'மூன்று மாத நோட்டீஸ்' விதிமுறை எம்.எல்.ஏ.,க்களுக்கு கிடையாதா?
'மூன்று மாத நோட்டீஸ்' விதிமுறை எம்.எல்.ஏ.,க்களுக்கு கிடையாதா?
PUBLISHED ON : மே 28, 2026 01:32 AM

எஸ்.அழகர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், இதுவரை காணாத காட்சிகள் எல்லாம் அரங்கேறி வருகின்றன.
தங்களுக்கு இவர்களால் நல்லது நடக்கும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், எந்த கிளையில் அதிக கனிகள் உள்ளனவோ, அந்த கிளைகளுக்கு தாவும் மந்திகள் போன்று, தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் கட்சிக்கு தாவிக் கொண்டு இருக்கின்றனர்.
அதுவும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதத்தில் உள்ள மையின் ஈரம் காயும் முன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
'கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க சுணக்கம் காட்டிய சபாநாயகர், இவர்கள் கொடுத்த ராஜினாமாவை உடனே ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஒரு தொகுதியில் தேர்தல் நடத்தி, ஒரு நபரை எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் உட்கார வைப்பது சாதாரண விஷயமா... மக்களின் வரிப்பணமும், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பும் அல்லவா இதில் அடங்கியுள்ளது!
இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள், இவர்கள் ஏற்கனவே சார்ந்திருந்த, அ.தி.மு.க.,வுக்காக தான் ஓட்டு போட்டு உள்ளனரே தவிர, த.வெ.க.,வுக்கு அல்ல; த.வெ.க.,வுக்கு ஓட்டு போட நினைத்திருந்தால், தேர்தல் நாளில், அக்கட்சிக்கே ஓட்டு போட்டிருப்பரே!
இவ்விஷயம் எதையுமே கவனத்தில் கொள்ளாமல், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக கட்சி தாவுகின்றனர்.
மேலும், எம்.எல்.ஏ., என்பவரும், அரசு ஊதியம் வாங்கும் பணியாளர் தானே? ஓர் அரசு பணியாளர், தன் பதவியை ராஜினாமா செய்ய விரும்பினால், குறைந்தது, மூன்று மாதத்திற்கு முன், அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதன்பின் தான் அவர் ராஜினாமா செய்ய முடியும்.
அவரது ராஜினாமா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால், மறுபடியும் அதே பதவிக்கு, அவர் வரவே முடியாது.
ஆனால், எம்.எல்.ஏ.,க்களோ, தாங்கள் சார்ந்திருந்த கட்சியிலிருந்து விலகி, எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, தாங்கள் புதிதாக சேர்ந்திருக்கும் கட்சியில், மறுபடியும் நிற்கப் போகின்றனராம்!
தங்கள் சுயலாபத்திற்காக, அரசின் பணத்தையும், அரசு பணியாளர்களின் உழைப்பையும் வீணாக்கும் இவர்கள் மீது, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓர் அரசு பணியாளரால், அரசுக்கு பண இழப்பு ஏற்படும்போது, அந்த இழப்பை, உரிய வட்டித்தொகையுடன் அரசு வசூல் செய்கிறது. அந்த தொகையை செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், பணியில் இருந்து ஓய்வு பெறமுடியாது; தன் ஓய்வு கால பணப் பயன்களையும் பெற முடியாது.
அவ்வகையில், அரசு ஊதியம் வாங்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கும் இந்த விதி பொருந்தும் தானே!
எனவே, இடைத்தேர்தல் வாயிலாக பண இழப்பிற்கு காரணமான, எம்.எல். ஏ.,க்களிடம் இருந்து, இடைத்தேர்தலுக்கான செலவை இரு மடங்காக வசூல் செய்ய வேண்டும்.
ராஜினாமா செய்த அரசு பணியாளார், எப்படி மீண்டும் அதே பதவிக்கு வர முடியாதோ, அதுபோல் பதவியை ராஜினாமா செய்த, எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.,யோ, மறுபடியும் அதே பதவிக்கு போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும்!
lll
