/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
இதுதான், தி.மு.க.,வின் சமூகநீதியா?
/
இதுதான், தி.மு.க.,வின் சமூகநீதியா?
PUBLISHED ON : நவ 23, 2025 12:00 AM

கே.குருசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கனமழை காரணமாக, ஈரப்பதம் அதிகமான நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் குரல், பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை; விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை; கண்ணீர் ஏன் தெரியவில்லை' என, அடுக்குத்தொடரில் அங்கலாய்த்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் மற்றும் உணவு கிடங்குகள் அமைக்க, 309 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தி.மு.க., அரசு கணக்கு காட்டியுள்ளதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே...
அந்த சேமிப்பு, உணவு கிடங்குகள் எங்கே கட்டப்பட்டுள்ளன? தமிழகத்திலா, வெளிநாட்டிலா?
கடந்தாண்டுகளில் தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று, ஈரப்பத அளவிற்கான தளர்வை பலமுறை மத்திய அரசு வழங்கியுள்ளதாக முதல்வரே கூறியுள்ளார்.
அப்படியிருக்கும்போது, நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டாமல், அதிலும் ஊழல் செய்து, விவசாயிகளை வஞ்சித்து விட்டு, இப்போது அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது யாரை ஏமாற்ற?
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டும், தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த மூன்று மாதங்களாக துப்புரவு பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகின்றனரே... அவர்கள் கண்ணீர் குரல் முதல்வரின் காதுகளை எட்டவில்லையா?
அவர்கள் வேலைக்குரிய ஊதியத்தைத் தான் கேட்டனர். சோறு போடுங்கள் என்று போராடவில்லை.
ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது... சோறு போடுகிறேன் பேர்வழி என்று, கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவை கொண்டு போய் கொடுத்துள்ளனர்.
இதுதான் திராவிட மாடலின் சமூக நீதியா?
குப்பை அள்ளுபவர்கள் தானே என்ற அலட்சியம் அல்லவா, இந்த இழிசெயலை செய்ய துாண்டியுள்ளது. அவர்களை சக மனிதர்களாக நினைத்திருந்தால், இந்த அவமானம் அவர்களுக்கு நடந்திருக்குமா?
இந்த இழிசெயலுக்கு காரணமான ஊழியர்கள், அதிகாரிகள் மீது முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்து சமூகநீதியை நிலை நாட்டி விட்டார் என்று, இப்போது விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்?
lll
அரசு கவனம் செலுத்துமா? ரா.தங்கசாமி, அகஸ்தியர்பட்டி, நெல்லை
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் நாளுக்கு
நாள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், காவல் துறையில்
போதுமான பணியாளர்கள் இல்லாததே!
சட்டம் - ஒழுங்கை பராமரிக்க தேவையான பணியாளர்கள் இருந்தும், இரவு ரோந்து பணிக்கு செல்வோர் அனைத்து இடங்களுக்கும் செல்வது இல்லை.
இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினால், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் கண்டு, குற்றச் செயல்களை தடுக்க முடியும்.
அதேபோன்று குற்றப்புலனாய்வு பிரிவிலுள்ள பணியாளர்களின் பணி, குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தயாரிப்பது!
தற்சமயம், அனைத்து துறைகளும் கணினிமயமானதால், கணினியறிவு படைத்தவர்களை இப்பணிகளில் கூடுதலாக நியமனம் செய்வது அவசியம்!
மேலும், மாவட்ட அளவில் உள்ள பழைய குற்றவாளிகள் குறித்த குற்ற
ஆவணப்பதிவுகளை பாதுகாக்க வேண்டும். இதன்வாயிலாக, குற்றவாளியை எளிதாக
அடையாளம் கண்டு,குற்றங்களை தடுக்க முடியும்.
அதேபோன்று,
போக்குவரத்து காவல் பிரிவில் முன்னாள் ராணுவத்தினரை அதிக அளவில்
நியமிப்பதன் வாயிலாக, போதை பொருள் உட்பட பல கடத்தல்களை தடுக்க முடியும்.
