sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஊழல்வாதிகள் செய்வது மக்களதிகாரமா?

/

ஊழல்வாதிகள் செய்வது மக்களதிகாரமா?

ஊழல்வாதிகள் செய்வது மக்களதிகாரமா?

ஊழல்வாதிகள் செய்வது மக்களதிகாரமா?


PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கக்கூடிய கடுமையான குற்றச் செயலில் ஈடுபட்டு, 30 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யக்கூடிய புதிய சட்ட திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை, 'இண்டியா' கூட்டணியினர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினோ, இதை கடுஞ்சட்டம், கறுப்புச்சட்டம் என்கிறார். பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.,வுமான தேஜஸ்வி யாதவ், 'சர்வாதிகார பிளாக்மெயில் சட்டம்' என்கிறார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'ஓட்டு திருட்டு போல் இது ஒரு சட்ட திருட்டு' என்கிறார்.

ஆனால், காங்., முன்னாள் தலைவர் ராகுல் மட்டும் இச்சட்ட திருத்தம் குறித்து மூச்சு விடவில்லை. காரணம், இம்மசோதா சட்டமானால், அதில் அதிகம் பாதிக்கப்படுவது தாமாத் தான் இருப்போம் என்பது தெரிந்து, இதை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் மவுனம் காக்கிறார்.

இதேபோல் கடந்த காங்., ஆட்சியில் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், கிரிமினல்கள் மற்றும் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நுழைவதை தடுக்கும் வகையிலான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது, 'முட்டாள்தனமான சட்டத்திருத்தம்' என்று கூறி, அதை கிழித்து மன்மோகன்சிங் முகத்தில் எறிந்தவர் தான் இந்த ராகுல்.

ஏனெனில், அப்போதைய சட்ட திருத்தம் குற்றப் பின்னணியுடைய அரசியல் கிரிமினல்கள் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தாலே, அடுத்த ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை, இன்று சிறு மாற்றத்துடன் பா.ஜ., அரசு தாக்கல் செய்துள்ளது.

அதனால் ராகுலுக்கு தெரியும் இப்படிப்பட்ட சட்ட திருத்தங்கள் பெரும்பாலும் அவரைச் சார்ந்தவர்களையே பெரிதும் பாதிக்கும் என்று!

ஆனால், மோடிக்கு தெரிந்ததெல்லாம் மக்கள் நலன் பேணுதல் ஒன்றே!

அதனால்தான், 'பிரதமரே ஆனாலும் குற்றச் செயலில் ஈடுபட்டால் தண்டிக்கப்பட வேண்டும்' என, சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் போய் விடக்கூடாது என்ற உயரிய நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த பதவி பறிப்பு மசோதா, அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும்.

ஏனெனில், பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., ஆட்சிதான் நடக்கிறது. இச்சட்ட திருத்தம் அமலானால் பாதிக்கப் படுவது அவர்களும்தான்.

அவர்களே இதை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் போது, எதிர்க்கட்சியினர் தான், 'மூளி' என்று எங்கோ, எவரையோ பார்த்து சொன்னால், தங்கள் மூஞ்சியை தடவி பார்த்துக் கொள்கின்றனர்.

ஊழல்வாதிகளின் பதவியை பறிக்க வேண்டும் என்று சொன்னால், சர்வாதிகாரம் என்று அலறுகின்றனர். நேர்மையாக ஓர் அரசு இயங்க வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் என்றால், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, தமிழக அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றவர்கள் ஊழல் செய்து சிறையில் இருந்த நிலையிலும் பதவியில் நீடித்தனரே... அது என்ன மக்களதிகாரமா?



சூதாட்டத்திற்கு தடை! எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாழ்க்கையில் எந்த சிரமமும் படாமல், எளிதாக பணம் சம்பாதிக்க ஆசை கொண்டு, தவறான வழிகளில் போகும் ஓர் இளம் தலைமுறை தமிழகத்தில் ஓசைப்படாமல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று தான், 'ஆன் லைன்' விளையாட்டுகள்!

