sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மீண்டும் வனவாசத்திற்கு தயாராகிறதா தி.மு.க.,?

/

மீண்டும் வனவாசத்திற்கு தயாராகிறதா தி.மு.க.,?

மீண்டும் வனவாசத்திற்கு தயாராகிறதா தி.மு.க.,?

மீண்டும் வனவாசத்திற்கு தயாராகிறதா தி.மு.க.,?

2


PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா.சேது ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் அரசின் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவ - வைணவ சின்னங்களை விலைமாதோடு ஒப்பிட்டு ஆபாசமாகவும், அருவருப்பாகவும், இழிவுபடுத்தியும் பேசிய பேச்சு பெண்கள் மற்றும் ஹிந்துக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயதில் மட்டுமல்ல... கட்சியின் மூத்த உறுப்பினர், துணை பொதுச்செயலர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகிக்கும் ஒருவர், பொது நிகழ்வில் இப்படி பேசியுள்ளது, அவரது அகத்தின் அழுக்கையே காட்டுகிறது.

பொன்முடிக்கு, சைவம் - வைணவம் என்றால், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்ற நுால்கள் நினைவுக்கு வரவில்லை; பக்தி இலக்கியங்கள் வாயிலாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு தெரியவில்லை. ஆனால், காமம் தெரிகிறது என்றால், அது கருவின் குற்றமே அன்றி வேறு என்ன?

கனிமொழி சுட்டிக்காட்டிய பின், தி.மு.க., தலைமை, 'நான் அடிப்பது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் அழு' என்பதுபோல், ஒப்புக்கு பொன்முடியின் துணைப் பொதுச்செயலர் பதவியை பறித்துள்ளது. அவரது அமைச்சர் பதவியை அல்லவா பறித்திருக்க வேண்டும்?

இதைப்போன்றே நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சியினரை குறிப்பிடும் போது, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை உருவகேலி செய்து, வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமாக பேசினார். அதற்கு கண்டனம் எழுந்ததும் ஒப்புக்கு வருத்தம் தெரிவித்து, ஒரு கபட நாடகமாடினார்.

ஆட்சியில் இருக்கும் ஆணவமே, இப்படியெல்லாம் பேச வைக்கிறது.

இப்படியே பேசினால், 2011-2021 வரை தொடர்ந்த, 10 ஆண்டு காலவனவாசம், தி.மு.க.,விற்கு நித்திய வாசமாகி விடும்!



அரசியல் சதுரங்கத்தில் பா.ஜ.,வின் நிலை என்ன?


சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரட்டை இலை சின்னத்திற்கு கண்ணை மூடி ஓட்டு போடும் எம்.ஜி.ஆர்., - -ஜெயலலிதா விசுவாசிகளின் ஓட்டு வங்கி தன்னிடமே உள்ளதாக நம்புகிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. ஆனால், உண்மையில் அவரைத் தாங்கிப் பிடிப்பது, அவருடைய ஜாதி ஓட்டுகள் மட்டும் தான்.

கொங்கு மண்டலத்தில்கவுண்டர் அல்லாத பிற ஜாதி ஓட்டுகள் அவருக்கு கிடைக்காது. ஜாதி உணர்வுகள் கூர்மையாகி வரும் சூழலில், அவை, பா.ஜ.,விற்கு போய் விடலாம்.

தேர்தல் என்றாலே, பிரதான கட்சிகளான, தி.மு.க., - அ.தி.மு.க., என்றிருந்த நிலை முழுமையாக மாறி, நடிகர் விஜயின் அரசியல் வருகையும், பா.ஜ., -நா.த.க., கட்சிகளின் வளர்ச்சியும், தமிழக அரசியல் களத்தை முற்றிலும் மாற்றி உள்ளன.

வரும் தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., -பா.ஜ., - த.வெ.க., - நா.த.க., என்று ஐந்து முனை போட்டி ஏற்படும். அதில், பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என கணக்கிட்டார், அண்ணாமலை. அதனாலயே, களப்பணி ஆற்ற, மாவட்ட மற்றும் மண்டலத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை ஆதரித்து, மக்களிடமிருந்து ஒரு கோடி கையொப்பம் பெறப் பணித்தார்.

