PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

கொள்கையே விளம்பரமா?
எஸ்.ராமசந்திரன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் எவருடைய ஆட்சியில், அதிக மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்பட்டன என்று இரு திராவிட கட்சிகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனவே தவிர, கட்டமைப்பு, கல்வியின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற
விஷயங்கள் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை...' என்று கவலை தெரிவித்திருந்தார், இப்பகுதியில் கடிதம் எழுதியிருந்த மருத்துவ கல்லுாரி பேராசிரியர் ஒருவர். தேசிய மருத்துவ ஆணையம் இதுபோன்ற குறைகளை சுட்டிக்காட்டி, இங்குள்ள, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 34 கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அதில், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியும் ஒன்று என்றும் கூறியிருந்தார் வாசகர்.
சாலை மார்க்கமாக செல்லத் தயங்கி, ரயில் வாயிலாக வேலுாரை அடைந்து, அங்கு, விஜய் நடித்த, பைரவா பட பாணியில் ஒரு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு திரும்பியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். பைரவா பட பாணி என்றால், கட்டடம் இருக்கும்; ஆனால், அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இருக்காது. டாக்டர்கள், செவிலியர், டெக்னீஷியன்கள், துப்புரவு பணியாளர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள்.
வேலுாரில் முதல்வரால் திறக்கப்பட்ட மருத்துவமனை கூட இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. இப்படி தினசரி ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்தோ, அறிவிப்பு வெளியானபடியோ தான் இருக்கிறது. அதேநேரம், அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டதா அல்லது அடிக்கல் நாட்டி, கல்வெட்டில் பெயர் பொறித்தவுடன் காலாவதி ஆகி விட்டதா, அதன் செயல்பாடு என்ன என, எதுவும் தெரிய வருவது இல்லை.
திட்டத்தை துவக்கி வைத்தால் போதும்; கல்வெட்டில் பெயர் இடம்பெற்று விடும். அப்புறம் அது செயல்பாட்டுக்கு வந்தால் என்ன, வராமல் போனால் என்ன என்பது போல், பல திட்டங்கள் துவங்கப்படுகின்றன.
முதல்வரை பொருத்தவரை அவர் பெயர் கல்வெட்டில் வர வேண்டும். அதன்படி இனி, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு தெருவிற்கும் கூட புதிதாக வண்ணம் தீட்டி, ஒரு கல்வெட்டை நிறுவி, அதையும் கூட திறந்து வைப்பார் போலும்!
அதுசரி... திராவிட மாடல் ஆட்சியின்கொள்கையே விளம்பரம் மட்டும் தானே!
இணைய வழி பணம் செலுத்த வசதி வேண்டும்!
வெற்றி நிலவன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது, ரேஷன் கடைகளில் பில் போடும் கருவியுடன், பொருட்களை எடைபோடும் தராசையும் இணைத்துள்ளனர். நல்ல நோக்கம் தான். ஆனால், இதனால் மக்களுக்கு அதிக கால விரயம் மட்டுமே ஏற்படுகிறது!
எடை தராசில், 20 கிலோ அரிசி எனில், 20 கிலோ பாக்கெட்டையும், 2 கிலோ சர்க்கரை என்றால், 2 கிலோ சர்க்கரை பாக்கெட்டை அட்டைப்பெட்டியுடன் துாக்கி வைக்கின்றனர். ஆனாலும், பொருட்களின் எடை குறைவு தொடர்கதையாகத் தான் இருக்கிறது.
ரேஷன் கடைகளில் இணைய வழி பணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். இதனால், சில்லரை தட்டுப்பாடு மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குவது தவிர்க்கப்படும். தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?
சனாதனத்திற்கு கிடைத்த வெற்றி!
வா.தியாகராஜன், கல்பாக்கம்,செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு, பிற அரசியல் கட்சியினருக்கு சிறந்த முன்னுதாரணமாக
திகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம்பேர் பங்கேற்ற நிலையில், ஒவ்வொருவரும் கட்டுக்கோப்பாய் ஒருங்கிணைந்து, தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை அடுக்கி வைத்து, உபயோகப்படுத்திய பொருட்களை அதற்குரிய
பைகளில் போட்டு என, ஒரு மாநாடு நடந்த சுவடே இல்லாமல் முடித்திருப்பது இதுவரை தமிழக வரலாற்றில் கண்டிராத காட்சி!அத்துடன், பொதுவாக கூட்டம், ஆர்ப்பாட்டம் என்றாலே காணும் இடமெல்லாம் போலீசார் தான் தென்படுவர். இதில் மாநாடு என்றால் கேட்கவும் வேண்டாம்... காவல்துறையின் கட்டுப்பாடு அதிகம் இருக்கும். ஆனால், இம்மாநாட்டில் பெரிதாக போலீசார் இல்லை. ஆனாலும் எந்தவித அசம்பாவிதமோ, பொருட்சேதமோ, உயிர்சேதமோ இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.
இதுவே முருக பக்தர்களுக்கு கிடைத்த சனாதன வெற்றி!சிறுத்தை சிங்கிளாக களம் காணுமா?சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என கணக்கு போடாதீர்கள். வி.சி., 234 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான கட்சியாகவும், வலிமையாகவும் உள்ளது. இதை ஆணவத்தில் சொல்லவில்லை; சமூக மாற்றத்தின் அடிப்படையில் சொல்கிறேன்...' என்று கூறியுள்ளார், வி.சி., தலைவர்
திருமாவளவன். இவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருப்பவர், கூடுதல் ஒன்றிரண்டு சீட்டுக்காக தி.மு.க.,விடம் ஏன் தொங்க வேண்டும்... கூட்டணியில் இருந்து வெளியேறி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாமே!
குறைந்தது, 120 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று, தான் விரும்பும் ஆட்சியை நடத்தலாம் அல்லவா!அதேநேரம், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற திருமாவளவனின் விருப்பத்தை அவரது தொண்டர்கள் விரும்புவரா என்று தெரியவில்லை. காரணம், சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாநாடுகளின்போது டாஸ்மாக் கடைகளின் விற்பனையையும், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு நடந்த நாட்களின் விற்பனை விபரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே, திருமாவின் விருப்பத்திற்கு வி.சி., தொண்டர்கள் உடன்படுவது சந்தேகம்.
ஆனாலும், இவ்வளவுபலம் வாய்ந்த கட்சி, கூட்டணியில் இருந்து ஏன் தன் சுயத்தை தொலைக்க வேண்டும்? தனித்து நின்று தன் பலத்தை நிரூபிக்கலாமே!சிறுத்தை, 'சிங்கிளா' களம் காணுமா?