முன்பெல்லாம் குதிரைப் பந்தயம், காசு வைத்து சீட்டாடும் பழக்கம் உள்ளவர்களை, 'சூதாடிகள்' என்று பட்டம் கொடுத்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். வீட்டில் உள்ளவர்களோ அவர்களை எப்படி திருத்தலாம் என்று முயன்று கொண்டிருப்பர்.

ஆனால் இப்போது எல்லாமே, 'ஆன் லைன்' என்று ஆகிவிட்டதால் எவரெல்லாம் சூதாடுகின்றனர் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

எனக்கு தெரிந்த குடும்பத்தில், பையன் நன்றாக படிக்கிறான் என்பதால், அவனது பெற்றோர் கட்டட வேலை பார்த்து, சக்திக்கு மீறி செலவழித்து மேல் படிப்பு படிக்க வைத்தனர். அவனும் நன்றாக படித்து நல்ல வேலையிலும் அமர்ந்து விட்டான். பெற்றோர் பூரித்துப் போயிருந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை, காவல் துறை அவர்கள் வீடு தேடி வந்து சொன்ன விஷயத்தில்!

அவர்கள் மகன் வங்கியில் ஆன்லைனில் கடன் வாங்கி, ஆன்லைன் சூதாட்டம் ஆடி, லட்சங்களில் பணத்தை இழந்து விட்டான்.

வங்கிக் கடனைத் திரும்ப செலுத்தாததால், அவர்கள் காவல்துறையினர் வாயிலாக நடவடிக்கை எடுத்து விட்டனர். நன்றாகப் படித்து, நல்லொழுக்கத்துடன் விளங்கிய தங்களுடைய மகன், இப்படி புத்தி கெட்டுப் போனானே என்று மனம் நொந்து, கடனை அடைக்க வழி தெரியாமல் உள்ளனர்.

'சுலபமாக லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம்' என்று ஆசைகாட்டும் விளம்பரங்களும், நண்பர்களின் துாண்டுதலும் ஒரு குடும்பத்தையே தெருவிற்கு கொண்டு வந்து விட்டது.

இதுபோன்று எத்தனையோ குடும்பங்கள், 'ஆன் லைன்' சூதாட்டத்தால், நடுத்தெருவிற்கு வந்து விட்டன.

இந்நிலையில், 'ஆன் லைன்' சூதாட்ட விளையாட்டுகளை தடுக்கும் மசோதாவைக் கொண்டு வந்ததின் வாயிலாக, லட்சோப லட்சம் குடும்பங்களின் வயிற்றில் மத்திய அரசு பாலை வார்த்துள்ளது!

*******

ஆம்புலன்சிலும் அக்கப்போரா? ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல் களத்தில் தற்போது ஆம்புலன்ஸ் சேவையும் பேசும் பொருள் ஆகிவிட்டது. முதலாவதாக, ஓர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் எப்போதுமே நோயாளி படுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. காரணம், ஒரு நோயாளியை ஏற்றிச் செல்வதற்கோ அல்லது நோயாளியை இறக்கி விட்ட பிறகோ ஆம்புலன்ஸ் செல்லும் போது, அவ்வண்டியில் நோயாளி எப்படி இருக்க முடியும்?

சாலையில் வரும் ஆம்புலன்ஸ், அங்கு நடக்கும் அரசியல் கூட்டத்தை சீர்குலைக்க வருவதாக எதன் அடிப்படையில் அ.தி.மு.க., மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர் என்பது புரியவில்லை.

சாலைகளை மறித்து பரப்புரை செய்வதால், பொதுமக்கள் பல வகையிலும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதே கசப்பான உண்மை. இந்நிலையில், அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் சென்றுவர இடைஞ்சல் செய்வதுடன், 'ஆம்புலன்ஸ் டிரைவர், அதே ஆம்புலன்சில் நோயாளியாக அனுப்பி வைக்கப்படுவார்' என்று பேட்டை ரவுடியைப் போல் முன்னாள் முதல்வர் பழனிசாமி மிரட்டுவது சரியா?

இதுபோன்ற மிரட்டல் தொனி, மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தும் என்பதை பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும்!

*******






      Dinamalar
      Follow us