/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!
/
தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!
PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

எஸ்.ஆர்.த்ராவிட், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில், மாணவ - மாணவியர், 95 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், சத்தம் போடாமல் மாணவர்களுக்காக, 'வழிகாட்டி' என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி, மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும். பிளஸ் 2 தேர்வுக்கு பின் என்னென்ன வாய்ப்புகள் அவர்கள் முன் குவிந்துள்ளன என்ற விழிப்புணர்வு நிழ்ச்சியை நடத்தி வரும், 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு, உண்மையில் பாராட்டுக்குரியது!
அதேநேரம், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 'ரிசல்ட் எதுவானாலும் அதுவே முடிவில்லை என்பதை மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். தேர்ச்சி பெற்றும், அதிக மதிப்பெண் கிடைக்காதோருக்கு, பல வாய்ப்புகளை காலம் வழங்க தான் போகிறது.
'இது, வாழ்வின் துவக்கமே தவிர முடிவில்லை. நேர்மறையான சிந்தனையுடன் தேர்வு முடிவுகளை அணுக வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாக துணை இருக்க வேண்டும்' என்று அறிவுரை வழங்கியுள்ளார், தமிழக முதல்வர்.
இதைத்தான், ஒவ்வொரு தேர்வு முடிவுக்கும் முதல்வர் கூறியிருக்க வேண்டும்.
மாறாக, 'நீட்' தேர்வை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து பேசி, அரசியல் செய்கிறார்.
எதற்கு இந்த இரட்டை முகம்?
'தினமலர்' இதழின் 'வழிகாட்டி' நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு எப்போதோ கூறிய அறிவுரை இது...
'மருத்துவ படிப்பில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் என்ன குறைந்து போயிற்று... வேளாண் படித்து, அதன் பின் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதி, தற்போது காவல்துறையில் உயர் பதவியில் இருக்கிறேன்.
'அதுபோல், நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்றால், மனம் துவண்டு விடாமல், உங்கள் முன் கொட்டிக் கிடக்கும் அடுத்த வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதில் வெற்றி பெற வேண்டும்' என்றார்.
மாணவர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும்...
நீட் தேர்வு மட்டுமல்ல... எந்த தேர்வாக இருந்தாலும், இதை மனதில் கொண்டால், எந்த துறையாக இருந்தாலும் சாதனை படைக்கலாம்!
உற்பத்தியை பெருக்க வேண்டும்!
த.யாபேத்
தாசன், துாத்துக்குடியில் இருந்து எழுதுகிறார்: சோவியத் யூனியனின்
வீழ்ச்சிக்குப் பின், உலகின் ஒரே பொருளாதார சித்தாந்தமாக, முதலாளித்துவம்
மிகவும் வீரியத்துடன் முன்மொழியப்பட்டது. முதலாளித்துவத்தின் சிறப்பு
வாய்ந்த குழந்தைதான் உலகமயமாக்கல் என்றால் மிகையல்ல.
இந்த உலக
மயமாக்கலை திட்டமிட்டு முன்னெடுத்துச் சென்றது, அமெரிக்கா போன்ற வல்லரசு
நாடுகள்தான். ஆனால், ஏறத்தாழ 35 ஆண்டுகால உலக மயமாக்கலுக்குப் பின்,
அமெரிக்க பொருளாதாரம் மெச்சும்படியான நிலையில் இல்லை என்பது தான்
நிதர்சனம்.
இறக்குமதிகளை கட்டுப்படுத்தக்கூடிய அளவில் வரி விகிதம்
இருக்கக் கூடாது என்பதுதான் உலக மயமாக்கலின் மிக முக்கியமான நோக்கம்.
ஆனால், இதன் வாயிலாக, அமெரிக்காவின் இறக்குமதி மிக அதிகரித்து விட்டது.
சீனா,
கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து, கூடுதல்
வருமானம் பெற்றது. இதனால், அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது.
இதுதான் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப்பை பல்வேறு கடின
முடிவுகளை எடுக்கத் துாண்டியது.
