PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: நாடு சுதந்திரம் அடைந்த பின், கிட்டத்தட்ட, 55 ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் காங்., கட்சி தான் ஆட்சி நடத்தியது.
ஆனால், 2014 முதல், தொடர்ச்சியாக மூன்று முறை, பா.ஜ., வெற்றி பெற்றதை அக்கட்சியினரால் தாங்க முடியவில்லை.
எதைத் தின்றால் பித்தம் தணியும் என்பது போல், ‘ஓட்டு திருட்டு’ என்று உளற ஆரம்பித்த காங்., – எம்.பி., ராகுல், பின், ஓட்டு இயந்திரத்தின் மீது குற்றஞ் சாட்டினார்.
இப்போதோ, தலைமை தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டு கூறி, போராட்டம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீர்குலைத்து வருகிறார்.
இவரது தந்தை ராஜிவ் பிரதமராக இருந்த போது, தேர்தல் கமிஷனராக இருந்தவர், ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரி.
கடந்த 1987ல் ராஜிவ் ஆட்சியில், நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்பஸ் பீரங்கி உள்ளிட்ட ஊழல்களால், நாடு முழுதும், காங்., கட்சி மீது கடும் அதிருப்தி நிலவி வந்தது.
இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தலும், ஜனாதிபதி தேர்தலும் அடுத்தடுத்த மாதங்களில் நடைபெற இருந்தன.
எதிர்ப்பு அலையால், ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்., தோற்றால், அது, ஜனாதிபதி தேர்தலின் ஓட்டுப் பதிவை பாதிக்கும் என நினைத்த ராஜிவ், ஜனாதிபதி தேர்தலுக்கு பின், ஹரியானா சட்டசபை தேர்தலை தள்ளி வைக்குமாறு பெரி சாஸ்திரிக்கு அழுத்தம் கொடுத்தார்.
சாஸ்திரி அதை ஏற்க மறுத்து, ஜனாதிபதி தேர்தலுக்கு முன், ஹரியானா சட்டசபை தேர்தலை நடத்தினார்.
அத்தேர்தலில், காங்., படு தோல்வி அடைந்தது. இதனால், கோபமடைந்த ராஜிவ், சாஸ்திரியை பழிவாங்கும் விதமாக, 1989ல் பொதுத் தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில், ஜனாதிபதி வாயிலாக அவசர சட்டம் இயற்றி, சாஸ்திரியின் அதிகாரத்தை குறைக்க, ஒற்றை தலைமையின் கீழ் இருந்த தேர்தல் ஆணையத்தை, மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றியதுடன், தனக்கு சாதகமாக செயல்படக் கூடிய இரண்டு தேர்தல் கமிஷனர்களை நியமித்து, பெரி சாஸ்திரியை பழிவாங்கினார்.
இப்படி, தன் அரசியல் லாபத்துக்காகவும், அதிகார போதைக்காகவும் தேர்தல் ஆணை யத்தை, தன் கைப்பொம்மையாக ஆட்டி வைத்த வர், ராஜிவ். அவர் மகன் எப்படி இருப்பார்?
தந்தையைப் போல், ராகுலும் தோல் வியை ஏற்றுக் கொள்ள முடியாமல், தேர்தல் ஆணையத்தோடு மோதிக் கொண்டிருக்கிறார்!
விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும்?
