தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கருணாநிதியிடம் கேட்டால்...

 கருணாநிதியிடம் கேட்டால்...

 கருணாநிதியிடம் கேட்டால்...


PUBLISHED ON : ஏப் 23, 2026 12:32 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2026 12:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலங்குடி முரளி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் தி.மு.க.,வை ஒருபோதும் மிரட்டியதில்லை; ஆனால், அ.தி.மு.க.,வை மிரட்டி பணிய வைத்துள்ளது, பா.ஜ., ' என்று, தமிழக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

காங்.,கின் கடந்த கால வரலாற்றை, ராகுல் மறந்து விட்டார் போலும்!

கடந்த 2011 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் அக்னி வெயிலை விட உக்கிரமாக இருந்த நிலையில், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க., மீது தன் அரசியல் அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

'மத்திய அரசு எங்களிடம் உள்ளது; உங் கள் மீது வழக்குகள் உள்ளன' என்ற மிரட்டலில் தான் கூட்டணி பேச்சுகளே நகர்ந்தன.

அறிவாலயத்தில் ஒருபுறம் தொகுதி பங்கீடு பேச்சு நடந்து கொண்டிருக்க, அதே கட்டடத்தின் மேல் மாடியில், 'ஸ்பெக்ட்ரம்' வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., ரெய்டு நடத்தியது.

இது, தி.மு.க.,வை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த ரெய்டு நடந்து இரண்டு நாட்களுக்கு பின், அதே அறிவாலயத்தில் தி.மு.க., - -காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு மீண்டும் நடைபெற்றது.

கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற அளவுக்கு காங்கிரஸ் தன் குரலை உயர்த்தியது.

இறுதியில், காங்கிரஸ் விரும்பியபடி, 63 தொகுதிகள் வழங்கப்பட்டன. அது, அரசியல் உடன்பாடா அல்லது காங்கிரஸ் மிரட்டலா என்ற கேள்விக்கு ராகுலிடம் இன்று பதில் இருக்கப் போவதில்லை.

கச்சத்தீவு முதல் ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் துயரம் வரை, காங்கிரஸ் கட்சி தி.மு.க.,வை மிரட்டியே காரியம் சாதித்தது என்பது வரலாறு.

அதையெல்லாம் மறந்துவிட்டு, 'நாங்கள் தி.மு.க.,வை ஒருபோதும் மிரட்டியதில்லை' என்கிறார், ராகுல். மெரினா கடற்கரையில் துயில் கொள்ளும் கருணாநிதியை எழுப்பி கேட்டால், காங்கிரஸ் கட்சியின் மிரட்டல்களை பதவிக்காகவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் வாய் மூடி, தி.மு.க., அடிமையாக கிடந்த ஆயிரம் கதைகளை கூறுவார்!

ஸ்டாலின் சிலாகிக்கலாமா?


பொ.பொன்மணி, கூடங் குளத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போது, ஒரு மகன் போல் நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளை செய்து, கிண்டியில், 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கி, காமராஜருக்கு நினைவகம் அமைத்தவர் கருணாநிதி' என்று, சிலாகித்து கூறியுள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.

கருணாநிதி, காமராஜருக்கு இவைகளை மட்டும்தானா செய்தார்...

காமராஜர் ரஷ்யாவிற்கு சென்ற போது, 'இதுவரை ரஷ்யாவிற்கு எருமை மாட்டு தோலைத்தான் அனுப்பினர்; இப்போது, எருமை மாட்டையே அனுப்பியுள்ளனர்' என்றும், அவரின் தாய் செய்த தொழிலை வைத்து, 'கருவாட்டுக்காரியின் மகன்' என்றும் ஏளனம் செய்து மகிழ்ந்தவர், கருணாநிதி.

காமராஜரை, 'பெருந்தலைவர்' என்று அடைமொழி வைத்து அழைப்பதை கண்டு காழ்ப்புணர்ச்சியில், 'இனிமேல், ஊராட்சி தலைவர்களை எல்லாம், 'பெருந்தலைவர்' என்று தான் அழைக்க வேண்டும்' என்று, உத்தரவிட்டவர் கருணாநிதி.

மேலும், 'முரசொலி' பத்திரிகையில் காமராஜரை பெண்ணாக உருவகப்படுத்தி, சேலை, ஜாக்கெட் அணிவித்து, மிகவும் கீழ்த்தரமாக, 'கார்ட்டூன்'வெளியிட வைத்து, ரசித்து மகிழ்ந்தவர்.