இறக்குமதிக்கு அதிகமான வரிகளை
விதிப்பதன் வாயிலாக, வர்த்தக பற்றாக்குறையை குறைக்க டிரம்ப் முயல்கிறார்;
இது, அமெரிக்காவுக்கு நன்மை பயக்கும்.
ஆனால், உலக மயமாக்கலின்
வாயிலாக, தங்கள் ஏற்றுமதியை உயர்த்தி, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு
சென்ற சீனா போன்ற நாடுகளுக்கு பாதிப்பை உருவாக்கும் என்பது மட்டும் உறுதி.
துப்பாக்கியால்
சுடும் போரைவிட, வரி விதிப்பு போரையே விரும்புவதாக அமெரிக்க அதிபர்
டிரம்ப் வெளிப்படையாகவே அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்பின் உலக
மயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு
அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
ஆக, உலகமயமாக்கலை முன்மொழிந்த
நாடு இன்று சிக்கலில் உள்ளது; அதாவது, அதை தொடர முடியாமல் தவிக்கிறது. இதை
பிற நாடுகள் பாடமாக எடுத்து செயல்பட்டால், அந்தந்த நாடுகள் தங்களை
தற்காத்துக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு நாடும் தங்களுக்கான கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் முன்னெடுப்பதன் வாயிலாக தங்களை காத்துக் கொள்ள முடியும்.
உலக
வர்த்தக மையத்தின் கட்டுப்பாடுகளால் இறக்குமதியை தாராள மயமாக்கினால்,
பாதிக்கப்படப் போவது வளரும் நாடுகள் தான். அமெரிக்கா போன்ற மிக வளர்ந்த
நாடுகளே இறக்குமதியால் பாதிக்கப்படும்போது, மற்ற வளரும் நாடுகள்
எம்மாத்திரம்?
எனவே, வளரும் நாடுகள் உற்பத்தியை பெருக்கி, இறக்குமதியை குறைத்தால் நன்மைகள் கிடைக்கும்.
மரமின்றி வாழ்வு இல்லை!
ந.மனோகரன்,
கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாலை
விரிவாக்கத்திற்காக, தமிழக சாலைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய மரங்கள்
வெட்டப்பட்டு வருகின்றன.
பசுமை தீர்ப்பாயத்திடம் அனுமதி பெற்று தான் அவை வெட்டப்படுகிறதா என்பது கேள்விக்குறி!
வாகன
போக்குவரத்து அதிகரித்துள்ள இக்காலத்தில், விசாலமான சாலைகள் தேவை தான்.
அதேநேரம், மரங்களை இப்படி அடியோடு அகற்றுவது, எதிர்காலத்தில் காற்று மாசு
அதிகரிக்கவும், மழை பொழிவு பாதிக்கப்படவும் காரணமாக அமைந்து விடும்
என்பதையும் மறந்து விடக் கூடாது!
மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும்
என்றால், அதை முடிந்த அளவுக்கு வேருடன் பிடுங்கி, சற்று தள்ளி நடலாம்
அல்லது ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை புதிய மரக்கன்றுகளை வளர்த்து, அதை
பசுமை தீர்ப்பாயம் உறுதி செய்த பின், மரங்களை வெட்டலாம்!
ஒரு
மரத்தை வெட்டினால் மூன்று மரம் நடவு செய்ய வேண்டும் என்பதை, அரசு சட்ட
விதியாக்க வேண்டும்; அப்போது தான், மரங்களை வெட்டினாலும், அதன்
பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.
அத்துடன், காய்க்காத, அலங்கார
மரங்களை தவிர்த்து, வேம்பு, புளி, அரசு, ஆல் போன்ற நம் பாரம்பரிய
மரக்கன்றுகளை நடவு செய்ய வலியுறுத்த வேண்டும்.
இதன்வாயிலாக, சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதுடன், மழை பொழிவதற்கும் வழிவகுக்கும்!
'நீரின்றி அமையாது உலகு' என்பது போல், மரமின்றி செழிப்படையாது மனித வாழ்வு என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்!