sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சுயமரியாதை அடைவது எப்போது?

/

சுயமரியாதை அடைவது எப்போது?

சுயமரியாதை அடைவது எப்போது?

சுயமரியாதை அடைவது எப்போது?


PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுயமரியாதை அடைவது எப்போது?

அ.யாழினிபர்வதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சமீபத்தில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண வைபவம் முடிந்த சில நிமிடத்திலேயே, மேடை அலங்காரத்தை கலைத்து, அதிலிருந்த தேங்காய், சோளம், வாழைத்தார், வண்ணப் பூக்களை பொதுமக்கள் பறித்துச் சென்றதை பார்த்த போது, மனம் நொந்து போனது!

கோவிலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் இல்லையே...

அரசியல் கட்சி மாநாடுகளில் தான் இதுபோன்ற அநாகரிக செயல்கள் அரங்கேறின. இப்போது கோவில் விழாவையும் விட்டு வைக்கவில்லை.

இதனால் தான், திராவிட கட்சிகள் பணமும், பரிசும் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றன.

மக்களும், பொங்கலுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை, தீபாவளிக்கு ஏன் முறுக்கு கொடுக்கவில்லை என்று கேட்டு, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குகின்றனர்.

இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?

சுயமரியாதை கழகங்களால், மக்கள் தங்கள் சுயமரியாதையையும், தன்மானத்தையும் காற்றில் பறக்கவிட்டு, அன்னதானத்திற்கு கூட அடித்துக் கொள்ளும் அசிங்கம் தான் தமிழகத்தில் அரங்கேறுகிறது.

இந்த லட்சணத்தில் மக்கள் இருந்தால், ஒரு நல்ல தலைவனை எப்படி தேர்ந்தெடுப்பர்? எந்த கட்சி அதிகமாக இலவசம் கொடுக்கிறது என்ற கணக்கு தானே போடுவர்.

'சிலையும் நீயே, சிற்பமும் நீயே. உன்னை நீயே திருத்திக் கொண்டால், உலகம் தானாக ஒழுங்காகும்' என்ற தத்துவ வரிகளைப் போல், மக்கள் தங்களை சுயமரியாதை உள்ளவர்களாக செதுக்கிக் கொண்டால் தான், தமிழகத்திற்கு விடிவு பிறக்கும்!

***

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'ஒவ்வொருவரும் தம் வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழக வேண்டும்' என்று தமிழக மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் தன் பங்கிற்கு, 'சிக்கனமான பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்ச்சியான சேமிப்பு தனிநபர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றன. பணத்தை சேமிக்காமல் செலவு செய்தால் பயன் தராது, வீணாகிவிடும்' என்று, ஆலோசனை கூறியுள்ளார்.

சிக்கனம் குறித்து இருவரின் அறிவுரைகளையும் கேட்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது. அதேநேரம், மக்களிடம் சிக்கனத்தை வலியுறுத்தும் முதல்வர், போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, தானியங்கள் முளைவிட்டு வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கிறோம், அவரது பேனாவிற்கு கடலில் நினைவு சின்னம் எழுப்புகிறோம் என்று பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யலாமா?

மழைக்காலங்களில் மழைநீர் கடலுக்குள் சென்று வீணாவதை தடுக்கும் விதமாக, ஆறு, ஏரி, குளம், கண்மாய்களை துார்வாரியும், அணைகளை அமைத்தும் நீரை சேமித்து வைக்கும் திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கையை விரித்து விட்டு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதந்தோறும் பல நுாறு கோடி ரூபாயை விரயம் செய்யலாமா?

ஏற்கனவே, அரசு போக்குவரத்து கழகங்கள் நொடிந்து போய், பேருந்துகளை முறையாக பராமரிக்க முடியாத நிலையிலும், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு கூட, அவர்களது ஓய்வூதிய பணப்பலனை அளிக்க முடியாத நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையிலும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற சலுகை அளித்திருப்பதும் சரியா?

மக்களுக்கு சிக்கனத்தை கடைப்பிடிக்க உபதேசிக்கும் முதல்வர், அதை தன் நிர்வாகத்திலும் கடைப்பிடித்து இருந்தால், இன்று தமிழகம், இந்தியாவிலேயே நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக உருவெடுத்து இருக்குமா?

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா முதல்வரே!

ஏன் ஓரவஞ்சனை? எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

வளைகுடா நாடான பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் கபடி பிரிவில், ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கப் பதக்கங்களை வென்று, நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

இந்திய ஆண்கள் கபடி அணியில் விளையாட, தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன் தாஸ் உட்பட இருவர் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அபினேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல், மகளிர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பட்டியலில் இருந்தனர். அதில், சென்னையைச் சேர்ந்த கார்த்திகா ரமேஷ், அணியின் துணைத்தலைவராக இறங்கி விளையாடினார். மற்ற இரண்டு வீராங்கனையருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆடவர், மகளிர் என இரு அணிகளுமே தங்கப் பதக்கம் வென்ற நிலையில், தமிழக முதல்வர் வெற்றி பெற்ற இரு வீரர்களையும் அழைத்து, தலா 25 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்து, போட்டோ எடுத்துக்கொண்டார். அவ்வளவு தான், பெரிதாக எந்த வாழ்த்தும் இல்லை!

இதே போட்டியில் பங்கேற்ற ஹரியானா வீரர்களுக்கு, அம்மாநில அரசு, 3 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

ஆனால், தி.மு.க., அரசு வெறும், 25 லட்சம் ரூபாய் அளித்துள்ளது. இதற்கு பெயர் தான், திராவிட மாடல் அரசின் சமூக நீதியா?

ஹரியானா அரசை பொறுத்தவரை அவர்களுக்கு என்று, மாநில விளையாட்டு கொள்கை உள்ளது. அதன்படி, அவர்கள் மாநிலத்தில் இருந்து தேர்வாகி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா, 6 கோடி ரூபாய், வெள்ளி வென்றால், 4 கோடி, வெண்கலம் வென்றால், 2.5 கோடி ரூபாய் வழங்குகின்றனர்.

அதேபோல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றால், 3 கோடி ரூபாய். வெள்ளி - 1.5 கோடி, வெண்கலம் - 75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல... ஒருவர் தங்கள் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றாலே, 15 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கின்றனர்.

தற்போது, ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் இந்திய கபடி அணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த பரிசுத்தொகை கிடைக்கும்.

இதுபோன்று, தமிழக அரசுக்கு மாநில விளையாட்டு கொள்கை உள்ளதா? அதில் என்ன வரையறை வைத்துள்ளனர்?

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேசுக்கு, 5 கோடி ரூபாய் பரிசு கொடுத்த தமிழக அரசு, கபடியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது.

ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணிற்கு சுண்ணாம்பு வைக்கும் விதமாக ஏன் இந்த ஓரவஞ்சனை?***






      Dinamalar
      Follow us