'முதல்வராக இருக்கும் போது இறப்பவர்களுக்கு மட்டும்தான் கடற்கரையில் இடம்' என்று கூறி, காமராஜருக்கு கடற்கரையில் இடம் ஒதுக்காமல், கிண்டியில் சமாதி கட்டி, அதிலும் அரசியல் செய்தவர்.

'ஏழைப்பங்காளன்' என்ற காமராஜரின், 'இமேஜை' டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காகவே, அவர், வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை புகைப்படம் எடுத்து, 'ஏழைப் பங்காளனின் மாளிகையை பாரீர்' என போஸ்டர் அச்சடித்து ஒட்டி, பொய் பிரசாரம் செய்ததும் இதே தி.மு.க., கட்சி தான்.

காமராஜர் ஜாதி, மத பாகுபாடு பார்க்காமல் மக்களுக்காக உழைத்தவர்; அவர் கன்னியாகுமரி பார்லிமென்ட் தொகுதியில் போட்டியிட்டபோது, 'உங்கள் ஓட்டு வந்த நாடாருக்கா அல்லது சொந்த நாடாருக்கா? வேல்நாடாருக்கா அல்லது சிலுவை நாடருக்கா?' என்றெல்லாம் ஜாதி, மதத்தை வைத்து பிரசாரம் செய்து, அம்மக்களிடம் பிரினையை ஏற்படுத்தியவரும் கருணாநிதி தான்!

இப்படி காமராஜருக்கு, கருணாநிதி ஏகப்பட்ட நன்மைகள் செய்திருக்க, சமாதி கட்டியதை மட்டும் சிலாகித்து கூறலாமா ஸ்டாலின்?

ஓட்டு போடுவது ஒருநாள் கூத்து அல்ல!


ஆர்.சுதர்சன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒவ்வொரு தேர்தலின் போதும், நுாற்றுக்கணக்கான கட்சி கொடிகளுடன், பல 100 வாக்குறுதிகளுடன் வலம் வரும் வேட்பாளர்கள் என்று, நம் தேர்தல் களம் ஒரு திருவிழாவாகத் தான் திகழ்கிறது.

ஆனாலும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஓரிரு மணி நேரம் செலவழித்து ஓட்டு போட சோம்பல்படும், 40 சதவீத மக்களும், இலவசங்கள் மற்றும் பணம் பெற்று ஓட்டு போட வரும் 30 சதவீதம் பேர், எதையும் எதிர்பாராமல் இவர்களாவது நாட்டிற்கு நல்லது செய்துவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு ஓட்டு போடும், 20 சதவீதம் பேர், அரசியல்வாதிகளின் மீது ஏற்பட்ட வெறுப்பால், நோட்டோவுக்கு ஓட்டு போடும், 10 சதவீதம் பேர் என, 50 - -60 சதவீத ஓட்டுகள் நான்காக பிரிந்து போவதும், அந்த நான்கில் ஒரு பங்கு ஆதரவு கூட பெறாத வேட்பாளர், மக்கள் பிரதிநிதியாக மாறும் அவலமும் இத்திருவிழா வில் நடக்கும் கூத்துகள்!

இவை மாற வேண்டுமானால், மக்கள் அனைவரும் ஓட்டு போட முன்வர வேண்டும். அண்டா, குண்டா என பரிசுப் பொருட்களும், பணமும் பெற்றவர்கள் தங்கள் நன்றிக்கடனை ஓட்டாக செலுத்தும் முன், அரசியல்வாதிகள் கொடுத்த அனைத்தும், எங்கிருந்து வந்தது என்று ஒரு நிமிடம் யோசித்தாலே போதும்; அது, நம் பாக்கெட்டில் இருந்து பிடுங்கப்பட்ட பணம் என்ற தெளிவு பிறக்கும்.

அதன்பின், வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களை எடை போட வேண்டும்; 10ல் ஐந்து பேரை சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்து, பின், அவர்களில் மூவர், ஒருவர் என பல்வேறு கோணங்களில் வேட்பாளர்களை எடை போட்டால், நம் ஓட்டு சரியான நபரை சென்றடையும்; நாம் நினைத்த மாற்றமும் ஏற்படும்.

அதேபோன்று, முதல் முறை ஓட்டு போடும் இளைய தலைமுறையினர், தொலைநோக்கு சிந்தனையுடன் ஓட்டு போட வேண்டும்.

நாம் போடும் ஓட்டு என்பது ஒருநாளில் முடிந்து போகும் விஷயமல்ல; ஐந்தாண்டுகளுக்கு நமக்கான பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு என அனைத்தும் அதில் அடங்கியுள்ளது.

இதை மனதில் வைத்து, வாக்காளர்கள் தங்கள் ஓட்டை செலுத்த வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us