/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
/
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'சமூக நீதிக்காகவும், கொள்கைக்காகவும் போராடிய இயக்கம், தி.மு.க., அப்போது அன்புமணி பிறக்கவேயில்லை. 2004ல் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை பா.ம.க., வுக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியதும், அன்புமணியை கை காட்டியது கருணாநிதி தான். அப்போது தி.மு.க.,வின் தோள்கள் தான் அவரை துாக்கின. அன்புமணிக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. இந்தப் பக்கம் போனால் அ.தி.மு.க., அந்த பக்கம் போனால், தி.மு.க.,வின் தோள் மீது தான் அவர் சவாரி செய்ய வேண்டும்...' என்று கூறியுள்ளார், தமிழக விவசாய துறை அமைச்சர் பன்னீர்செல்வம்.
தி.மு.க., என்றொரு கட்சி உருவாகும் முன்பே, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சமூக நீதிக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. என்னவோ தி.மு.க., தான் சமூக நீதிக்கான போராட்டத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொணடது போல் பேசுவது அமைச்சரின் பொது விஷயங்கள் குறித்த அறிவின்மையையே காட்டுகிறது.
நீதிக்கட்சி ஆட்சியில், 1921ல் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 1927ல் சென்னை மாகாண முதல்வர் சுப்பராயன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பின் தான் சமூக நீதிக்கான இடப்பங்கீடு சாத்தியமானது.
அதன்படி, சென்னை மாகாண அரசு பணிகளில், சமூக நீதி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அக்கால கட்டத்தில் அன்புமணி மட்டுமல்ல, அமைச்சர் பன்னீர்செல்வமும் பிறந்திருக்கவில்லை.
இந்த உண்மை தெரியாமல், தி.மு.க., தான் சமூக நீதிக்காக போராடிய இயக்கம் என்று கதையளந்து கொண்டிருக்கிறார், அமைச்சர்.
கடந்த 2004ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலிலும், 2006ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்த போது அக்கட்சிக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.
பா.ம.க., வின் தயவு தி.மு.க.,வுக்கு தேவையாக இருந்ததால், கூட்டணி கோட்பாட்டின்படி, அன்புமணியை மத்திய அமைச்சராக்க கருணாநிதி சம்மதித்தார்.
பா.ம.க.,விற்கு ஓட்டு சதவீதம் இல்லையென்றால், இதற்கு கருணாநிதி உடன்பட்டிருப்பாரா?
அப்படிப் பார்த்தால், அன்று பா.ம.க.,வின் தோள்களில் ஏறித்தான் தி.மு.க., வெற்றி பெற்றது என்று கூட கூறலாம் தானே!
கடந்த 1967 முதல் இப்போது வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., தனித்து நின்று போட்டியிட்டது கிடையாது. பிற கட்சிகளின் முதுகில் எறி சவாரி செய்து தான் ஆட்சி நடத்தியது, நடத்தி வருகிறது.
எனவே, 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், முட்டம் கிருஷ்ணமூர்த்தி என்ற தன் தகப்பனார் செய்த கைங்கர்யத்தினால் தான், பன்னீர்செல்வம் இந்த பதவியில் அமர்ந்துள்ளார் என்பதும், அவருக்கென்று எந்த ஒரிஜினாலிட்டியும் கிடையாது என்பதையும் அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும்!
****************
விஜய் நடிகராகவே இருக்கலாம்! கே.வி.ராமதாஸ், சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்,
ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் இந்திய
விமானப்படை நிகழ்த்திய விமான சாகச நிகழ்ச்சி, பெங்களூரு கிரிக்கெட்
கொண்டாட்ட நிகழ்ச்சி என, இவை எல்லாவற்றிலும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட
உயிரிழப்புகள், கூட்டத்தை ஏற்பாடு செய்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி
இருக்க வேண்டும்.
ஆனால், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?
ஒரு கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், 41 உயிர்கள் பலியாகி உள்ளன.
