PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

ஆர்.மனுதர்மன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை கேள்வி நேரத்தின்போது, அ.தி.மு.க., உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், 'என் தொகுதியில் பல கிராமங்களில் மரத்தடியில் தான் பள்ளிகள் நடக்கின்றன. மழை பெய்தால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இடிந்த நிலையிலும், இடப்பற்றாக்குறையிலும் பல பள்ளிகள் இயங்குகின்றன.
தமிழகம் முழுதுமே இப்பிரச்னை உள்ளது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்று ஒரு கோரிக்கையை வைத்தார்.
உடனே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 'காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களையும், இப்போது, படிப்படியாக புதிதாக கட்டி வருகிறோம். இதற்காக, தி.மு.க., அரசு, 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 8,000 வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், 4,412 வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச் சுவர்கள் கட்டும் பணிகள் நடக்கின்றன. வரும், 2027ல், 18,000 வகுப்பறைகள் கட்டுவதற்கான இலக்கை நோக்கி செல்கிறோம்.
'நடப்பாண்டு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பள்ளி உள்கட்டமைப்பை பொறுத்தவரை, இன்னும் அதிகம் மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து இருக்கின்றனர் என்றால், அங்குள்ள கட்டடங்கள் இடிந்து, பிள்ளைகள் தலையில் விழக்கூடாது என்பதற்காகத்தான்' என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதைச் சொல்வதற்கு ஓர் அமைச்சர் வேண்டுமா?
காமராஜர் காலத்து கட்டடங்களே இப்போது தான் புதுப்பிக்கப்படுகிறது என்றால், இத்தனை ஆண்டு கழக ஆட்சியில், பள்ளிக் கல்வித்துறை என்ன செய்தது? இதில், நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதி என்று வெற்றுப் பெருமை வேறு!
கட்டடங்கள் இடிந்து, பிள்ளைகள் தலையில் விழக்கூடாது என்பதற்காக இப்போது மரத்தடியில் அமர வைத்துள்ளீர்கள்... காற்றடித்தால், மரக்கிளைகள் முறிந்து, மாணவர்கள் தலையில் விழுந்து விடாதா?
அதனால், சிறு மழை பெய்தால்கூட, விடுமுறை விடுவதுபோல், இனிவரும் காலத்தில், காற்றடிப்பதுபோல் இருந்தாலும் விடுமுறை அறிவித்து விடுங்கள்... கழகத்திற்கு ஓட்டுப்போட்ட பாவத்திற்கு, தங்கள் பிள்ளைகளை பெற்றோர் வீட்டிலேயே வைத்து பாதுகாக்கட்டும்; அப்போது தான், பின்னாளில் தி.மு.க.,வினருக்கு அவர்கள் போஸ்டர் ஒட்டப் பயன்படுவர்!
அரசு யோசிக்குமா?
எம்.பாலகிருஷ்ணன்,
சிவகங்கையில் இருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்
கிளையில், 'இன்சூரன்ஸ் கம்பெனிகள் மருத்துவ செலவுகளை வழங்கவில்லை' என்று,
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கு சாதகமான
தீர்ப்பை வழங்கி, தமிழக அரசுக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளது,
நீதிமன்றம்.
திடீரென ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டால்,
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தான் அனுமதிக்க வேண்டும் என்பது
நோயாளியின் உறவினருக்கு தெரியாது.
இதனால், சிகிச்சைக்கு பின், மனம் மற்றும் பொருளாதார ரீதியில், ஓய்வூதியர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தனியார்
மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், முழுத்
தொகையையும் செலுத்திய பின்னர் தான் டிஸ்சார்ஜ் செய்கின்றனர்.
இதில், அறுவை சிகிச்சைக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகள் முழுத் தொகையையும் வழங்குவதில்லை.
மத்திய - மாநில அரசுகளுக்கும், சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தண்ணி காட்டுகின்றன.
அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தை, தனியாருக்கு ஏன் தாரை வார்க்க வேண்டும்? அரசே ஏற்று நடத்தலாமே!
மாதந்தோறும்
கட்டாயமாக, 497 ரூபாய் பிடித்து, அதை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கொடுப்பதில்
அரசு காட்டும் அக்கறையை, மருத்துவ செலவுக்கு பணம் பெற்றுத் தருவதில்
காட்டுவதில்லை.
ஓய்வூதியர் மருத்துவத்திற்காக பணம் கட்டுவது தமிழக
அரசிடம் தானே உள்ளது. ஆனால், வழக்கு என்று வரும்போது, அரசு
கண்டுகொள்வதில்லையே ஏன்?
பிரதமர் மோடி மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், 'ஆயுஷ்மான்' மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
இத்திட்டம் டில்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தமிழகத்திலோ கோமாவில் உள்ளது.
இங்குள்ள
ஆரம்ப சுகாதார நிலையங்களை, தனியார் மருத்துவமனைகள் போன்று கட்டமைப்பு
செய்து, அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை
நடைமுறைப்படுத்தலாம் அல்லவா?
தமிழக அரசு யோசிக்குமா?
களத்திற்கு வருவது எப்போது?
சு.செல்வராஜன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லாஜிக்' இல்லாத கதை
என்றால், அறிமுக நாயகர் கூட நடிக்க யோசிப்பார். ஆனால், ஒரு முன்னணி நடிகர்,
லாஜிக் இல்லாத அரசியலை கையிலெடுத்து, அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார்.
சமீபத்தில்,
த.வெ.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய்,
ஆளும் தி.மு.க., அரசுக்கு எதிராக மேடையில் பொங்கி எழுந்து விட்டார்.
முதல்
சில நிமிடங்கள், 'தி.மு.க., தான் என் முதல் எதிரி' என்று கூட்டத்தில்
சீறினார். அதேநேரம், பா.ஜ., மீது தி.மு.க., வைக்கும் அனைத்துக்
குற்றச்சாட்டும், 'ஆமா... ஆமா... அதேதான்' என்று, 'ஆமாஞ்சாமி' போடுகிறார்;
கூடவே, 'நிறுத்தி வைத்த கல்வி நிதியை உடனே கொடு' என்று மத்திய அரசை
மிரட்டுகிறார்; தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில், தி.மு.க.,விற்கு ஜால்ரா
போடுகிறார்.
அடுத்த சில நிமிடங்கள், 'பா.ஜ., தான் என் கொள்கை
எதிரி' என்கிறார். அதேநேரம், தி.மு.க.,மீது, பா.ஜ., சுமத்தும் அனைத்து
குற்றச்சாட்டுகளுக்கும் ஒத்து ஊதுகிறார்.
கடைசி சில நிமிடங்களில்,
'தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவதே தன் முதல் லட்சியம்' என்று கூறி, தன்
மேடை நாடகத்தை முடித்துக் கொள்கிறார்.
நல்லவேளை... மத்தியில்
பா.ஜ.,வை வீழ்த்தி, பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்தை பிரதமர் ஆக்குவதே தன்
இரண்டாவது லட்சியம் என்றெல்லாம் சபதம் எடுத்துக் கொள்ளவில்லை.
மொத்தத்தில்,
தி.மு.க.,வின் கொள்கைகளை நகலெடுத்து, அதற்கு, த.வெ.க., என்று பெயர்
சூட்டி, மாற்று அரசியல் எனும், 'அவியல்' செய்ய ஆரம்பித்து விட்டார்,
விஜய்.
சரி... கூட்டத்தில், 'பஞ்ச்' வசனங்களை பறக்க விட்டால் மட்டும் போதுமா... களத்திற்கு வர வேண்டாமா?

