 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளில் மக்களின்கோபம், எதிர்ப்பு வெளிப்படக் கூடும்.
ஒலிம்பிக் கிராமங்கள் அமைக்க வேண்டும்!
அ.குணசேகரன், வழக்கறிஞர்,புவனகிரி-, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சர்வதேச விளையாட்டு போட்டிகளில், நம் நாடு எப்போதும் பதக்கப் பட்டியலில், முதல், 10 இடங்களுக்குள்வருவது என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில்கூட, வெறும் ஆறு பதக்கங்களை மட்டுமே வென்று வந்தது வருத்தம் அளிப்பதாக இருந்தது.
ஆயினும், பாரிசில் நடைபெற்ற, 17வது பாராலிம்பிக் போட்டியில்,நம் மாற்றுத்திறனாளி வீரர்கள் முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி, 13 வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து, பதக்கப் பட்டியலில், 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இது, அடுத்து வரும் விளையாட்டுப் போட்டிகளில் நம் வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்வதற்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதிலும், வில் வித்தையில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங், குழந்தையாக இருந்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தவறான சிகிச்சையால் அவரது கால்கள் செயலிழந்து உள்ளன.
ஆயினும், மனம்தளராமல் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால்,பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற முத்திரை பதித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, 29 பதக்கங்களை வென்ற இந்த வீரர்கள் அனைவரும்,இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். கல்வியாகட்டும், விளையாட்டாகட்டும் ஊனம் ஒரு தடையல்ல என்பதை, இந்த மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி, நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டி உள்ளது.
நாம் விளையாட்டு துறையில் பதக்கப் பட்டியலில், முதல், 10 இடங்களுக்குள் வருவதற்கு இந்த பாராலிம்பிக் வெற்றி மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும்.எனவே, தாலுகா அளவில் அனைத்து விளையாட்டுவீரர்களும், அனைத்து விதமான விளையாட்டுப்பயிற்சிகளும் மேற்கொள்ள, ஒலிம்பிக் கிராமங்கள் அமையுங்கள் மத்திய, மாநில அரசுகளே.