மேலும், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சமூக, பொருளாதார குற்றங்கள்,
அதற்குரிய தண்டனைகள் குறித்து பாடத்திட்டம் இருந்தால், குற்றங்களுங்கான
தண்டனைகளை மாணவர்கள் அறிந்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறையும்.
அரசு இதில் கவனம் செலுத்தினால், அனைவருக்கும் நன்மை பயக்குமே!
lll
எதிர்க்கட்சிகளின் கேலிக் கூத்து! ஜி.சூர்யநாராயணன், விழுப் புரத்தில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: -- காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்
ஏகப்பட்ட ஊழல்களும், நிதி முறைகேடுகளும், கணக்கற்ற குண்டுவெடிப்புகளும்
பேசுபொருளாக இருந்தன. அதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தனர்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்!
உட்கட்டமைப்பு, பாதுகாப்பு,
நிர்வாகம் என்ற அனைத்து விஷயங்களிலும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல
முடியாத வகையில், பா.ஜ., அரசு உள்ளது.
இதனால், அரசியல் செய்ய
வழியில்லாமல், மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை
எதிர்ப்பதன் வாயிலாக மக்கள் மத்தியில் தங்கள் இருப்பைக் காட்டிக்
கொள்கின்றன, எதிர்க்கட்சிகள்.
அவ்வகையில், சி.ஏ.ஏ., எனப்படும்
குடியுரிமை திருத்த சட்டம், என். ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள்
பதிவேடு, மற்றும் ஜி.எஸ்.டி., போன்றவற்றை கண்மூடித்தனமாக எதிர்த்து
வந்தவர்கள், தற்போது, எஸ்.ஐ.ஆரை எதிர்க்கின்றனர்.
இன்று,
எஸ்.ஐ.ஆரை எதிர்க்க என்ன கட்டுக் க தையை கூறுகின்றனரோ, அதே கதையை தான்,
குடியுரிமை திருத்த சட்டம் வந்தபோதும், இஸ்லாமியர்களின் குடியுரிமை
பறிக்கப்படும் என்று கதை கட்டினர்.
இவர்களது பொய்யை நம்பி, இஸ்லாமிய மக்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
இதோ, சி.ஏ.ஏ., சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி
விட்டன... அன்று குடியுரிமை பறிக்கப்படும் என்று கூக்குரல்
எழுப்பியவர்களும், போராடியவர்களும், இன்று தங்கள் மனச்சாட்சியை தொட்டு
சொல்லட்டும்... எத்தனை இஸ்லாமியருக்கு குடியுரிமை பறிக்கப் பட்டுள்ளது
என்று!
இதேபோன்று தான், 2019ல் பார்லிமென்ட் தேர்தலின் போது,
'மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் மூடப்பட்டுவிடும்' என்ற
பொய்யை கட்டவிழ்த்து விட்டனர்.
எங்கேனும், பா.ஜ., அரசு ரேஷன் கடைகளை மூடியுள்ளதா?
காங்., - தி.மு.க., ஓட்டுகளை நீக்கி, பா.ஜ., கூட்டணி ஓட்டுகளை அதிகரிக்கவே
வாக்காளர் சீர்திருத்தம் செய்யப்படுவதாக கூறி, இப்போது எஸ்.ஐ.ஆரை
எதிர்க்கின்றனர்.
கட்சிக்கரை போட்ட வேட்டிகளை தவிர்த்து,
மற்றவர்கள் எந்தக் கட்சியினர் என்பதை வெளிப்படையாக அறிய முடியாது.
அப்படியிருக்கும்போது, 'நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டு செலுத்துவீர்கள்'
என்று கேட்டு, அவரது ஓட்டை எப்படி நீக்க முடியும்?
கட்டுக்கதைகளுக்கும் ஓர் அளவு இல்லையா?
lll