மதுரையில் ஹிந்து முன்னணியினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினர். எவ்வளவு
முன்னேற்பாடுகள்... குடிநீர், கழிப்பறை, உணவு, குப்பை அகற்றுதல் என்று
எத்தனை திட்டமிடல்.
நிர்வாகிகளே களத்தில் இறங்கி தொண்டர்களுக்கு
வழிகாட்ட, மக்கள் அவ்வளவு கட்டுக்கோப்பாக மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு
முடிந்தபின், மைதானத்தில் சிறு குப்பை கூளம் இல்லை; அத்தனை சுத்தம்!
ஆனால், நடிகர் விஜயின் ஒவ்வொரு மாநாடும் எந்த லட்சணத்தில் நடந்து முடிந்தது என்பது தமிழகம் அறிந்த கதை!
மதுரையில் மாநாடு நடந்து முடிந்த பின், அந்த மைதானமே போர்க்களம் போல்
காட்சியளித்தது. சேர்கள் உடைக்கப்பட்டு, எங்கும் உணவு, தண்ணீர் பாட்டில்
குப்பைகள் என்று பார்க்கவே அவ்வளவு அநாகரிகமாக இருந்தது.
இதோ... கரூரில் ஒரு கூட்டத்தை முறையாக நடத்தும் திறன் இல்லாமல், 41 பேர்களை காவு வாங்கியுள்ளனர்.
ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்த முடியாத விஜயால், ஒரு நாட்டை எப்படி வழி நடத்த முடியும்?
அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கலாம்; ஆனால், ஆட்களை வைத்து நிர்வகிக்கக் கூட தெரியாத இவர், முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?
கட்சி நடத்தவோ, ஆட்சி செய்யவோ விஜய் லாயக்கற்றவர்; அவர் நடிகராக இருப்பதே அவருக்கும், தமிழகத்திற்கும் நல்லது!
lll காமராஜரை களங்கப் படுத்தாதீர்கள்! ஆர்.ரங்கசாமி, சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால்
தான், காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும்' என்கிறார், பெரம்பலுார் மாவட்ட
காங்., தலைவர் சுரேஷ்.
கடந்த 11 ஆண்டுகளாகத் தான் மத்தியிலும், பல மாநிலங்களிலும் பா.ஜ.,ஆட்சியில் உள்ளது.
அதற்கு முன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும், பல மாநிலங்களிலும்
காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி, அதிகாரத்தில் இருந்தது. அப்போது அங்கெல்லாம்
காமராஜர் ஆட்சியை காங்., ஏன் உருவாக்கவில்லை?
அவருடைய ஆட்சி
காலத்தில் கட்டப்பட்ட மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, சாத்தனுார் போன்ற பல
அணைக்கட்டுக்கள் இன்றளவும் கூட சிறிதும் சேதமில்லாமல், கம்பீரமாக
நிமிர்ந்து நிற்கின்றன.
ஆனால், அவரை துாற்றி, அவர் மீது இல்லாத
பொல்லாத பழிகளை சுமத்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கழகத்தினர் கட்டும் எந்த
கட்டுமானமும், நுாறு நாட்களை நிறைவு செய்வதில்லை. அதற்குள் பல்லிளித்து
விடுகின்றன அல்லது கட்டுமானமே இடிந்து தரைமட்டமாகி விடுகிறது. காரணம்
கமிஷன், கலெக் ஷன் மற்றும் கரப்ஷன்!
அப்படிப்பட்ட ஆட்சியைத் தான்,
தமிழக காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, 'இதுதான் காமராஜர் ஆட்சி'
என்று சிலாகித்து போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்றைய கள நிலவரப்படி, எந்தக் கட்சியையும் நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை; இலவசங்களை நம்பித் தான் வாக்களிக்கின்றனர்.
எனவே, ஆட்சி அதிகாரத்திற்கு காங்கிரஸ் கட்சியால் இன்னும் 50 ஆண்டுகள்
ஆனாலும் வர முடியாது. அதனால், காமராஜரை வம்புக்கு இழுத்து, அவரது
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்!
lll