மகளிர் அணியினரை டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் போட்டோவை ஒட்டச் சொன்னார்; நீச்சல் பழக தண்ணீருக்குள் தள்ளி விடுவதுபோல், தொண்டர்களை எல்லாம் போராட்டங்களுக்குள் தள்ளி விட்டார்; எந்தத் தியாகங்களுக்கும் தயாராகஇருக்கும்படி எழுச்சி ஊட்டினார்.

ஆனால், பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷாவின் கணக்கு வேறாக இருந்தது. ஒன்றுபட்ட அ.தி.மு.க., உருவாக வழியில்லாத நிலையில், பா.ஜ, - அ.தி.மு.க., கூட்டணியை அவர் உறுதி செய்தார். காரணம், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி உறுதியாகும் முன், தாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்பதே!

பழனிசாமியை குறைவாக மதிப்பிடுகிறார், அண்ணாமலை. அமித் ஷாவோ 2024 பார்லிமென்ட் தேர்தல்போல், பழனிசாமி தி.மு.க.,ஆட்சி அமைக்க வழி செய்து விடுவாரோ என்று அஞ்சுகிறார்.

நடிகர் விஜய், 5 சதவீத ஓட்டு கூட வாங்க மாட்டார் என்கிறார், அண்ணாமலை; 20 சதவீத ஓட்டு வாங்கி விட்டால் என்ன செய்வது என நினைக்கிறார், அமித் ஷா.

இந்த அரசியல் சதுரங்கத்தில், பா.ஜ.,வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல், ஆரம்ப கட்டத்திற்கே நகர்த்தி விட்டாரோ அமித் ஷா என்பதே என் போன்றோரின் கவலை!



தேசம் வலுப்பெற கடிவாளம் அவசியம்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வக்ப் போர்டு சீர்திருத்த சட்டத்தை தன் மாநிலத்தில் அமல்படுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளார், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. தமிழக அரசும் தன் எதிர்ப்பை தெரிவித்து, வழக்கு தொடுத்துள்ளது.

ஏற்கனவே, குடியுரிமை மற்றும் விவசாய சீர்திருத்தசட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற மத்தியஅரசின் பல சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை என்றும், சில மாநிலங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.

முன்பு, மத்திய அரசின் சி.பி.ஐ., எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் தங்கள் விசாரணையை துவங்கலாம்; தற்போது, மாநில அரசு அனுமதி அளித்தால் மட்டுமே சி.பி.ஐ., உள்ளே வரமுடியும் என்ற நிலை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, தவறு செய்தவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்என்றாலும், மாநில அரசின்அனுமதியின்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையும் கட்டுப்படுத்த நினைக்கின்றன, எதிர்க்கட்சிகள். அதேநேரம், ஜாதி, மதங்களை ஒழிக்க வேண்டும்என்று சொல்லிக் கொண்டே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகின்றன.

இன, மொழி, மத, பிரிவினைவாத ஆட்சி செய்து வரும் மாநிலங்கள் இயற்றும் சர்ச்சைக்குரிய மசோதாக்களை கவர்னர்கள் நிறுத்தி வைக்கின்றனர் என்ற நிலையில்,உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசுகள் கை நீட்டிய இடத்தில் கையொப்பமிடும் குமாஸ்தாக்களாக கவர்னர்களை மாற்றி உள்ளது.

தேசம் என்பது மாநிலங்கள் எனும் குதிரைகள் பூட்டியசாரட் வண்டி; வண்டிக்காரனாகிய மத்திய அரசின்சொற்படி குதிரைகள் ஒரே இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணித்தால்தான் தேசத்திற்கு நல்லது. மாறாக, முரண்பட்டு வேறு திசை நோக்கி வண்டியை இழுக்க முயற்சித்தால், வண்டி கவிழக்கூடும்; பயணம் நிறைவு பெறாது.

தேச நலனை கருத்தில் கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என்ற சுயநலத்தில் செயல்படுகின்றன, சில மாநில கட்சிகள்.

இத்தகையோருக்கு கடிவாளம் போடுவது, காலத்தின் கட்டாயம். தேவைப்பட்டால், அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரத்தையும் பயன்படுத்தலாம்!

அப்போதுதான், தேசம் வலுப்பெறும்; வல்லரசாகும்!








      Dinamalar
      Follow us